
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் அமைந்திருக்கிறது கரியாலூர் காவல் நிலையம். இந்தக் காவல் நிலையத்தில் செயல்பட்டு வந்த ஒரு பெட்டிக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த புகாரில், அந்தக் கடையின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர் கரியாலூர் போலீஸார்.
இந்த நிலையில்தான் இந்தக் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராகப் பணியாற்றிய ஏட்டு பிரபு, அந்தக் கடை உரிமையாளரின் 17 வயது மகளை சந்தித்திருக்கிறார். அப்போது, `உன் அப்பாவை இந்த கேஸில் இருந்து நான் ரிலீஸ் செய்து விடுகிறேன். ஆனால் அதற்கு நீ என்னுடன் அட்ஜஸ்ட் பண்ணனும்’ என்று கூறி, பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
இதுகுறித்து அந்தப் பெண்ணின் தாய்க்கு தெரிய வந்ததும், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதனடிப்படையில் கள்ளக்குறிச்சி எஸ்.பி மாதவன், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஷ்ணுப்பிரியா உள்ளிட்டவர்கள், ஏட்டு பிரபுவை கச்சிராப்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் ஏட்டு பிரபு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. அதையடுத்து போக்சோ, வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், ஏட்டு பிரபுவை கைது செய்தனர். அதன்பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரபுவின் அறையில் இருந்த நாட்டுத் துப்பாக்கிகள், சாராயம், கஞ்சா, ஆணுறைகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி, கரியாலூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.