
கார்ப்பரேட் கரங்கள் எதையும் வளைப்பதற்கு நீளக்கூடியவை – நீதியைக் கூட. இதற்கு ‘ஐ விட்னஸ்’ சாட்சியாகப் பல வழக்குகள், தீர்ப்புகள் இருக்கின்றன. தற்போது வந்துள்ள ஒரு நீதிமன்றத் தடையாணை, “இவ்வளவு அப்பட்டமாகவா” என்ற திகைப்பை ஏற்படுத்துகிறது. கார்ப்பரேட் நலனும் அரசு விசுவாசமும் பின்னிப் பிணைந்திருப்பதையும் அது காட்டுகிறது. உள்நோக்கம் கற்பிக்காமல் அந்த ஆணையை விசாரிக்கலாம்.
தலைநகர் டெல்லியின் ரோகிணி வட்டாரத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றம், அதானி எண்டர்பிரைசஸ் லிமிட்டெட் (ஏஇஎல்) தாக்கல் செய்த அவதூறு வழக்கில் ஓர் இடைக்கால ஆணை பிறப்பித்துள்ளது. குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்களும் வலைத்தளப் பதிவாளர்களும் சமூகச் செயல்பாட்டாளர்களும் அந்த நிறுவனம் குறித்த “அவதூறான” செய்திகள், கட்டுரைகள், சமூக ஊடகப் பதிவுகள் உள்ளிட்டவற்றை அகற்ற வேண்டும் என்பதே அந்த இடைக்கால ஆணை.
அதைத் தொடர்ந்து ஒன்றிய அரசின் தகவல் – ஒலிபரப்பு அமைச்சகம் பல்வேறு ஊடக நிறுவனங்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இணையத்தள உள்ளடக்கங்களை உருவாக்குவோருக்கும் “பதிவு நீக்க ஆணை” (டேக் டவுன் நோட்டீஸ்) அனுப்பியுள்ளது. அதானி குழுமம் தொடர்பான நூற்றுக் கணக்கான யூடியூப் காணொளிகள், இன்ஸ்டாகிராம் பதிவுகள் உள்ளிட்டவற்றை அவர்கள் நீக்கிவிட வேண்டும் என்று அந்த ஆணை கூறுகின்றன.
உரிமையியல் நீதிமன்றத்தின் மூத்த நடுவர் அனுஜ் குமார் சிங் செப்டம்பர் 6 அன்று இந்த “எக்ஸ்பார்ட்டி அட் இன்டரிம் இன்ஜங்ஸன்” ஆணையைப் பிறப்பித்தார். அதாவது, தொடக்க நிலையில் எதிர்த் தரப்பின் வாதங்களைக் கேட்காமலே, புகார் செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர்களை விசாரிக்காமலே இந்த இடைக்கால ஆணை அறிவிக்கப்பட்டது.
அதானி குழுமம், தங்களுக்கு எதிராகத் தவறான, அவதூறான தகவல்களைப் பரப்பியதாகக் கூறி, பரஞ்ஜோய் குஹா தாகுர்தா உள்ளிட்ட ஒன்பது பத்திரிகையாளர்கள் மீதும், சில இணையதளங்கள் மீதும் வழக்குத் தொடுத்தது. நிறுவனத்தின் வர்த்தக நடைமுறைகள், கணக்குத் தணிக்கைகள் ஆகியவையும், அரசியல் தொடர்புகள் பற்றியுமான செய்திக் கட்டுரைகள் அவதூறு பொழிவதாக இருக்கின்றன என்பதே குற்றச்சாட்டு.
வழக்கை விசாரித்து வரும் நடுவரின் இடைக்கால ஆணையின்படி, இதில் தொடர்புள்ள பத்திரிகையாளர்கள் தங்கள் கட்டுரைகளையும் சமூக ஊடகப் பதிவுகளில் அவதூறு ஏற்படுத்தும் உள்ளடக்கங்களையும் நீக்க வேண்டும். உள்ளடக்கத்தை நீக்குவது சாத்தியமில்லை என்றால், ஐந்து நாட்களுக்குள் பதிவுகளையே அகற்ற வேண்டும்.
