• September 15, 2025
  • NewsEditor
  • 0

பாஜக கூட்டணி அரசு கடந்த ஏப்ரலில் நிறைவேற்றிய வக்ஃப் திருத்த மசோதா 2025-க்கு எதிராக அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், தனிநபர்கள் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை விரித்து வந்த உச்ச நீதிமன்றம், வக்ஃப் சட்ட திருத்தத்தை செயல்படுத்த இடைக்கால தடைவிதித்து தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பில், “ஒரு நபர் 5 ஆண்டுகள் இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவராக இருந்தால் மட்டுமே வக்பு வழங்க முடியும் என்ற திருத்தத்திற்கு தடை.

வாரியத்தில் இஸ்லாமியர்கள் அல்லாத உறுப்பினர்கள் 3 பேருக்கு மேல் இருக்கக் கூடாது.

வக்ஃப் நிலம் தொடர்பாக மூன்றாம் தரப்பு உரிமைகளை உருவாக்கும் வகையில் ஆட்சியருக்கு அத்தகைய அதிகாரங்களை வழங்குவதற்கு தடை” என தடைகளை விதித்தது.

Waqf | வக்ஃப் திருத்த மசோதா

மேலும், “முழு சட்டத்தையும் நிறுத்தி வைக்க முழுமையான முகாதிரங்களை காண முடியவில்லை” என்ற உச்ச நீதிமன்றம், “வக்ஃப் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முடிந்தவரை இஸ்லாம் மதத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

ஆனால், முஸ்லிம் அல்லாத ஒருவரை தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்க அனுமதிக்கும் திருத்தத்தை நிறுத்தி வைக்க முடியாது” என்று தீர்ப்பில் குறிப்பிட்டது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பு குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்திருக்கிறார்.

அந்தப் பதிவில் ஸ்டாலின், “ஒன்றிய பா.ஜ.க அரசு, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக சட்டவிரோதமாகச் செய்துள்ள திருத்தங்களை நீக்குவதை நோக்கிய முக்கிய நகர்வாக இன்றைய நீதிமன்ற உத்தரவு அமைந்துள்ளது.

இந்த சட்டத்திருத்த முன்வரைவு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே, தி.மு.க இதனைத் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள பலரோடு சேர்ந்து வெற்றியும் கண்டுள்ளது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தி.மு.க தலைமையிலான தமிழ்நாடு அரசும் ஒன்றிய அரசு வக்ஃப் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்திச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் பா.ஜ.க.வின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், இன்றைய உத்தரவு இஸ்லாமியர்களின் மத உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் உச்ச நீதிமன்றம் பாதுகாக்கும் என மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வலுப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *