
இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 14 அன்று இந்தி தினமாகக் கொண்டாடப்படுகிறது. ‘இந்தி திவாஸ்’ என்று அழைக்கப்படும் இந்நிகழ்வையொட்டி இந்தித் திணிப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபடுவதாகத் தெரிவித்து, கொல்கத்தாவைச் சேர்ந்த பங்களா போக்கோ (Bangla Pokkho) என்கிற அமைப்புப் போராட்டம் நடத்தியது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்தப் பங்களா போக்கோ – பண்பாடு, மொழி உரிமைக்காகச் செயல்படும் ஓர் அமைப்பு. இந்த ஆண்டு செப்டம்பர் 14 நடைபெற்ற போராட்டத்துக்கு, பங்களா போக்கோ அமைப்பு தலைமை ஏற்று ஒருங்கிணைத்தது. கொல்கத்தாவின் ஜாதவ்பூர் சுலேகா சந்திப்பில் தொடங்கிய போராட்டப் பேரணி கரியாஹட் சந்திப்பு வரை நீடித்தது. பேரணியின்போது ‘இந்தித் திணிப்பு எதிர்ப்பு’, ‘மொழி சமத்துவம் வேண்டும்’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளைப் போராட்டக்காரர்கள் ஏந்திச் சென்றனர். பங்களா மொழிக்காக மட்டுமன்றி, அனைத்து இந்தி அல்லாத மொழிகளின் உரிமையைக் காக்கவே இந்தப் போராட்டம் எனப் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.