
“முத்துராமலிங்க தேவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கவும், மதுரை விமான நிலையத்துக்கு அவர் பெயரைச் சூட்டவும் நடவடிக்கை எடுப்போம்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல் மாவட்ட பிரசார பயணத்தில் அறிவித்திருந்தார். இது தென் மாவட்டத்தில் உள்ள இரு தரப்பு மக்கள் மத்தியில் வரவேற்பு, எதிர்ப்பு என்று சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கு ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அ.தி.மு.க தலைவர்கள், பல்வேறு பார்வர்டு பிளாக் கட்சியினர், முக்குலத்தோர் அமைப்பினர் நன்றி தெரிவித்து வருகின்றனர். அதேநேரம், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, த.ம.மு.க தலைவர் ஜான்பாண்டியன் உள்ளிட்ட தலைவர்களும் தேவேந்திர குல அமைப்புகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் பெயர் சூட்டும் விவகாரம் குறித்து தென்மாவட்ட அரசியல் நோக்கர்களிடம் விசாரித்தோம், “மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயரைச் சூட்ட வேண்டுமென்று 30 ஆண்டுகளுக்கு முன் சுப்பிரமணியசுவாமி மதுரையில் அரசியல் செய்த காலத்தில் வாக்குறுதி அளித்தார். அதைத்தொடர்ந்து பார்வர்ட் பிளாக் கட்சியினரும் முக்குலத்தோர் அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
அப்போதிருந்து புதிய தமிழகம் கட்சியும், தேவேந்திர குல வேளாளர் அமைப்புகளும் இமானுவேல் சேகரன் பெயரை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன. சென்சிடிவான விஷயம் என்பதால் மற்ற கட்சிகள் இந்த விவகாரத்துக்குள் தலையிடவில்லை. இடையில் இந்த விவகாரம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி தற்போது அறிவித்துள்ளார்.
இதற்கு ஒரு காரணமும் உள்ளது, அவர் முதலமைச்சராக இருந்தபோது எம்.பி.சி இட ஒதுக்கீட்டிலிருந்து வன்னியருக்கு மட்டும் 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கிய விவகாரத்தாலும், சசிகலா, டி.டி.வி தினகரன், ஓ.பி.எஸ் என்று முக்குலத்துச் சமுதாயத்தினர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவங்களாலும் தென் மாவட்ட முக்குலத்தோர் சமூகத்தினர் மத்தியில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தி ஏற்படுத்தின. அதன் காரணமாகவே சில ஆண்டுகளுக்கு முன் தேவர் ஜெயந்தி விழாவிற்கு பசும்பொன் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நிகழ்வுகள் நடந்தன.

நீண்டகாலமாக முக்குலத்தோர் மத்தியில் தனக்கு எதிராகத் தூண்டப்பட்டுள்ள அதிருப்தியை மடை மாற்றும் விதமாகத்தான், சமீபத்தில் மதுரை, திண்டுக்கல் மாவட்ட பிரசார பயணத்துக்கு வந்தபோது ‘முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கவும், மதுரை விமான நிலையத்துக்கு அவர் பெயரைச் சூட்டவும் நடவடிக்கை எடுப்போம்’ என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பால் ஒரு சமூகத்தினர் ஆதரித்தும் மற்றொரு சமூகத்தினர் எதிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது” என்றனர்.
”அமைதிப்பூங்காவாக இருக்கும் தென் தமிழகத்தில் தேவர் பெயரில் தேவையற்ற வார்த்தைகளைப் பேசி சமூகத்தில் பிரச்னையை எடப்பாடி பழனிசாமி உண்டாக்குகிறார்” என்று டி.டி.வி.தினகரனும் கண்டிக்க, இது அவருக்கு எதிராகச் சர்ச்சையாக மாறவே, “நான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை, தேவர் பெயரை எப்போதோ சூட்டியிருக்க வேண்டும், இப்போது அறிவிக்கும் எடப்பாடி பழனிசாமியை நம்ப முடியாது என்ற அர்த்தத்தில்தான் சொன்னேன்” என்று விளக்கம் அளித்தார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மள்ளர் சேனை நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் சோலை பழனிவேல்ராசன், “தேவருக்கு எந்த விருதும் கொடுக்கட்டும், நாங்கள் தலையிடவில்லை. ஆனால், விமான நிலையத்துக்கு இமானுவேல் சேகரன் பெயர்தான் சூட்ட வேண்டும். தேவேந்திர குல வேளாள மக்கள் அதிகமாக வாழும் சின்ன உடைப்பு கிராம மக்கள்தான் மதுரை விமான நிலையம் அமைப்பற்கு அந்தக் காலத்தில் குறைந்த இழப்பீட்டைப் பெற்றுக்கொண்டு நிலம் கொடுத்தார்கள்.
அவர்களின் விருப்பத்தின்படி தீண்டாமையை எதிர்த்தும், சமநீதிக்காகவும் உயிரைத் தியாகம் செய்த தியாகி இமானுவேல் சேகரன் பெயரை வைப்பதுதான் சரியாக இருக்கும். எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பால் அ.தி.மு.க-விலுள்ள தேவேந்திர குல வேளாளர் மக்கள் மனம் நொந்துபோய் உள்ளனர். நாங்கள் அனைத்து சமூக மக்களுடன் இணக்கமாக இருக்கவே விரும்புகிறோம். எடப்பாடி பழனிசாமி இதைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.
அகில இந்திய பார்வர்ட் பிளாக் தமிழக பொதுச்செயலாளர் பி.வி.கதிரவனிடம் பேசியபோது, “இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாக நாங்களும் பல்வேறு கட்சியினரும் மத்திய, மாநில அரசுகளிடம் இந்தக் கோரிக்கையை வைத்து வருகிறோம். நாடாளுமன்றத்தில் பசும்பொன் தேவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. தமிழகச் சட்டமன்றத்திலும் திருவுருவப்படம் வைக்கப்பட்டுள்ளது.
இந்த அளவுக்கு அனைத்து கட்சியினராலும், அனைத்து சமுதாயத்தினராலும் கொண்டாடப்படும் பசும்பொன் தேவர், மதுரையில்தான் நீண்டகாலம் பொது வாழ்வில் ஈடுபட்டார். அப்படிப்பட்டவரின் பெயரை மதுரையிலுள்ள விமான நிலையத்துக்கு வைப்பதால் யாரும் குறை கூற மாட்டார்கள். சிலபேர் வரலாறு தெரியாமல் கண்மூடித்தனமாக எதிர்க்கிறார்கள்.
மாநில அரசுதான் இதற்குத் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே பெயர் வைக்க ஏற்பாடுகள் நடந்து வந்தன. முதலமைச்சர் ஸ்டாலினிடமும் இதே கோரிக்கையை வைத்தோம்.

முக்குலத்தோர் மக்களைக் கவர்வதற்காகவும், தேர்தலுக்கான வாக்குறுதியாகவும் இதை நினைக்கவில்லை. பிரசார பயணம் வந்திருந்தபோது நீண்டநாள் கோரிக்கையான இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கூறினோம். அதைத்தொடர்ந்துதான் அறிவித்தார். எடப்பாடி பழனிசாமி எதையும் சொன்னால் நிச்சயம் செய்வார் என்பதால் அவரை நம்புகிறோம்” என்றார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பு தென் மாவட்ட அரசியலிலும், சமூக ஊடகங்களிலும் விவாதத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகின்றது.