
‘முத்த மழை இங்கு கொட்டித் தீராதோ… முல்லை இரவுகள் பற்றி எரியாதோ…’ இந்தப் பாடலை மெல்லிய டெசிபலில் ஒலிக்கவிட்டுக் கொண்டே உங்கள் இணைக்கு முத்த மழை பொழிந்து பாருங்களேன். காமப் புத்தகத்தில் முத்தம் எவ்வளவு முக்கியமான பாடம் என்பதை அதிகாரபூர்வமாகத் தெரிந்துகொள்வீர்கள். முத்தத்தை மையப்படுத்தி பாடாத கவிஞர்களும் கிடையாது, திரைப்பட பாடலாசியர்களும் கிடையாது. காரணம் முத்தங்கள் உணர்வுபூர்வமானவை; உயிர்ப்பூட்டும் வல்லமை படைத்தவை.
காதலின் திறவுகோலாக முத்தங்களைச் சொல்லலாம். ‘ஐ லவ் யூ…’ என்று வார்த்தைகளால் முதன்முதலில் காதலை வெளிப்படுத்தினாலும், முதல் முத்தம் கொடுக்கும்போதுதான் உணர்வளவில் காதல் உறுதி செய்யப்படுகிறது. அன்பின் வெளிப்பாடு அல்லவா முத்தம்! காதலை அழுத்தமாகத் தெரிவிக்கும் ஆயுதம்தானே முத்தம்! காமத்தைத் தூண்டும் காமத் திரி முத்தமே! காமத்தை நீட்டிக்கச் செய்யும் பக்க விளைவில்லா மருந்தும் முத்தம்தான்! காதலின் அடையாளம்கூட முத்தம்தான்!

திருமணமான தொடக்கக் காலங்களில் முத்தச் சுவையை அனுபவித்துவிட்டு, போகப் போக முத்தங்களைப் பெரிதாக மதிக்காத தம்பதியினரால் காமக் கடலில் திருப்திகரமாக நீந்த முடியாது. முத்தங்கள் பரிமாறிக்கொள்ளும்போது உணரப்படும் வித்தியாசமான சுவையை வாழ்நாள் முழுவதும் தக்கவைத்துக்கொள்வது முக்கியம். திருமணமான சில மாதங்களுக்குப் பிறகு தாம்பத்யத்தின்போது முத்தத் தொடக்கம் எல்லாம் இல்லாமல், நேரடியாக உடலுறவுக்குள் நுழைந்து அவசர கதியில் காம இச்சையைத் தீர்த்துக்கொள்ளும் கணவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். தனக்கு ஏற்பட்டிருக்கும் மன அழுத்தத்தைக் குறைக்க, மனைவியை ஓர் இயந்திரமாகப் பயன்படுத்தும் கணவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

முத்தங்களைக் கொடுத்து உடலை உசுப்பேற்றி, படிப்படியாகப் படிநிலை அறிந்து காமத்தின் உச்சம் தொடுவதுதானே மன்மதக் கலை. அனைத்திலும் அவசரம் போல காமத்திலும் அவசரம். பாஸ்ட்-ஃபார்வார்டு உலகத்தி்ல் இது சகஜம் தானே என்று வீம்புக்குப் பேசுபவர்கள், தன் இணையின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காதவர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.
பல நேரங்களில் கணவனிடமிருந்து மனைவி எதிர்பார்ப்பது அன்பைப் பொழியும் நெற்றி முத்தம்தான். அதில் காமத்தின் இச்சை இல்லையெனினும், இவர் நம்பகமானவர் என்பதை உறுதிப்படுத்தும் அன்பின் வெளிப்பாடு. உடலுறவில் ஆத்மார்த்தமாக ஈடுபட அந்த நம்பிக்கை உதவும். மனைவியின் முத்தங்களோ கணவர்களுக்கான தன்னம்பிக்கையை அதிகரிக்கும் ஹார்ட்டின்கள். சகட்டு மேனிக்கு முத்தங்கள் பதியப்பட வேண்டும்.

