
மதுரை உத்தங்குடியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்
மதுரை உத்தங்குடியில் நடைபெற்ற மதுரை வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை தாங்கிய அமைச்சர் பி. மூர்த்தி பேசும்போது,
“மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எந்தத் தொகுதியிலும் எந்தவொரு பாகுபாடும் இன்றி செயலாற்றி வருகிறோம்.
மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் 1,122 வாக்குச் சாவடிகளில் உறுதிமொழி ஏற்க வேண்டும் என கூறப்பட்டது. ஆனால் சில வாக்குச் சாவடிகளில் உறுதிமொழி நிகழ்வு நடத்தப்படவில்லை எனத் தெரிகிறது.
தலைமைக் கழகம் சொல்லும் பணிகளைச் செய்ய முடியாத நிர்வாகிகள், கட்சியை விட்டு ஒதுங்கி ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.
பணிகளைச் செய்யாத நிர்வாகிகளுக்குப் பதிலாக புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
சாக்குப் போக்கு சொல்ல நேரம் இல்லை
நாங்கள் என்ன அரசு வேலையா பார்க்கிறோம்?” என சில நிர்வாகிகள் கேட்டுள்ளனர். அப்படிக் கேட்கும் நிர்வாகிகளை திமுகவை விட்டு விடுவிக்கத் தயாராக இருக்கிறோம்.
வரும் காலங்களில் திமுகவினருக்கு வேலைப்பளு கடுமையாக இருக்கும். கட்சிப் பணியில் நிர்வாகிகள் சாக்குப் போக்கு சொல்வதற்கு இனி நேரமும் இல்லை, காலமும் இல்லை.
தொகுதி பொறுப்பாளர்கள் சொல்லும் பணிகளை பூத் கமிட்டியினர் செய்தே ஆக வேண்டும்” என்று பேசியுள்ளார்.

`பண்ணையார் போல் உத்தரவு’
இந்தப் பேச்சு திமுக நிர்வாகிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.
இது குறித்து நம்மிடம் பேசியவர்கள்,
“கட்சியில் கீழ்மட்ட நிர்வாகிகள் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டமான நிலையில் உள்ளனர். அமைச்சருக்கு நெருக்கமாக இருப்பவர்கள் மட்டும் வசதியாக இருக்கிறார்கள்.
அடிமட்ட நிர்வாகிகளின் பிரச்னைகளை அவர் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். இந்த நிலையில் கஷ்டப்பட்டு வேலை செய்யும் கட்சி நிர்வாகிகளை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவதைவிட பண்ணையார் போல் உத்தரவிடுகிறார்.
அவருக்கு முன்னாள் இங்கு கட்சியை வளர்த்தவர்கள் எல்லாமே அடக்கமாகத் தான் இருக்கிறார்கள் என்பதை மறந்து பேசுகிறார்.
ஏற்கெனவே கூட்டணிக் கட்சியினரான சிபிஎம், விசிக நிர்வாகிகள் அமைச்சர் மீது கடும் கோபத்தில் உள்ளனர். இந்த நிலையில் சொந்தக் கட்சியினரின் வெறுப்பையும் சந்திக்க அவர் தயாரா?” என்று தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.