மேலும், அடுத்த விசாரணை வரையில், அதானி எண்டர்பிரைசஸ் பற்றிய “சரிபார்க்கப்படாத, ஆதாரமற்ற, அல்லது முதல் பார்வையிலேயே அவதூறான” உள்ளடக்கத்தை வெளியிட வேண்டாம் என்றும் அவர்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. சரிபார்க்கப்படாத அறிக்கைகள், “பில்லியன் கணக்கான முதலீட்டாளர்களின் பணத்தை அழித்து, சந்தையில் பீதியை ஏற்படுத்தி, நிறுவனத்தின் உலகளாவிய நற்பெயருக்கு உலக அளவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடும்,” என்று அந்த ஆணை கூறுகிறது (லைவ் லா, செப்.7).
நிலையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய இந்த இடைக்கால ஆணையை எதிர்த்து ஊடகவியலாளர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். தங்களது செய்திக் கட்டுரைகள் அல்லது பதிவுகளில் குறிப்பிட்ட எந்த உள்ளடக்கங்கள் அவதூறாக இருக்கின்றன என்று நீதிமன்றம் தெரிவிக்கவில்லை, ஒட்டுமொத்தமாக ஒரு தடையை விதித்திருப்பது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என்று அவர்கள் மேல்முறையீட்டில் கூறியுள்ளனர். அடுத்த கட்ட விசாரணைகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த ஆணை ஊடகங்களின் சுதந்திரம், மக்களின் உண்மையறியும் உரிமை எனப் பல்வேறு கோணங்களிலும் விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர் அமைப்புகளிடமிருந்து இவ்வகை ஆணைகளும் அரசாங்கத்தின் நீக்க நடவடிக்கையும் நியாயமான பத்திரிகைச் சுதந்திரத்தை நசுக்குவதற்கே இட்டுச் செல்லும் என்ற எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது. ஊடகங்களை எதை வெளியிடலாம், எதை வெளியிடக்கூடாது எனத் தீர்மானிக்கும் அதிகாரத்தை, அந்தச் செய்திகளில் ஆராயப்படும் தனியார் நிறுவனங்களிடமே ஒப்படைப்பதாக இது அமையும் என்ற கவலையும் பகிரப்படுகிறது.
எந்த உள்ளடக்கம் “அவதூறானது” என ஆணையில் தெளிவுபடுத்தப்படவில்லை. ஆகவே, ஒரு கார்ப்பரேட் நிறுவனம், தனது வணிகத்துக்கு உகந்ததாக இல்லாத எந்தவொரு செய்தியையும் அல்லது கட்டுரையையும் அவதூறு என்று கூறி, அதனைப் பதிவிலிருந்து நீக்கக்கூறி “நோட்டீஸ்” அனுப்பலாம். எந்தெந்தப் பதிவு இணைப்புகள் (யூஆர்எல்) நீக்கப்பட வேண்டும் என்ற விவரங்களும் தெளிவாக இல்லை. எனவே, எந்த இணைப்பையும் விலக்குமாறு கெடுபிடி செய்யலாம். ஊடகவியலாளர்கள் அதன்படி செயல்பட்டாக வேண்டும். மொத்தத்தில், மக்களுக்கு அந்த உண்மைகளை அறியவும், அவை உண்மைதானா என்று உரசிப் பார்க்கவும் உள்ள உரிமை நீக்கப்படுகிறது.

“நியாயமான, சரிபார்க்கப்பட்ட, மற்றும் ஆதாரப்பூர்வமான” செய்திகளுக்கு இந்தத் தடை பொருந்தாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது. நல்லதுதான். இந்த விதிவிலக்கு மிகவும் முக்கியமானது என்று ஒரு பகுதியினர் கூறவும் செய்கின்றனர். ஆனால், நியாயமானது என்று யாரிடம் சான்றிதழ் பெற வேண்டும்? சரிபார்க்கப்பட்டது என்ற அங்கீகாரத்தை எவரிடம் கோர வேண்டும்? ஆதாரத்தை எங்கிருந்து எடுக்க வேண்டும்? செய்தியில் சுட்டிக்காட்டப்படும் நிறுவனத்திடமிருந்தே இதையெல்லாம் செய்ய வேண்டுமா? அல்லது, ஒரு நிறுவனம் பதிவு நீக்க நோட்டீஸ் அளித்த பிறகு, ஊடகவியலாளர்கள் ஏதேனுமொரு நீதிமன்றத்தை நாடி, இந்தத் தகுதிகள் இருக்கின்றன என்று நிரூபித்து, தடை நீக்க ஆணை பெற்று, அதன் பிறகு வெளியிட வேண்டுமா?
நியாயமற்ற, சரிபார்க்கப்படாத, ஆதாரமில்லாத தகவல்களைப் பரப்பக்கூடாது என்ற கொள்கை நிலை ஏற்கப்பட வேண்டியதே. ஊடக அறத்தோடு இயங்குகிறவர்கள் அப்படித்தான் செய்கிறார்கள். அதே வேளையில், மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தகவல் கிடைக்கப் பெறுகிறபோது, அதன் குறைந்தபட்ச உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக்கொண்டு, முழுமையான சரிபார்ப்புக்கான பணிகளையும் மேற்கொள்வார்கள். மக்களுக்குத் தெரியவருவதற்குள் சம்பந்தப்பட்டவர்கள் திரை போட்டுவிடக்கூடும் என்ற நிலைமை இருந்தால், ஊகச் செய்தியாகவே வெளியிடுவார்கள். பின்னர் உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்களையும் இணைப்பார்கள். இது காலங்காலமாகவே நடந்து வருகிறது. ஊகபேரச் சந்தையை ஊக்குவிக்கும் நிறுவனங்கள் இதை அறியாமல் இருக்கலாம், ஆனால் நீதிமன்றங்களுக்குத் தெரியாமல் போகலாமா?
ரோகிணி நீதிமன்றத்தின் நடவடிக்கை “ஜான் டோ” தடையாணை போல இருக்கிறது என்று ஊடக ஆசிரியர்கள் சங்கம் (எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா) கூறியிருக்கிறது. (ஒரு வழக்கில் திட்டவட்டமான எதிராளிகள் என்று யாரும் இல்லாமல், யாராக இருந்தாலும் குறிப்பிட்ட செயலைச் செய்யக்கூடாது எனக் கெடுபிடி செய்வதை “ஜான் டோ தீர்ப்பு” என்று கூறுவது ஆங்கிலச் சொல் வழக்கு.)
நிறுவனம் எந்தப் பதிவுகளுக்கான இணைப்புகளையும், தரவுத் தளங்களையும் அனுப்புகிறதோ, அதன்படி அரசாங்க அமைப்புகள், 36 மணி நேரத்திற்குள் அவற்றை நீக்குவதற்கு ஆணையிடும். இப்படி அரசாங்கத்தை நடவடிக்கை எடுக்க வைக்கும் அதிகாரத்தையும் நீதிமன்ற ஆணை அதானி குழுமத்திற்கு அளிக்கிறது என்றும் எடிட்டர்ஸ் கில்ட் சுட்டிக்காட்டியுள்ளது. ஆணையைத் தொடர்ந்து தகவல்–ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் விரைவு நடவடிக்கையையும் சங்கம் விமர்சித்திருக்கிறது.
“ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு இதுபோன்ற ஒட்டுமொத்த அதிகாரங்களை வழங்குவதும், அமைச்சகம் பதிவு நீக்க ஆணைகளைப் பிறப்பிப்பதும் தணிக்கையை நோக்கி ஓரடி எடுத்து வைப்பதேயாகும் என்று சங்கம் கவலை கொள்கிறது. இது, நியாயமான செய்தி சேகரிப்புக்கும் விமர்சனத்திற்கும் நையாண்டிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி, பேச்சுச் சுதந்திரத்திற்கும் கருத்து வெளிப்பாட்டிற்குமான அடிப்படை உரிமையை அரித்துவிடும்,” என்று சங்கத்தின் தலைவர் அனந்த் நாத் (தி கேரவன்), பொதுச் செயலாளர் ருபேன் பானர்ஜி (அவுட்லுக்), பொருளாளர் கே.வி. பிரசாத் (தி டிரிபியூன்) விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
ஒரு நிறுவனம் தனக்கு எதிரான அவதூறுகள் பரப்பப்படுவதாகக் கவலைகொள்வதிலும், அதற்குத் தடை கோருவதிலும் நியாயம் இல்லையா? கார்ப்பரேட் என்பதற்காக இவ்வளவு கடுமையாக விமர்சிக்க வேண்டுமா? இப்படிப்பட்ட வினாக்களும் வரக்கூடும். ஆனால், எந்த நிறுவனமும் எந்தவொரு பதிவையும் அவதூறு என்று கருதுமானால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். அந்தப் புகார்களின் மீது கடந்த காலத்தில் இந்தியப் பத்திரிகைகள் மன்றமும் (பிரஸ் கவுன்சில்) நீதிமன்றங்களும் கறாரான நடவடிக்கைகள் எடுத்த நிகழ்வுகள் உண்டு. அத்தகைய வழிகளில் செல்லாமல் இப்படி ஒட்டுமொத்தத் தடைச் சுவரை எழுப்புவதும், அதை ஒரு நீதிமன்றமே கட்டிக்கொடுப்பதும், அதற்கு அரசாங்கம் பூச்சு வேலை செய்வதும் ஜனநாயகத்திற்கே சவால் விடுப்பதாகிவிடும். கார்ப்பரேட்டுகளுக்கு ஜனநாயகமும் ஒத்துவராது போலிருக்கிறது என்றே மக்கள் பேசுவார்கள்.
இதற்கு முன்பும் கூட அதானி குழுமம் இதே போன்ற ஒரு வழக்கைத் தாக்கல் செய்து, தடையாணை பெற்ற கதையொன்று இருக்கிறது. 2017இல், தற்போதைய வழக்கிலும் தடை பெறப்பட்டுள்ள பத்திரிகையாளர் பரஞ்ஜோய் குஹா தாகுர்தாவுக்கும், அவரது இணையத்தள ஊழியர்களுக்கும் எதிராக அதானி குழுமம் குஜராத்தில் ஒரு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தது. அதில் நடுவர்கள் அளித்த இடைக்கால ஆணையின்படி, அவருடைய ‘கேஸ், கன்ஸ் அன் தி கவர்மென்ட்’ (வாயு, துப்பாக்கிகள், அரசாங்கம்) என்ற புத்தகத்தை வெளியிடவும், அவருடைய ஒரு கட்டுரை வெளியான ‘தி எகனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’ இதழை விற்பனை செய்யவும் நீதிமன்றம் தற்காலிகத் தடை விதித்தது. ஆயினும், ‘தி வயர்’ உள்ளிட்ட ஊடகங்களில் வெளியான அதே உள்ளடக்கம் கொண்ட பதிவுகளை நீக்கக் கோரிய வழக்கை 2018இல் குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதே போல, 2012இல் சஹாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்ப்பரேஷன் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கில், அதன் வணிகச் செயல்பாடுகள் பற்றிய செய்திகளை வெளியிட சில நீதிமன்றங்கள் தடை விதித்தன மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம், விசாரணையின் சட்டப்படியான செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படும் நிலையில் மட்டுமே ஊடகச் செய்திகளுக்குத் தடை விதிக்க வேண்டுமெனத் தீர்ப்பளித்தது.

அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் செய்துகொண்ட ரஃபேல் போர்விமான ஒப்பந்தம் உள்ளிட்ட செய்திகள் அவதூறு செய்கின்றன என்று நேஷனல் ஹெரால்டு, ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைகள் மீதும், என்டீடிவி உள்ளிட்ட சில ஊடகங்கள் மீது பல கோடி ரூபாய் இழப்பீடு கோரி வழக்குத் தொடுத்தது. அமர்வு நீதிமன்றங்கள் இடைக்காலத் தடை விதித்தன. ஊடகவியலாளர்கள் மேல்நிலை நீதிமன்றங்களுக்குச் சென்ற நிலையில், அந்த வழக்குகளை ரிலையன்ஸ் திரும்பப் பெற்றுக்கொண்டது.
டாடா சன்ஸ் நிறுவனத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக கிரீன்பீஸ் அமைப்பு செய்தியறிக்கைகளை வெளியிட்டது. அந்தச் செய்திகளுக்குத் தடை கோரி டாடா குழுமம் வழக்குத் தொடர்ந்தது. டெல்லி உயர்நீதிமன்றம், நியாயமான விமர்சனங்களைத் தடை செய்ய முடியாது என்று தீர்ப்பளித்தது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுடைய தொழில்களால் இயற்கைச் சூழலுக்கோ, வர்த்தக நெறிகளுக்கோ பாதிப்பு ஏற்படுவது பற்றிக் கவலைப்படாமல், தங்கள் நற்பெயருக்குப் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி செய்தித் தடை கோரி வழக்குத் தொடுப்பது வழக்கமான ஒன்றுதான் என்று இந்தத் தகவல்கள் காட்டுகின்றன. பெரும்பாலான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் முடிவெடுத்திருப்பதும் தெரியவருகிறது. ரோகிணி நீதிமன்றத்தின் தற்போதைய ஆணைக்கும் இத்தகைய எதிர்காலம்தான் வரப்போகிறதா?
“இப்படிப்பட்ட பல வழக்குகளையும் இடைக்காலத் தடைகளையும் இந்தியா பார்த்திருக்கிறது. உயர்நீதிமன்றங்களும் உச்சநீதிமன்றமும் அளித்துள்ள தீர்ப்புகள் பொதுவாக நம்பிக்கை அளிக்கின்றன. இந்த வழக்கிலும் ரோகிணி நீதிமன்றத் தீர்ப்பை எதிர்க்கும் மேல் முறையீடுகள் வரும்போது மேல் நிலை நீதிமன்றங்கள் என்ன சொல்கின்றன என்று பார்க்கத்தான் போகிறோம்,” என்கிறார் சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நடுவர் அரிபரந்தாமன்.
“எப்படியானாலும், ஊடகங்களின் கருத்து வெளியீட்டுச் சுதந்திரம் ஜனநாயகத்தில் மிக முக்கியமானது. ஏனென்றால், அதில் மக்களுடைய தகவலறியும் உரிமையும் கலந்திருக்கிறது,” என்றும் அவர் கூறுகிறார். ஆம், வர்த்தகச் சுதந்திரம் இருக்கிறபோது கருத்துச் சுதந்திரமும் உறுதிப்பட்டாக வேண்டும்.
தொழில் நிறுவனங்களின் தேவையும் வளர்ச்சியும் நாட்டின் பொருளாதார நாடித் துடிப்போடு பிணைந்திருப்பதை மறுப்பதற்கில்லை. கார்ப்பரேட் இறுக்கங்களால் அந்தத் துடிப்பு தளர்ந்துவிடக்கூடாதென்ற அக்கறையோடுதான் அதை வலுப்படுத்த ஊடகவியலாளர்கள் உண்மைகளைத் தேடிக் கண்டறிந்து வெளிப்படுத்துகிறார்கள். அவதூறு வழக்குகளாலும் ‘ஜான் டோ’ தடைகளாலும் இனியும் பின்வாங்காமல் இயங்குவார்கள். சும்மா ராசி பலன் போட்டுக்கொண்டிருந்தால் போதுமென்று பேனாவையும் கேமராவையும் மைக்கையும் கணினித் தட்டச்சுப் பலகையையும் மூடி வைப்பதற்கு உடன்பட மாட்டார்கள்.