• September 15, 2025
  • NewsEditor
  • 0

வாழ்க்கையின் அன்றாடத் தேவைகளுக்காக ஒவ்வொருவரும் வேகமாக ஓடிக்கொண்டிருப்பதால் இளைப்பாறுதல் என்பது அனைவருக்கும் அவசியமாகிறது. கவலைகள் மறக்க, மனசு, உடம்பு புத்துணர்ச்சி பெற அனைவரும் முதலில் தேர்வு செய்வது சுற்றுலாத் தலங்களையே. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தென்பெரம்பூர் அணைக்கட்டு அனைவரையும் அன்பால் அணைத்துக்கொள்கிறது. தாலாட்டி, கவலை மறக்கச் செய்கிறது. பிறந்த புதிய மனிதனாகப் புத்துணர்ச்சி தந்து திருப்பி அனுப்புவதுடன் ஒன் டே டூருக்கு ஏற்ற இடமாகவும் திகழ்ந்துவருகிறது.

தென்பெரம்பூர் அணைக்கட்டு

திருச்சியிலிருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவில் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே அமைந்துள்ளது தென்பெரம்பூர் அணைக்கட்டு. கல்லணைத் தலைப்பிலிருந்து வெளியேறுகிறது காவிரியின் கிளை ஆறான வெண்ணாறு. தண்ணீர் தவழ்ந்து, ததும்பி அழகுற வந்து சேரும் இடமே தென்பெரம்பூர். பரந்துவிரிந்து கடல் போல் காட்சியளிக்கக்கூடிய பகுதி. இதனைப் பொதுப்பணித்துறையினர் நீரொழுங்கி அணைக்கட்டு என்றும் பொதுமக்கள் தென்பெரம்பூர் அணைக்கட்டு என்றும் அழைக்கின்றனர். அணைக்கட்டு கட்டப்பட்டு 140 வருடங்கள் நிறைவடைந்துவிட்டன. ஷட்டர்ஸ் வழியாக வெளியேறும் தண்ணீரின் வேகத்துக்கு ஈடுகொடுத்து இன்றைக்கும் கம்பீரமான அழகுடன் காட்சி கொடுத்துக்கொண்டிருக்கிறது.

தென்பெரம்பூர் அணைக்கட்டிலிருந்து வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என மூன்று ஆறுகளாகப் பிரிந்து செல்வதே அனைவரையும் ஈர்க்கக் கூடியதாகவும், இதன் முத்தாய்ப்பான விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. கடலில் நதி கலப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் இங்கு கடலாகக் காட்சியளிக்கும் அணைக்கட்டிலிருந்து அகலமான பைபாஸ் சாலை போல் நீண்டபடி நதி தன் பயணத்தைத் தொடங்குகிறது. இந்த அமைப்பிலான அணைக்கட்டு அனைவரது மனதையும் கொள்ளைகொள்கிறது.

ஆறு

அணைக்கட்டுக்கு அருகே சிறுவர்களுக்கான பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஜல்லிகட்டு வீரன் காளையை அடக்குவது போன்ற சிலைகள், கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துவது போன்ற சரஸ்வதி சிலை, சுற்றுச் சுவரில் தேசியத்தலைவர்கள் படங்கள், செயற்கை நீருற்று மற்றும் சிறுவர்கள் விளையாடுவதற்கான உபகரணங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மரங்களுக்கு நடுவே இந்தப் பூங்கா அமைந்திருப்பது அதன் அழகைக் கூட்டுகிறது. மரங்களின் அடிப்பகுதியைச் சுற்றி வட்ட வடிவில் சுற்றுலாப் பயணிகள் அமர்வதற்கான சிமென்ட் தளம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆறுகளுக்கு நடுவே அமைந்துள்ள மண் திட்டில் விண்ணை நோக்கி வளர்ந்துள்ள மரங்கள் நாங்கள் அணைக்கட்டின் பிள்ளைகள் என்று சொல்வதைப் போல் காற்றில் அசைந்தாடுகின்றன. மரங்களைக் காப்பதற்காகச் சிறிய அளவிலான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆற்றுக்கு நடுவே இருக்கும் மரங்களைப் பார்க்கும்போதே நமக்குள் ஒரு விதமான ஆனந்தம் நம்மையறியாமல் துள்ளிக் குதிக்கத் தொடங்கிவிடும். நீந்திக் களைத்த மீன்கள் தண்ணீர் வெளியேறும் இரண்டு ஷட்டர்களுக்கு நடுவே தண்ணீர் வராத இடத்தில் பாறையில் பட்டு சொட்டுச் சொட்டாகத் தெளிக்கும் தண்ணீருக்கு மத்தியில் கூட்டமாகப் படுத்து ஓய்வெடுப்பது நம் கண்களுக்கு விருந்தாக அமைகிறது.

