
பாடகர் சத்யன் 26 ஆண்டுகளுக்கு முன்பாக மேடைக் கச்சேரி ஒன்றில் பாடிய ‘காதலர் தினம்’ படத்தில் இடம்பெற்ற ‘ரோஜா ரோஜா’ பாடலின் காணொலி கடந்த சில வாரங்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சத்யன், 1996 ஆம் ஆண்டு முதல் சுமார் 2000க்கும் மேற்பட்ட இசைக் கச்சேரியில் பாடியவர். கமல்ஹாசன் நடித்த ‘வசூல்ராஜா’ படத்தில் இடம்பெற்ற ஹிட் பாடலான ‘கலக்கப் போவது யாரு’ பாடல் மூலம் சினிமாவில் பிரபலமானவர்.
இதையடுத்து யுவன், ஹாரிஸ் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்கள் இசையில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
2008-ம் ஆண்டு வெளியான ‘விழித்திரு’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் மாறினார். இவருடைய ‘அஸ்த்ராஸ்’ இசைக் குழு உலகம் முழுவதும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறது.
இன்றைய இசையமைப்பாளர்கள் மீண்டும் சத்யனுக்கு பாடல்கள் பாடும் வாய்ப்பைத் தர வேண்டும் என்று நெட்டிசன்கள் கூறிவருகின்றனர். அவர் பாடிய பழைய பாடல்களைத் தேடி நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.
இதற்கிடையில் பாடகர் சத்யன் பற்றிய சில நெகட்டிவான விஷயங்களை சமூக வலைத்தளங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
தற்போது இதுகுறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கும் பாடகர் சத்யன், “என் மீது அக்கறையுள்ள ரசிகர்களுக்கு நன்றி. உள்ளதை உள்ளபடி சில ஊடகங்கள் வெளியிட்டன. ஆனால், சில மீடியாக்கள் அவர்களின் சுயநலத்திற்காகத் தவறான தவல்களையும் செய்திகளையும் பரப்புகின்றனர். நான் சொல்லாததைச் சொன்னதாக வதந்திகள் பரப்புகிறார்கள்.
இது, இத்தனையாண்டு காலம் உழைத்து முன்னேறிய ஒருவனைக் குழிதோண்டிப் புதைப்பது மாதிரி… தயவு செய்து இதைச் செய்யாதீர்கள். நல்ல விஷயங்களுக்குக் காலம் எடுக்கும். ஆனால், கெட்டவை உடனே பரவும். அதனால், அடிப்படை அறத்துடன் நடந்துகொள்ளுங்கள்” என வேண்டுகோள் வைத்துள்ளார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…