
விழுப்புரம்: பாமகவில் அதிகார மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், தங்களது பரஸ்பர பலத்தை நிரூபிக்க தலா 100 கார்களில் புடைசூழ பவனி வந்து, வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 தியாகிகளுக்கு ராமதாஸும், அன்புமணியும் இன்று (செப்.17) அஞ்சலி செலுத்தினர்.
அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 21 தியாகிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17-ம் தேதி வன்னியர் சங்கம் மற்றும் பாமக சார்பில் அஞ்சலி செலுத்தப்படும். பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இணைந்து திண்டிவனம் வன்னியர் சங்க அலுவலகம் மற்றும் சித்தனி, பார்ப்பனப்பட்டு, பனையபுரம், கோலியனூர், கொள்ளுகாரன்குட்டை ஆகிய கிராமங்களில் உள்ள இடஒதுக்கீடு தியாகிகளின் நினைவு தூண்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வந்தனர்.