
நெல்லை மாநகர காவல் துறையில் சந்திப்பு போக்குவரத்து பிரிவில் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர், காந்திராஜன்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவரான இவர் நெல்லையை அடுத்த சுத்தமல்லியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
59 வயதான காந்திராஜனுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதால் தனது வீட்டில் இருந்து தினமும் சொந்த காரில் பணிக்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
அதன்படி, நேற்று இரவு அவர் பணிமுடிந்து நெல்லை நகரம் தெற்கு மவுண்ட் ரோடு வழியாக சுத்தமல்லிக்கு காரில் சென்றுள்ளார்.
அப்போது அந்த சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென நின்றதால், அதன் பின்னால் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் நின்றுள்ளது.
ஆனால் பைக்கின் பின்பாக வந்துகொண்டிருந்த சிறப்பு எஸ்.ஐ-யான காந்திராஜனின் கார், பைக் மீது மோதி நின்றது. அதனால் பைக் சாலையின் நடுவில் விழுந்தது.
அதனால் ஆத்திரம் அடைந்த பைக்கில் வந்த இளைஞர், காரில் வந்த காந்திராஜனிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
அந்தப் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதால், சாலையின் நடுவில் கிடந்த தனது இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு அந்த இளைஞர் வந்துள்ளார்.
அதற்குள்ளாக காரை ஸ்டார்ட் செய்த காந்திராஜன் அந்த இடத்தில் இருந்து செல்வதற்கு முயற்சித்துள்ளார். அதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர் சாலையின் குறுக்காக வந்துள்ளார்.
அப்போதும் வாகனத்தை நிறுத்தாதக் எஸ்.எஸ்.ஐ காந்திராஜன், அவர் மீது மோதுவது போல வந்திருக்கிறார். உடனடியாக சுதாகரித்துக் கொண்ட இளைஞர் காரின் முன்பக்க பேனட் மீது படுத்துள்ளார்.

ஆனாலும் கார நிறுத்தப்படாமல் சென்றதால், அந்த இளைஞர், தன்னைக் காப்பாற்றுமாறு கூக்குரல் எழுப்பியுள்ளார். சற்று தூரம் அந்த இளைஞரை இழுத்துச் சென்ற கார் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தை அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த மக்கள் பதிவுசெய்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், பைக்கில் வந்த இளைஞர் மற்றும் காரை ஓட்டிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காந்திராஜன் ஆகிய இருவரும் மதுபோதையில் இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட காந்திராஜன் உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். அத்துடன், அவர் மீது துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.