
அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படத்தின் தயாரிப்பாளரான மைத்ரி மூவி மேக்கர்ஸுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் இளையராஜா.
அதில் தனது அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்ட பாடலை படத்திலிருந்து நீக்க வேண்டும், நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளதுடன் இல்லாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 8ம் தேதி வெளியான உயர் நீதிமன்ற தீர்ப்பு (OA No. 889/2025, CS No. 226/2025)-இன் படி, மைத்ரி மூவி மேக்கர்ஸ் இளையராஜாவின் காப்புரிமை பெற்ற பாடல்களை திரையிட, ஒளிபரப்ப, ஸ்ட்ரீம் செய்ய தடை விதிக்கப்பட்டிருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைமீறி குட் பேட் அக்லி படத்தில் ‘ஒத்து ரூபாயும் தாரே’, ‘இளமை இதோ இதோ’, ‘என் ஜோடி மஞ்ச குருவி’ ஆகிய பாடல்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு குறித்து நன்றாக அறிந்திருந்தும், பாடல்களை பயன்படுத்துவது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது, இளையராஜாவின் வழக்கறிஞர் குழுவான மேத்ஸ் லாவ் அசோசியேட்ஸ் அனுப்பிய நோட்டீஸில்.

உடனடியாக குட் பேட் அக்லி படத்தின் திரையிடல், ஸ்ட்ரீமிங்கை நிறுத்த வேண்டுமென்றும், இளையராஜாவிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கேட்க வேண்டுமென்றும் நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் அனைத்து பின்விளைவுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்றும் நோட்டீஸில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.