
தென்காசி மாவட்டம், தென்காசி கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் தென்காசி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் லாவண்யா பால் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தென்காசி கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்பதற்கு அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு நிவர்த்தி செய்ய வேண்டும். ஆனால் தங்களது பிரதான பிரச்சனையான வன விலங்குகள் அட்டகாசத்தைக் கேட்பதற்கு வனத்துறை அதிகாரிகள் வரவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் தொடர்பு கொண்ட நிலையில் வனத்துறை சார்பாக அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
தொடர்ந்து கூட்டம் நடைபெற்ற போது, “கடந்த சில மாதங்களாகவே வடகரை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகள் அட்டகாசம் அதிகமாகக் காணப்படுகிறது. தென்னை உள்ளிட்ட அனைத்து பயிர்களையும் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் சேதப்படுத்தி வருகின்றன.
ஆனால் இதுகுறித்து வனத்துறையினர் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. முறையான அகழிகள் வெட்டப்படவில்லை, சோலார் மின் வேலிகள் அமைக்கப்படவில்லை. இதனைக் கேட்கும் பட்சத்தில் தங்களுக்கான நிதி வரவில்லை எனக் கூறுகின்றனர்” என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
“தங்கள் பகுதியில் வனவிலங்குகள் அட்டகாசத்தைக் கட்டுப்படுத்துகின்ற வகையிலும் முதற்கட்டமாக செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் வனச்சரகத்தின் மீது குற்றப்புலனாய்வு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களுக்கான நிதி இதுவரை வந்துள்ளதா? வந்த நிதியை என்ன செய்தனர் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என கோரிக்கை மனு அளித்த விவகாரம் பரபரப்பு ஏற்படுத்தியது.