• September 17, 2025
  • NewsEditor
  • 0

ஏங்க… ஏங்க… என இணைய உலகத்தையே ஏங்கவைத்த கூமாபட்டி இளைஞர் தங்கபாண்டி, தற்போது, தொலைகாட்சி நிகழ்ச்சியின் மூலம், சின்னத்திரை கல கல நடிகராகவும் குதூகல ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார்.

இப்படி, கொண்டாட்ட மகிழ்ச்சியில் இருந்தவருக்கு திடீரென விபத்து ஏற்பட்டதால் ‘கூமாபட்டி தங்கபாண்டிக்கு என்னாச்சு?’ என இணையதளவாசிகள் அக்கறையோடு கேள்வி எழுப்பிக்கொண்டிருக்க, தங்கபாண்டியனைத் தொடர்புகொண்டு பேசினேன்…

“ஷூட்டிங்கிற்காக பஸ்ல வெளியூர் போய்க்கிட்டிருந்தேன். டிரைவர் வேகமா ஓட்டினது மட்டுமில்லாம, திடீர்ன்னு பிரேக் போட்டுட்டார். நான், எதிர்பார்க்கவே இல்ல. என்னோட தோள் பட்டையில பயங்கரமா அடிபட்டுடுச்சு. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து பார்த்த டாக்டர், ‘பந்துகிண்ண மூட்டு இறங்கியிருக்கு. ஜவ்வு கிழிஞ்சிருக்கு. ஆபரேஷன் பண்ணவேண்டியிருக்கும். மூணு வாரம் ரெஸ்ட் எடுத்துட்டு, ஆபரேஷனுக்குப்பிறகு மூணு மாசம் ஓய்வு எடுக்கவேண்டியிருக்கும்’னு சொல்லிட்டார். எனக்கு மட்டுமில்லாம, மற்ற பயணிகளுக்கும் பலத்த அடி. அதுவும், நான் வளர்ந்து வர்ற நேரத்துல, இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல. ரொம்ப கஷ்டமா இருக்கு.

கூமாபட்டி தங்கபாண்டி

அதைவிட எனக்கு மன உளைச்சலைக் கொடுத்தது, டிரைவரோட அணுகுமுறைதான். ‘ஏண்ணே இவ்ளோ ஸ்பீடா போறீங்க. விபத்து ஆகிடப்போகுது’ன்னு கேட்டதுக்கு, ‘வண்டி குறுக்கால வந்தது, பிரேக் போட்டேன். நீ என்ன வடக்கனா… போ அப்படி’ன்னு சொல்லி அசிங்கப்படுத்திட்டார். தெற்கனா இருந்தா என்ன? வடக்கனா இருந்தா என்ன? எல்லாரும் மனிதர்கள்தானே? அவர், பேசினதுதான் ரொம்ப வருத்தமா ஆகிடுச்சு” என்று மனக்குமுறலை வெளிப்படுத்தியவரிடம், “இனி ஜீ தமிழ் நிகழ்ச்சி?” என கேட்டபோது, “எனக்கு அடிப்பட்ட தகவல் கேட்டதும் சாந்தினி மட்டுமில்ல, மொத்த டீமே வருத்தப்பட்டாங்க.

என்னை நம்பி இந்த பொறுப்பைக் கொடுத்திருக்காங்க. அதனால, ‘சிங்கிள் பசங்க’ நிகழ்ச்சியிலருந்து விலகுற எண்ணம் கிடையாது. இன்னும் மூணு நாளில் வந்து பொம்மை மாதிரியாவது நிகழ்ச்சியில நிற்பேன். இந்த கைதான் ‘கூமாபட்டிக்கு வாங்க… வாங்க’ன்னு எல்லோரையும் ஊருக்கு வரவழைச்சு ஃபேமஸ் ஆக்கினது. இப்போ, என் கரியர் போயிடுமோன்னு பயமா இருக்கு. இந்த கையை வெச்சுத்தானே என் திறமையை எல்லாம் வெளிப்படுத்தினேன். எங்க வீட்டுல எல்லோருமே ரொம்ப அதிர்ச்சி ஆகிட்டாங்க. எனக்கு சினிமா வாய்ப்புகளும் வந்துக்கிட்டிருக்கு. முழு தகுதியை வளர்த்துக்கிட்டுத்தான், சினிமாவுக்குள்ள போகணும்ங்கிற முடிவுல இருக்கேன். அதனால, நடிப்புப் பயிற்சிக்காக கூத்துப்பட்டறையில சேர்ந்திருக்கேன். டான்ஸ் க்ளாஸ், ஜிம்முக்கும் போக ஆரம்பிச்சுட்டேன்.

