• September 15, 2025
  • NewsEditor
  • 0

சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை பயன்படுத்த அருகதை உள்ள ஒரே கட்சி அ.தி.மு.க மட்டுமே. புதிதாக வரும் கட்சிகள் எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை பயன்படுத்தி அவரது புகழை தங்களுக்காக திருட பார்க்கிறார்கள் என விஜய் மீது குற்றச்சாட்டு. எம்.ஜி.ஆரின் புகழும் பெருமையும் அ.தி.மு.க-விற்க்கே சொந்தம். நடிகர்கள், திரை நட்சத்திரங்கள் யார் வந்தாலும் அவர்களை பார்க்க பெரும் கூட்டம் கூடும். விஜய்க்கு கூடும் கூட்டம் கட்டுக்கோப்பான கூட்டம் அல்ல காட்டாறு போல ஓடும் கூட்டம். விஜய்க்கு வரும் கூட்டம் ஒட்டாக மாற வாய்ப்பு இல்லை. விஜய் தலைமையில் மூன்றாவது அணி அமையலாம், ஆனால் அந்த கூட்டணி வெல்வதற்கான வாய்ப்பு உறுதியாக கிடையாது.

TVK மதுரை மாநாடு முகப்பு

அதேபோல் எம்.ஜி.ஆர் கட்சி துவங்கியதையும், விஜய் கட்சி துவங்கியதும் ஒப்பிட்டு பார்ப்பது தவறு. எம்.ஜி.ஆர் பலகட்ட மக்கள் பணியை மேற்கொண்ட பின்னரே கட்சியை துவக்கினார். இரண்டு மாதத்தில் கட்சியை துவங்கவில்லை. தினசரி மாநாட்டை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் நாங்கள். வாரத்திற்கு ஒரு நாள் மக்களை சந்தித்து ஒட்டுமொத்த மக்களையும் ஒன்று திரட்டி அத்துமீறி அடங்கமறுப்பது அநாகரிகமான அரசியல் நிலைப்பாடாக மக்கள் பார்க்கிறார்கள். த.வெ.க-வினரால் ஒரு இயக்கத்தை நடத்தக்கூடிய திறமை கிடையாது. ஏதோ வந்தார்கள், ஆட்டம் போட்டார்கள் சென்றார்கள் என்ற அரசியல் வாழ்வு இருக்கும். வென்றார்கள், வாழ்ந்தார்கள் என்ற நிலைப்பாடு இருக்காது. விஜய்யிடம் ரசிகர்கள் இருக்கிறார்கள் ஆனால் படை வீரர்களும், படைத்தளபதியும் இல்லை. இயக்கத்தை கட்டுக்கோப்பாக கொண்டு செல்லும் அளவிற்கு அவர்களிடம் பக்குவம் இல்லை… ஆகவே அதனை படித்து பக்குவப்பட்டு பல களங்கள் கண்டு அதற்கு பின்புதான் தேர்தலில் வெல்வார்களா? வீழ்வார்களா? என்பது தெரியவரும்.

ராஜேந்திர பாலாஜி

விஜய் தலைமையில் மூன்றாவது அணி அமைந்தால் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டும் என அவரை ஏற்று கொண்டவர்களால் மிகப்பெரிய அணி உருவாகியுள்ளது. அ.தி.மு.க-வில் யார் யாரை சேர்க்க வேண்டும், யாரை சேர்க்கக் கூடாது, யார் ஒற்றைக் கருத்து உடையவர்கள், யாரால் இயக்கத்திற்கு லாபம் என்பதை கணக்கு போட்டு சேர்க்கும் இடத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளார். அ.தி.மு.க – பாஜக கூட்டணியை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி சொல்வது தான் வேத வாக்கு, வேறு யாரு கருத்து சொன்னாலும் அது பொருட்படுத்தப்பட மாட்டாது.

ராஜேந்திர பாலாஜி

எடப்பாடி பழனிசாமி சொல்வதைத்தான் இரண்டு கோடி தொண்டர்களும் கேட்பார்கள். எடப்பாடி பழனிசாமி எடுக்கும் முடிவு தான் இறுதி முடிவு. வெற்றியை நோக்கி காய்களை நகர்த்தக்கூடிய திறமையும் பண்பும் கொண்டவராக எடப்பாடி பழனிசாமி உள்ளார்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *