
உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் என்ற இடத்தில் வசித்தவர் நாகேஷ்வர். இவரது மனைவி நேகா. இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. நாகேஷ்வர் அவர் வசித்த இடத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நெடுஞ்சாலையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். நாகேஷ்வர் தந்தை கேசவ் ராஜ் கொடுத்த புகாரில், “எனது மகன் பைக்கில் புறப்பட்டுச் சென்றான். ஆனால் அதன் பிறகு அவன் வீடு திரும்பவில்லை. மறுநாள் இறந்துவிட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது.
எனது மறுமகள் நேகாவிற்கு ஜிதேந்திரா என்பவருடன் திருமணம் தாண்டிய உறவு இருந்தது. அவர்கள் இரண்டு பேரும்தான் நாகேஷ்வரைக் கொலை செய்து சாலையோரம் தூக்கிப்போட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து நேகாவை அழைத்துச்சென்று விசாரித்தபோது தனது கணவனைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இது தொடர்பாக போலீஸார் கூறுகையில், ”நாகேஷ்வர் சில காலம் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில் சிறையில் இருந்தார். அந்நேரம் நேகாவிற்கு ஜிதேந்திராவுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
சிறையிலிருந்து வெளியில் வந்த பிறகு அவர்களின் தொடர்பைத் தெரிந்து கொண்ட நாகேஷ்வர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் நேகா தனது முடிவில் உறுதியாக இருந்தார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் நேகா தனது கணவனை விட்டுச் சென்றார். அவர்களைச் சேர்த்து வைக்க போலீஸாரும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். ஆனால் முடியாமல் போய்விட்டது.
எனவே நாகேஷ்வரை நேகா அடையாளம் தெரியாத இடத்திற்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு அவரை அளவுக்கு அதிகமாக மது குடிக்கச் செய்துள்ளார். அவர் சுயநினைவை இழந்தவுடன் ஜிதேந்திராவும், நேகாவும் சேர்ந்து கழுத்தை நெரித்தும், ஆயுதத்தால் தாக்கியும் கொலை செய்தனர்.
பின்னர் உடலை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிச்சென்றுள்ளனர். வாகனத்தில் முன்பகுதியில் அவர்களின் குழந்தை இருந்தது. பின்னால் நேகா தனது கணவனின் உடலை மத்தியில் வைத்துப் பிடித்துக்கொண்டார். ஜிதேந்திரா பைக்கை ஓட்டினார். அவர்கள் சம்பவ இடத்திலிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் எடுத்துச்சென்று சாலையில் உடலைப் போட்டுள்ளனர்.
விபத்தில் இறந்துவிட்டது போன்று ஜோடிக்க இது போன்று செய்துள்ளனர். அங்கிருந்து அவர்கள் மும்பைக்குச் சென்று வாழ்க்கை நடத்தலாம் என்று திட்டமிட்டு இருந்தனர். ஆனால் இருவரும் கைது செய்யப்பட்டுவிட்டனர்” என்று தெரிவித்தனர்.

நேகா போலீஸில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், ”தனது கணவர் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தி வந்தார். அவருடன் சேர்ந்து வாழமுடியாது என்று சொன்ன பிறகும் என்னை விடாமல் தொடர்ந்து துன்புறுத்தி வந்தார். அடிக்கடி புதுப்புது நம்பர்களிலிருந்து போன் செய்து சித்ரவதை கொடுத்தார். விவாகரத்து நிலுவையிலிருந்தபோதும், விடாமல் இது போன்று செய்து கொண்டிருந்தார்.
அதோடு ஜிதேந்திராவுடனும் அடிக்கடி சண்டையிட்டார். இதனால் வெறுத்துப்போய் அவரைக் கொலை செய்ய முடிவு செய்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.