ஓய்வெடுக்கும் மீன்கள்

வெண்ணாற்றின் ஓரத்தில் சிறிய அளவில் ஜம்பு காவிரி என்ற பாசன வாய்க்கால் பயணப்படுகிறது. முட்டிக்கால் அளவில் தண்ணீர் செல்லக் கூடிய அதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆபத்து ஏதுமின்றிக் குளித்து மகிழலாம். தண்ணீரின் தேவைக்கேற்ப அந்த வாழ்ய்க்காலில் பொதுப்பணித்துறையினர் தண்ணீரைத் திறந்து விடுகின்றனர். மெயின் ஆறுகளில் ஆழம் அதிகமாக இருக்கும் என்பதால் சுற்றுலாப்பயணிகள் இறங்கிக் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் எச்சரிக்கைப் பலகையும் வைக்கப்பட்டுள்ளது. அணைக்கு மேல் டூ வீலர் கடந்து செல்லக் கூடிய அளவில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறையினர் சிசிடிவி கேமரா அமைத்துக் கண்காணித்து வருகின்றனர். ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கையும் செய்யப்படுகிறது. அதையும் மீறி ஆபத்தை உணராமல் இளைஞர்கள் சிலர் ஆற்றுக்குள் இறங்கிக் குளிக்கின்றனர். சனி, ஞாயிறு என இரண்டு நாள்களும் சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து சுற்றுலாப் பயணிகள் சாப்பாடு தயார் செய்து எடுத்துக் கொண்டு வருவதுடன் குடும்பத்தோடு உட்கார்ந்து சாப்பிட்டு என்ஜாய் செய்துவிட்டுச் செல்கின்றனர். அந்த இரண்டு நாள்களிலும் அதிக அளவில் கூட்டம் வருவதால் அப்போது மட்டும் இரண்டு போலீஸ் பாதுகாப்புப் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர், மற்ற நாள்களில் போலீஸ் இல்லாதது பெரும் குறை.

அணையின் நடுவில் மரங்கள்

எப்படிச் செல்வது?

திருச்சியிலிருந்து கல்லணை வழியாக திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூதலூர் வழியாக தென்பெரம்பூரை சுமார் ஒரு மணி நேரத்தில் வந்தடையலாம். தஞ்சாவூரிலிருந்து சக்கரசாமந்தம் என்ற கிராமம் வழியாகவும் செல்லலாம். தஞ்சையிலிருந்து பேருந்து வசதி உள்ளது. திருச்சியிலிருந்து முறையான பேருந்து வசதி கிடையாது. காரில் வருபவர்களுக்கு ஏற்ற இடம். வரும் வழியில் இரு புறமும் ஆங்காங்ககே பச்சைப்பசேல் எனப் படர்ந்துள்ள வயல்கள் மனதை மயக்கும். சாப்பாடு எடுத்துக்கொண்டு காரில் வந்து சென்றால் சுமார் ரூ.600 மட்டுமே செலவாகும். அதில் ஐந்து பேர் வரை வந்து என்ஜாய் செய்துவிட்டுச் செல்லலாம் என்கின்றனர் அதன் ஊழியர்கள்.

கவனத்தில் கொள்க…

ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் இருப்பதால் கேன்டீன், ஹோட்டல் போன்ற வசதிகள் எதுவும் இல்லை. பெண்கள், சிறுமிகள் என பலரும் ஆனந்தமாகக் குளித்துவிட்டு உடைமாற்றுவதற்கான இடம் இல்லாததால் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். கழிப்பறை வசதியும் சுத்தமாக இல்லை. ஆறு பாய்கின்ற இடத்தில் இருந்தாலும் குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் வசதிக்கான ஏற்பாட்டைச் செய்யவில்லை. மதுப்பிரியர்கள் அங்கேயே மது அருந்திவிட்டு அலப்பறையில் ஈடுபடுகின்ற சம்பவங்களும் அவ்வப்போது நடக்கின்றன.

பூங்கா

அவசர கதியில் ஓவ்வொருவரும் ஓடிக்கொண்டே இருப்பதால் மனதைப் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்வது என்பது அவசியமாகிறது. அப்போதுதான் மனசு மட்டுமல்ல, உடம்பும் நாம் சொல்வதைக் கேட்கும். மனதைப் புத்துணர்ச்சியாக்க ரம்மியமான சுற்றுலாத்தலங்களுக்கு நாம் படையெடுக்கிறோம். அந்த வகையில் பட்ஜெட் டூருக்கும், ஒன் டே டூருக்கும் ஏற்ற இடமாகவும் தென்பெரம்பூர் அணைக்கட்டு திகழ்கிறது.

இங்கு ஒரு முறை விசிட் அடித்தால் மனம் லேசாகி நாம் புத்துணர்ச்சி பெறுவதை உடனடியாக உணர முடியும் என்பதால் சுற்றுலாப்பயணிகள் அணைக்கட்டை அன்போடு அணைத்துக் கொள்ளப் படையெடுக்கின்றனர். நீங்களும் ஒரு முறை விசிட் அடிங்க. என்ஜாய் பண்ணுங்க!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *