
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனமான பெப்சிக்கும் மோதல் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் புதிய சங்கத்தைத் தொடங்க இருப்பதாக அறிவித்தது.
இதனால் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்களில் பெப்சி உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டாம் என அவ்வமைப்பு அறிவித்தது. இதை எதிர்த்து, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இப்பிரச்சினை தீர்க்க, ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜனை மத்தியஸ்தராக நீதிமன்றம் நியமித்தது. மத்தியஸ்தர் நடத்திய பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் சமரசம் செய்து கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டதை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.