
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள கூடைத்தூக்கி பகுதியை சேர்ந்தவர் ரமணி(41). இவரது கணவர் அஜிகுமார். குலசேகரம் சந்தை பகுதியில் நகைக்கடை நடத்தி வந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். இவர்களுக்கு 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் உள்ளார். கணவன் இறந்த பிறகு ரமணி தனது வீட்டுக்கு அருகிலேயே கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் விஷம் குடித்து நேற்று மரணமடைந்தார். குலசேகரம் போலீஸார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தினர்.
தந்தை காவல் நிலையத்தில் புகார்
இந்த நிலையில் ரமணி தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதியதாக கூறப்படும் 6 பக்க கடிதத்தை அவரது தந்தை ஜார்ஜ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் ஜார்ஜ் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:
என் மகள் ரமணி பி.எஸ்.சி, பி.எட் பட்டதாரி என்பதால் கணவன் மறைவுக்குப்பின் கருணை அடிப்படையில் அரசு வேலை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தார். அந்த மனுவில் உள்ள மொபைல் எண்ணை எடுத்து கலெக்டர் அலுவலகத்தில் பி- பிரிவில் ஆர்.ஐ-ஆக வேலை பார்க்கும் வேல்முருகன் என்பவர் ரமணியைத் தொடர்பு கொண்டு ஆசை வார்த்தைகளைக் கூறி தொடர்பில் இருந்துள்ளார்.
ரமணியின் பணம் மற்றும் நகையை வேல்முருகன் வாங்கியதுடன், தனது முதல் மனைவியுடன் வரதட்சனை வழக்கு நடக்கிறது எனவும் அந்த வழக்கு முடிந்தபின் ரமணியை திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.
ரமணி இதை நம்பியிருந்த நிலையில் வேல்முருகன் வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளார். தன்னை ஏமாற்றியது பற்றி வேல்முருகன் வீட்டிற்குச் சென்று 14.09.2025 அன்று ரமணி முறையிட்டுள்ளார். வேல்முருகனும், அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் ரமணியைத் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதையடுத்து என் மகள் ரமணி 15.09.2025 அன்று விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். என் மகள் அனுபவித்த வேதனைகள் குறித்துக் கடிதம் எழுதி வைத்துள்ளார். எனவே வேல்முருகன் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்தப் புகாரில் கூறியிருந்தார்.

ரமணி எழுதிய கடிதம்
மேலும் ரமணி எழுதிய 6 பக்கம் கொண்ட கடிதமும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளதாவது: “அப்பா நான் இன்று எடுக்கப்போகும் முடிவுக்கு வேல்முருகனும் அவரது குடும்பத்தினரும்தான் காரணம். வேல்முருகனின் மனைவி வேறு ஒருவருடன் சென்றுவிட்டதால் விவாகரத்து வழக்கு முடிந்ததும் என்னை திருமணம் செய்வதாகக் கூறி நகை, பணம் வாங்கினார். இப்போது வேறு பெண்ணை திருமணம் செய்துவிட்டான். அதுபற்றி கேட்டதற்கு என்னை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். அப்பா நீங்கள் எனக்காக நிறைய கஷ்டடப்பட்டீங்க. எந்த அப்பாவும் படாத வலியை அனுபவிச்சீங்க. என்னை மன்னிச்சிடுங்க. என் நகைகள் பீரோவில் இருக்கு. கடை சாவி பேக்கில் இருக்கு…” இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் வேல்முருகனைக் கைது செய்துள்ளனர்.