
தெருநாய்கள் தொடர்பாக சமீபத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் பெரும் சர்ச்சையை கிளப்பின.
டெல்லியில் தெருநாய்களை பிடித்து முகாம்களில் அடைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், பின்னர் தனது உத்தரவை திருத்திக்கொண்டு தெருநாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்து, அவற்றை மீண்டும் அவற்றின் இடங்களில் விட்டுவிட உத்தரவிட்டது.
தெருநாய்கள் பாதசாரிகள், வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும், அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் மக்கள் கொந்தளித்து விடுகின்றனர். நாய்கள் எப்போதும் பாசமாக இருக்கும். அதேசமயம் சில நேரங்களில் ஆக்ரோஷத்தில் நாய்கள் பொதுமக்களை தாக்குவதுண்டு.
அதுபோன்று, பொதுமக்களை கடிக்கும் தெருநாய்களுக்கு எதிராக உத்தரப் பிரதேச அரசு நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.
உத்தரப் பிரதேச அரசு வெளியிட்ட நெறிமுறைகள் அறிக்கையின் படி,
பொதுமக்கள் யாரையாவது தெருநாய் கடித்தால் அந்த நாயை உள்ளாட்சி நிர்வாகம் பிடித்து சென்று 10 நாட்கள் கண்காணிப்பில் வைத்திருந்து, பின்னர் விடுவிப்பார்கள். அவ்வாறு விடுவிக்கப்படும் தெருநாய் மீண்டும் அதே தவறை செய்யும் பட்சத்தில் அந்த நாய் நிரந்தரமாக முகாம்களில் அடைக்கப்படும் என்று உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
அது போன்று, முகாம்களில் அடைக்கப்படும் தெருநாய்களை பொதுமக்கள் தத்து எடுத்துக்கொள்ள அனுமதி கொடுக்கப்படும்.
ஆனால், அவ்வாறு தத்து எடுப்பவர்கள் அந்த நாயை மீண்டும் தெருவில் விடமாட்டேன் என்று உத்தரவாதம் எழுதிக் கொடுக்க வேண்டும்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அதோடு, யாரையாவது நாய் கடித்திருந்தால், அவர்கள் வெறுநாய்க்கடிக்கான ஊசி போட்டுக்கொண்டார்களா என்பதை உறுதி செய்யும்படியும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.