முத்தத்துக்கு எல்லை உண்டா என்ன அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் தான் முத்தமிட வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறதா என்ன? உடலுறவு மயக்கத்தில் இருக்கும்போது உடல் எதற்காகப் படைக்கப்பட்டது எனும் கேள்வியை எழுப்பினால் ‘முத்தமிட்டு பரவசம் அடைவதற்காகத் தான்…’ என மெல்லிய குரலில் உரைப்பார்கள் ஆண்களும் பெண்களும். முத்தம் உண்டாக்கும் காமக் கிளர்ச்சிக்கு அவ்வளவு வலிமை இருக்கிறது. உடலின் எல்லா பாகங்களும் முத்தங்களுக்காகப் படைக்கப்பட்டவை தான்.
முத்தமும் ஒரு தியானமே…
முத்தமிடும் தருவாயில் ஆண் உதடுகளும் பெண் உதடுகளும் இணைந்துகொள்ள, கண்களோ மூடிக்கொள்ள வேறு எவ்வித சிந்தனையும் தோன்றாது. தியான நிலைக்கு ஒப்பானது முத்தமிடும் தருணம். நான்கு உதடுகளின் அசைவின் மூலம் உண்டாகும் உன்னதமான ரகசிய ஓசை தியானிக்கும் போது கேட்கப்படும் மனதை வருடும் மெல்லிய இசைக்கு ஒப்பானது. இந்தத் தியான முத்தச் சூழல் மனதில் உள்ள குழப்பங்களை எல்லாம் வெளியேற்றி புத்துணர்வை அளிக்கவல்லது.

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை முத்தங்களைப் பொழிந்து புது மொழியால் கலவிக் கவிதைகள் பேசுங்கள். பாரபட்சமின்றி வழங்கப்படும் முத்தங்கள் காமக் கணைகளை அழுத்தமாக வீச பேருதவி புரியும். புணர்ச்சியை அழகியலாக மாற்ற முத்தங்களின் ஆதரவு எவ்வளவு அவசியம் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.
ஒரு குழந்தைக்குக் கொடுக்கப்படும் முத்தத்துக்கும், மனைவிக்கோ, கணவனுக்கோ இடையே பரிமாறப்படும் முத்தத்துக்கும் தான் எவ்வளவு வேறுபாடுகள்… இரண்டும் அன்பின் வெளிப்பாடுதான். ஆனால், வேறு பரிமாணங்கள்!
‘மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும், முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என…’ கவிஞர் அழகியலாய் வடித்த வார்த்தைகள் அனைவருக்கும் நினைவிருக்கலாம். அதைப் போல உடலுறவுக்காகத் தயாராகும் நிலையில் பரிமாறப்படும் முத்தங்கள் அனைத்துமே காமப் பிரிவைச் சேர்ந்தவைதான். படுக்கையறையில் பரிமாறப்படும் முத்தங்கள் காமத்தின் தூண்டுகோல்கள். வெறும் முத்தங்களை வைத்தே உடலுறவின் நேரத்தை நீட்டித்து, ஆணும் பெண்ணும் உச்சக்கட்டம் அடைய முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா… உடலுறவில் நாட்டமில்லாமல் இருக்கும் ஆண்களை வழிக்குக் கொண்டு வர முத்த மழை பொழிந்தால் போதும், வெற்றி கிடைக்கத் தொடங்கும்.
உடலுறவு நீட்சி அடையும்போதும் முத்த மழையை நீரிடியாக (Cloud burst) தேகங்களில் இறக்கத் தவறாதீர்கள். ஆணுறுப்பின் விறைப்புத் தன்மை நீண்ட நேரம் நிலைத்திருக்கச் செய்ய முத்தங்கள் உதவும். விறைப்புத் தன்மையை அதிகரிக்க மருந்துகள் தேவையில்லை முத்தங்களே போதும்.
ஆணோ, பெண்ணோ முதன் முறையாக முத்தமிட்டபோது ஏற்பட்ட பரவசத்தை ஆயுள் முழுவதும் தக்க வைப்பதில்தான் தாம்பத்யத்தின் ரகசியம் இருக்கிறது.
எல்லாம் ஹார்மோன் செய்யும் விந்தையே. முத்தமிடுங்கள்… ஹார்மோன்கள் கொடுக்கும் பரவசத்தில் காம உலகை ஆட்சி செய்யுங்கள்.
முத்தமிட ஏற்ற பகுதியென்று ஏதாவது இருக்கிறதா… மருத்துவ ரீதியாக முத்தங்கள் வழங்கும் பயன்கள் என்ன… முத்தங்களின் அழுத்தம் சொல்ல வருவது என்ன…
அடுத்த அத்தியாயத்தில் தொடர்வோம்…