
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்ட அந்தக் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.
பேரறிஞர் அண்ணாதுரை பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 15) தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்துள்ளவர், கட்சி பெயர் வரும் நவம்பர் 20-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் எனக் கூறியுள்ளார்.
புதிய கொடியில் வழக்கமான திராவிட கட்சிகளின் நிறங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 25% கறுப்பு நிறமும் 75% சிகப்பு நிறமும் இடம்பெற்றுள்ளது. அத்துடன் 7 மஞ்சள் நிற நட்சத்திரங்கள் உள்ளன.
புதிய கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள மதிமுக-விலிருந்து வெளியேறிய மல்லை சத்யா, புலவர் சே. செவிந்தியப்பன், செங்குட்டுவன், அழகு சுந்தரம், வல்லம் பசீர், சேலம் ஆனந்தராஜ், இளவழகன் உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மல்லை சத்யா இடையே கருத்து வேறுபாடு உருவாகியிருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் சத்யா கட்சியின் நன்மதிப்பு, கொள்கை மற்றும் ஒற்றுமைக்கு எதிராகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டப்பட்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.