
(20 Feb 2025 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான கட்டுரையின் மீள்பகிர்வு இது)
இனவெறி, ஆன்லைன் சீண்டல்கள் அடங்கிய டாக்ஸிக் கலாசாரம், பாலியல் தொல்லைகள், தன்பாலின வெறுப்பு போன்றவற்றுக்கு எதிராகத் தன் குரலைத் தொடர்ந்து பதிவு செய்துவருபவர் அமெரிக்க எழுத்தாளரான இஜாமா உலுவா (Ijeoma Oluo). சமீபத்தில் நடந்து முடிந்த ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவில் அவரிடம் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.
“அமெரிக்காவைத் தற்போது ஆளும் ட்ரம்ப் அரசிடம் பால் புதுமையினர், திருநர் மற்றும் தன்பால் ஈர்ப்பாளர்களுக்கு எதிரான மனநிலைதான் தென்படுகிறது. இத்தகைய அரசியல் சூழ்நிலையில் உங்களைப் போன்றோரின் போராட்டம் இன்னும் எவ்வாறு வலுப்பெற வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?’’
‘‘முன் எப்போதையும் விடவே ஒருங்கிணைந்த குழுவாகப் போராட வேண்டிய சூழல் தற்போது இருக்கிறது. அதுவும் அரசுக்கு எதிரான போராட்டமாக மட்டும் இல்லாமல் முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான போராட்டமாகவும் இதை முன்னெடுக்க வேண்டிய அவசியமிருக்கிறது. உதாரணமாக, இப்போது நான் இன்ஸ்டாகிராமில் பேசுவது மார்க் சக்கர்பெர்க்குக்கு எதிரான அரசியல் என்று அவர் நினைத்தால் என் 5,00,000 பாலோயர்களை நான் இழக்க நேரிடும். நாம் மக்களிடம் உரையாடிக்கொண்டிருக்கும் வெளியைப் பாசிச அரசாங்கம் கட்டுக்குள் வைத்திருக்கக்கூடாது. அதனால் நம் குரல் நசுங்கிவிடும் ஆபத்து இருக்கிறது. எனவே ஒடுக்கப்படுபவர் அனைவரும் சமூக வலைதளங்களைத் தாண்டி ஒன்றிணைய வேண்டிய தேவை இப்போது இருக்கிறது. இது நாம் முன்னரே செய்ததுதான். பாசிசமும் நாம் முன்னரே வீழ்த்தியதுதான். அதை மீண்டும் செய்வோம்!’’
“நீங்கள் எதிர்க்கும் இனவெறி போலவே இந்தியாவிலும் நிறைய ஒடுக்குமுறைகள் இருக்கின்றன. சாதி, மொழி, மதம், இனம் என்று அவை பல பரிமாணங்கள் எடுக்கின்றன. இந்த 21-ம் நூற்றாண்டில் இவற்றைக் களைய நாம் செய்ய வேண்டியது என்ன?’’
‘‘மக்கள் கல்வியும் விழிப்புணர்வும் பெறுவது அரசாங்கங்களுக்கு என்றுமே அச்சுறுத்தல் தரக்கூடிய ஒன்றுதான்! இல்லையென்றால் இதைக் கற்றுக்கொடுக்கக்கூடாது, இதைச் செய்யக்கூடாது எனப் பல்வேறு மசோதாக்களை அரசாங்கங்கள் நிறைவேற்றாதுதானே! ஆனால் ஒடுக்குமுறை பற்றிப் பேசும்போது அதை மக்களிடையே தென்படும் பிரச்னையாக மட்டுமே நாம் முன்வைக்கிறோம். அரசாங்கங்கள், அரசியல் கட்சிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த ஒடுக்குமுறை மூலமாக எவ்வாறெல்லாம் ஆதாயம் பெறுகின்றன என்பதைப் பற்றி ஏனோ நாம் பேசுவதில்லை. இந்த ஏற்றத்தாழ்வு எப்படி நம் கல்விமுறையில் புகுந்திருக்கிறது, எவ்வாறு நம் பணியிடங்களில் ஊடுருவியிருக்கிறது, எப்படி நம் வரலாற்றோடு பின்னிப் பிணைந்திருக்கிறது, எப்படி அது ஒரு சிஸ்டமாகவே மாறியிருக்கிறது என்பதை எல்லாம் நாம் பார்ப்பதில்லை.
என்னைக் கேட்டால், இவ்வுலகம் இப்படியே இருப்பதால் யாரெல்லாம் பணம் சம்பாதிக்கிறார்கள் என்று பார்க்கச் சொல்வேன். இந்தச் சண்டைகள், சச்சரவுகள் மூலமாக அவர்கள் எப்படி முக்கியமான மற்ற பிரச்னைகளிலிருந்து மக்களைத் திசை திருப்புகிறார்கள் என்று பார்க்கச் சொல்வேன். ட்ரம்ப்போ, மோடியோ… யாராயினும் அவர்கள் ஏன் ஒரேவித அஜெண்டாவுடன் நம்மை ஆள்கின்றனர் என்று யோசிக்க வேண்டும்!’’
“இந்த ஏற்றத்தாழ்வுகளைக் களைய, ஒடுக்கப்பட்டவர்களிடையே அதிகாரப் பகிர்வு நடக்க, இட ஒதுக்கீடு போன்றவற்றை மக்களுக்கான உரிமையாகவே முன்னெடுக்கிறது சட்டம். ஆனால் முன்னேறிய வகுப்பினர் மத்தியில் இன்றளவும் அதைச் சலுகையாகப் பார்க்கும் மனப்பான்மையே இங்கே இருக்கிறது. இந்த எண்ணத்தை மாற்றுவது எப்படி?’’
‘‘இங்கே சமூக நீதி என்பது உடனடித் தீர்வாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் அது இறந்தகாலத்தின் தவறுகளைச் சரி செய்யும் ஒரு நீண்ட நெடிய செயல்முறை! உதாரணமாக, உங்களிடம் தலைமுறை தலைமுறையாக ஒவ்வொரு நாளும் நான் 50 டாலர்களைப் பிடுங்கியிருக்கிறேன். அதனாலேயே உங்களால் ஒரு வீட்டைச் சொந்தமாக வாங்க முடியவில்லை அல்லது உங்களின் பிள்ளைகளுக்குத் தரமான கல்வியைக் கொடுக்க முடியவில்லை என்று வைத்துக் கொள்வோம். இப்போது இட ஒதுக்கீடு மூலமாக உங்கள் குடும்பம் கல்வியறிவு பெறுகிறது. இத்தனை தலைமுறைகளாக நீங்கள் சந்தித்த ஒடுக்குமுறையை உடனே அது ஈடுகட்டிவிடுமா? ‘இப்போதுதான் சம வாய்ப்புகள் வந்துவிட்டனவே… இப்போதும் இட ஒதுக்கீட்டை நீங்கள் எதிர்பார்த்தால் நீங்கள் சோம்பேறி என்றுதானே அர்த்தம்’ என நான் சொல்லிவிட முடியுமா?
சமூக நீதியின் மூலம் அப்படிப்பட்ட மக்கள் தன்னம்பிக்கையாக உணர வேண்டும். இந்தச் சமுதாயத்தில் அவர்களுக்கும் குரல் இருக்கிறது என்ற நம்பிக்கையை நாம் தரவேண்டும். தலைமுறை தலைமுறையாக ஒடுக்கப்பட்டவர்களிலிருந்து எத்தனை பேர் அதிகாரத்துக்கு வந்திருக்கிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும். அதிகாரக் கட்டமைப்பை எப்படி அனைவருக்குமானதாக மாற்றவேண்டும் என்பது குறித்து நாம் யோசிக்க வேண்டும்.’’
“நீங்கள் சிங்கிள் மதர்… சிங்கிள் மதரால் வளர்க்கப்பட்டவரும்கூட! ‘சிங்கிள் மதர் பேரன்டிங்’ என்பது மேற்கில் எப்படிப் பார்க்கப்படுகிறது? பணியிடம் தொடங்கிப் பல இடங்களில் பாலினப் பாகுபாடு இருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் அதுகுறித்த பார்வை இப்போது எப்படியிருக்கிறது?’’
‘‘சமூகக் கட்டமைப்பாக ஆணாதிக்கம் உச்சத்தில் இருக்கும் எந்த நாட்டிலுமே ‘சிங்கிள் மதராக’ இருப்பது கடினமான ஒன்றுதான். ஆனால் என்னைக் கேட்டால், என் வீட்டில் ஆணாதிக்கம் கிடையாது. எனக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்கள் பெண்களை மதிக்கிறார்கள். சிங்கிள் மதராக அவர்களை வளர்ப்பது பொருளாதாரரீதியாகக் கடினமானதுதான். ஆனால், எங்கள் வீட்டில் பயமில்லை, குடும்ப வன்முறை இல்லை என்பதே பெரிய ஆறுதலாகப் படுகிறது. இந்த வளர்ப்பு முறையை இழிவாகப் பார்க்கும் நாடுகள் மற்றும் கலாசாரங்கள் இன்றளவும் இருப்பதைப் பார்க்கையில் நான் நினைப்பது ஒன்றுதான். நாங்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் இருக்கிறோம், நன்றி!’’