• September 16, 2025
  • NewsEditor
  • 0

மனிதர்களைப் போலவே, விலங்குகளும் மொபைல் ஃபோன்களுக்கு அடிமையாகும் பழக்கம் சீனாவில் அதிகரித்து வருவதாகப் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

ஷாங்காய் வனவிலங்கு பூங்காவில் உள்ள “டிங் டிங்” என்ற இரண்டு வயது குட்டி சிம்பன்சி ஒன்று, பார்வையாளர்கள் காட்டும் ரீல்ஸ் மற்றும் குறும் வீடியோக்களுக்கு அடிமையானதால், இந்த விநோதமான தடையை பூங்கா நிர்வாகம் பிறப்பித்துள்ளது.

இந்தச் சம்பவம், சமூக வலைதளங்களில் வைரலாகி, விலங்குகளின் நலன் குறித்த ஒரு புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஷாங்காய் வனவிலங்கு பூங்காவின் செல்லப் பிள்ளையாக வலம் வருவதுதான் இந்த “டிங் டிங்”. குழந்தையைப் போலவே குறும்புகொண்ட இந்தக் குட்டி சிம்பன்சியைக் காண, தினமும் ஏராளமான பார்வையாளர்கள் கூடுகின்றனர். அப்படி வரும் பார்வையாளர்கள், டிங் டிங்கின் கவனத்தை ஈர்ப்பதற்காக தங்கள் மொபைல் போன்களில் உள்ள ரீல்ஸ் மற்றும் வேடிக்கையான வீடியோக்களை, அதன் கூண்டின் கண்ணாடி வழியாகக் காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

வேடிக்கையான வீடியோக்கள் காண்பதில் டிங் டிங் அதிக ஆர்வம் காட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோக்களின் ஒளியும், ஒலியும் அதைக் கவர்ந்ததால், நாளடைவில் இது ஒரு பழக்கமாக மாறி டிங் டிங் ஒரு மொபைல் போன் அடிமையாகவே மாறியது.

இதன் தாக்கத்தை புரிந்துகொண்ட பூங்கா நிர்வாகம், உடனடியாக ஒரு நடவடிக்கையை எடுத்தது. டிங் டிங்கின் கூண்டிற்கு வெளியே, ஒரு பெரிய அறிவிப்புப் பலகையை வைத்தது. அதில், டிங் டிங்கின் படத்துடன், ஆங்கிலத்தில் “Stop! Stop!” மற்றும் “No” என்றும், சீன மொழியில் “எனக்கு மொபைல் போன்களைக் காட்டாதீர்கள்” என்றும் எழுதப்பட்டுள்ளது.

ஏன் இந்தத் தடை?

இது குறித்துப் பூங்கா ஊழியர் ஒருவர் கூறுகையில், “அதிகப்படியான ஸ்கிரீன் நேரம், டிங் டிங்கின் கண் பார்வையைப் பாதிக்கும். ஒரு சிம்பன்சியால் தெளிவாகப் பார்க்க முடியாவிட்டாலோ மனிதர்களுடன் சரியாகத் தொடர்பு கொள்ள முடியாவிட்டாலோ, அது கவலைக்குள்ளாகி, மன அழுத்தத்திற்கு ஆளாகும்” என்று கூறியிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *