
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள கங்கர்செவல் சத்திரப்பட்டி கிராமத்தில் திவ்யா பைரோடெக் எனும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஏழு பேர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
கங்கர் செவல்பட்டி சத்திரபட்டியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவருக்குச் சொந்தமான திவ்யா பைரோ டெக் எனும் பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இங்கு நாக்பூர் உரிமம் பெற்று பேன்சிராக பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. 40க்கும் மேற்பட்ட அறைகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வழக்கம் போல பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது உராய்வின் காரணமாக திடீரென பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வெடி விபத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி வெம்பக்கோட்டை பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த கௌரி (50) என்ற பெண் உயிரிழந்துள்ளார். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்த நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் 2 பேர் 100 சதவீத தீக்காயத்துடன் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த வெடி விபத்தில் மீட்புப் பணிக்காக வெம்பக்கோட்டை மற்றும் சிவகாசியைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் சிவகாசி மற்றும் வெம்பக்கோட்டையைச் சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். வெம்பக்கோட்டை போலீசார் வெடி விபத்து குறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.