தங்கபாண்டி - சாந்தினி
தங்கபாண்டி – சாந்தினி

இந்த நேரத்துல இப்படி ஆனது, எனக்கே ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. இன்ஸ்டாவுல ரீல்ஸ் பண்ணி போடுறது வேற, சினிமா வேற. நிறைய வித்தியாசத்தை புரிஞ்சுக்கிட்டேன். அதேமாதிரி, நிறைய பேரு எனக்கு கண் திருஷ்டி விழுந்துடுச்சுன்னு சொல்றாங்க. நான், அதையும் ஏத்துக்கமாட்டேன். அந்தமாதிரி, நம்பிக்கைக்குள்ள போகமாட்டேன். எனக்கு நடந்தது, எதேச்சையா நடந்தது. ஆனா, நான் நிகழ்ச்சியில கலந்துக்க ஆரம்பிச்சதிலிருந்தே ‘கூமாபட்டியானுக்கு வந்த வாழ்வை பாருங்க…. யோகத்தைப் பாருங்க’… ‘வயித்தெரிச்சலா இருக்குடா’…. ‘நீ நல்லாவே இருக்கமாட்டட்’ன்னு பலரும் என்னை கமென்ட் பண்ணித் திட்டுறாங்க.

அதையெல்லாம் பார்த்து எனக்கு ரொம்ப வேதனையா இருந்தது. வலி, வேதனை எல்லாமே எனக்குத்தானே? அவங்களுக்கு தெரியாதில்ல? என்மேல வயித்தெரிச்சல் பட்டவங்க எல்லாம் நல்லாயிருக்கட்டும். நான், அவங்களை எதுவும் சொல்லமாட்டேன். ஆனா, ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேன். எனக்கு எவ்ளோ அடிபட்டாலும் இலக்குல இருந்து பின்வாங்கவே மாட்டேன். ஒரு இம்மி அளவுகூட திசைமாற மாட்டேன். எத்தனை அடிபட்டாலும், எத்தனை எலும்பு உடைஞ்சாலும் சதை கிழிஞ்சாலும் ரத்த ஆறே ஓடினாலும் என் இலக்கை நோக்கி பயணிச்சுக்கிட்டேதான் இருப்பேன். மக்களோட ஆதரவு இருக்கு. கண்டிப்பா எதிர்காலத்துல நல்லது செய்வேன். ஒரு தனி மனிதனா, எந்தப் பின்புலமும் இல்லாம கூமாபட்டியை ஃபேமஸ் ஆக்கி, அரசுக்கிட்டேயிருந்து 10 கோடி ரூபாய் வாங்கிக்கொடுத்திருக்கேன். இது, எல்லா தனி மனிதனாலயும் முடியும். ஆனா, முயற்சி பண்ணனும்.

தங்கபாண்டி
தங்கபாண்டி

என்னோட திறமையை எல்லாம் வெளிக்கொண்டு வந்து, நிச்சயமா சாதிப்பேன். எந்த பின்புலமும் கிடையாது. ஆனா, ஒரு கிராமத்திலிருந்து என்னோட திறமையால சின்னத்திரை வரை வந்திருக்கேன். இதுவே, ஒரு நடிகரோட மகன், ஒரு பெரிய தொழிலதிபரோட மகன் ஜீ தமிழ் நிகழ்ச்சியில ஒரு பொண்ணுகூட டான்ஸ் ஆடினா என்னை சொல்ற மாதிரி விமர்சிப்பாங்களா? இதுலையும் சிலர் ஏற்றத்தாழ்வு பார்க்கிறது கவலையா இருக்கு. 2027 -ல என்னுடைய திறமை எல்லாம் இன்னும் முழுசா வெளிப்படும்” என்கிறார், தன்னம்பிக்கையோடு!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *