
அதிமுக-விலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று செப்டம்பர் 5-ம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள்கள் கெடு விதித்திருந்தார்.
அந்தக் கடைசி நாளான நேற்று, தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வடபழனியில் அ.தி.மு.க பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிலரைப் பெயர் குறிப்பிடாமல் மறைமுகமாகக் கடுமையக்ச் சாடினார்.
கூட்டத்தில் தன்னுடைய உரையில் எடப்பாடி பழனிசாமி, “தருமபுரியில் இந்த மாதம் 17, 18 தேதிகளில் சுற்றுப்பயணம் வைத்திருந்தேன்.
வானிலை அறிக்கையில் மழை வருவது உறுதியானதால் அந்தத் தேதியில் அங்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளாமல், இதே மாதம் 28, 29 தேதிகளில் தருமபுரியில் சுற்றுப்பயணம் தொடரும் என்று அறிவித்தேன்.
உடனே, மத்திய உள்துறை அமைச்சரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த போகிறார் என்று செய்தி வெளியாகிறது.
அ.தி.மு.க-வை எவராலும் எதுவும் செய்ய முடியாது. எங்களுக்கு ஆட்சி அதிகாரத்தை விட தன்மானம்தான் முக்கியம்.
சிலபேரை கைக்கூலியாக வைத்துக்கொண்டு ஆட்டம் போடுகின்றனர். கைக்கூலிகள் யாரென்று அடையாளம் கண்டுவிட்டோம். விரைவில் முடிவு கட்டப்படும்.
அ.தி.மு.க தலைமை அலுவலகத்தை அடித்து நொறுக்கியவர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டுமா?
அ.தி.மு.க ஆட்சியைக் கவிழ்க்க 18 எம்.எல்.ஏ-க்களைக் கடத்திக் கொண்டு போனவரை கட்சியில் சேர்க்க வேண்டுமா? யாரும் என்னை மிரட்டி பார்க்க முடியாது.

அ.தி.மு.க ஆட்சியில் இருந்தபோதும் சரி, இப்போதும் சரி, மத்தியில் இருக்கின்றவர்கள் யாரும் எந்த அச்சுறுத்தலும் கொடுக்கவில்லை.
அம்மாவின் மறைவுக்குப் பிறகு சில பேர் கட்சியைக் கபளீகரம் செய்து ஆட்சியைக் கவிழ்க்க பார்த்தார்கள்.
அப்போது காப்பாற்றியவர்கள் மத்தியில் இருந்தவர்கள். அ.தி.மு.க-வுக்கு எவர் துரோகம் செய்தாலும் அவர் விலாசம் இல்லாமல் போய்விடுவார்” என்று காட்டமாகப் பேசினார்.