
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் போட்டிகளில் ஆடக்கூடாது என்று பல தரப்பிலிருந்து குரல்கள் எழுந்தன. இப்போதும் வந்து கொண்டிருக்கிறது.
இத்தகைய சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஆசிய கோப்பைத் தொடரில் நேற்று (செப்டம்பர் 14) நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வென்றது.
ஆனால், வெற்றிக்குப் பின்னர் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்துவிட்டனர்.
அதற்கு இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், “பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாதிப்புக்குள்ளான மக்களின் பக்கம் நிற்பதன் மூலம் எங்களின் ஒற்றுமையை வெளிக்காட்ட விரும்புகிறோம்” என்று காரணம் தெரிவித்திருக்கிறார்.
இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த நிலையில், பாகிஸ்தானுடன் இந்தியா ஏன் விளையாடுகிறது என்பது குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார்.
அதில் கிரண் ரிஜிஜூ, “இந்தப் போட்டியைப் பொறுத்தவரை இதுவொன்றும் இந்தியா, பாகிஸ்தான் இருதரப்பு தொடர் அல்ல.
ஆசிய கோப்பையில் இந்தியா விளையாடவில்லை என்றால், தொடரிலிருந்து இந்தியா வெளியேறிவிடும்.
மேலும், ஒலிம்பிக், உலகக் கோப்பை போன்றவை பாகிஸ்தானுக்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும்தான்.
ஒரு நாட்டுடனான பகை காரணமாக நாம் ஒலிம்பிக்கிற்கு செல்லவில்லை என்றால், இழப்பு யாருக்கு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
#WATCH | Mumbai: On India vs Pakistan match in the Asia Cup yesterday, Union Minister Kiren Rijiju says, "… As far as this cricket match is concerned, it is not a bilateral game between India and Pakistan. If India does not play in the Asia Cup, then India will be out. The… pic.twitter.com/Qcxr5b0B2X
— ANI (@ANI) September 15, 2025
உங்களின் உணர்வு சரிதான், ஆனால் அந்த உணர்வுக்குப் பின்னால் பகுத்தறிவு சிந்தனை இருக்க வேண்டும்.
ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு, ஆசிய சாம்பியன்ஷிப், உலகக் கோப்பை, ஆசிய கோப்பை போன்றவற்றில் பல நாடுகளும் ஒன்றாக இணைந்து விளையாடுகின்றன.
இங்கு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தனி விளையாட்டு இல்லை” என்று கூறினார்.
பாகிஸ்தானுக்கெதிரான போட்டியில் இந்திய வீரர்களின் இத்தகிய செயல் குறித்து உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.