
அதியன் ஆதிரை இயக்கத்தில் கலையரசன், தினேஷ், வின்சு, ரித்விகா, சபீர் உள்ளிட்டோர் நடிப்பில் வரவிருக்கும் திரைப்படம் தண்டகாரண்யம். வரும் செப்டம்பர் 19ம் தேதி இந்தத் திரைப்படம் வெளியாகவிருக்கிறது.
இந்த நிலையில் இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்வில் கலந்துகொண்ட தயாரிப்பாளரும் இயக்குநருமான பா.ரஞ்சித், நீலம் தயாரிப்பு நிறுவனம் குறித்தும், இத்திரைப்படம் குறித்தும் பேசினார்.
Pa Ranjith பேச்சு
“3 வருடம்தான் சினிமாவில் இருப்பேன் என்று நினைத்தேன்”
அவர், “தமிழ் சினிமாவில் வெறும் இயக்குநராக மட்டுமே நான் வரவில்லை. fine arts காலேஜில் படிக்கும்போதுதான் எனக்கு இயக்குநர் ஆக வேண்டும் என்றே தோன்றியது. இயக்குநர் ஆனால் இதுபோன்ற படங்களை எடுக்க வேண்டும் என்ற விருப்பத்தோடுதான் வந்தேன்.
3 வருஷத்துக்கு மேல இங்க இருக்க மாட்டேன் என்றே நம்பினேன். ஏனென்றால் நாம் பேசும் அரசியலை காலனி தாண்டி ஊருக்குள் பேசினாலே அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் இவ்வளவு பெரிய இடத்தில் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என யோசித்திருக்கிறேன். இதெல்லாம் என் மனதில் பெரிய கேள்வியாக இருக்கிறது.
என் அரசியலை எப்படி எல்லோருக்கும் பிடித்த ஒன்றாக மாற்றுவது என்பதைத்தான் நான் யோசித்துக்கொண்டிருந்தேன். எனக்குப் பிடித்த ஒரு படத்தை இயக்கிவிட்டு வெளியேறலாம் என்றுதான் நினைத்தேன்.
ஆனால் மக்கள் என்னை இயக்குநராக ஏற்றுக்கொண்டதைத் தாண்டி, தயாரிப்பாளராக ஏற்றுக்கொண்டார்கள். அதன் விளைவாக நீலம் இவ்வளவு பெரிய நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. பலர் இங்கிருந்து இயக்குநர்களாக மாறியிருக்கின்றனர். இது பெரிய மகிழ்ச்சியாகவும் உத்வேகமாகவும் இருக்கிறது” என்றார்.
ஓடிடி ஆதரவு இல்லை – மக்களை நம்பி வருகிறோம்
அத்துடன் ஓடிடி நிறுவனங்களின் ஆதரவு குறைந்துவிட்டதாகப் பேசிய அவர், “ஒரு சாதாரண கமர்ஷியல் படத்தை அல்லது ஆர்டிஸ்டிக் படத்தை எடுத்து வெளியிடுவதே இன்று மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. நாம் இந்த இரண்டையும் கடந்து அரசியல் கருத்துக்களைப் பேசுகிறோம். அரசியல் கருத்துக்களைப் பேசும் படங்களும் வெற்றிபெறும் என்பதை நீலம் இன்று நிரூபித்திருக்கிறது.
ஆரம்பத்தில் ஓடிடி நிறுவனங்கள் எல்லா படங்களையும் வாங்கினார்கள். இன்று, படத்தின் உள்ளடக்கத்தைப் பொருத்து முடிவெடுக்கும் அளவு அஜண்டா ஒன்று உருவாகியிருக்கிறது.

இந்திய அளவில் வலதுசாரி இயக்கம் பெருமளவில் வலுப்பெற்றிருக்கிறது. ஒரு சிறிய குறியீட்டைக் கூட பலரும் ஆராய்கின்றனர். சென்சார் போர்டில் இருக்கும் வலதுசாரி ஆதரவு அதிகாரிகள் குறியீடுகளைக் கவனிக்கின்றனர். அவர்கள் நம்மைக் கையாளும் விதமே பயங்கரமாக இருக்கும். இதையெல்லாம் தாண்டி படத்தை வெளியிடுவது பெரும் சவாலாக இருக்கிறது.
ஓடிடி நிறுவனங்கள் ஆதரவு குறைந்துவிட்டதால் நாம் மக்களை நோக்கிச் செல்கிறோம். திரையரங்குகளை மட்டுமே நம்பியிருக்கிறோம்.
சமூகத்துக்குள் இருக்கக்கூடிய பிரச்னைகளை முன்வைத்துப் படமெடுக்கும்போது, அது பிடித்திருந்தாலும் மக்கள் திரையரங்குக்கு வருவது சவாலானதாக இருக்கிறது. மக்கள் மீது உள்ள நம்பிக்கையில்தான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம்.
தண்டகாரண்யம் பேசும் பிரச்னைகளால் பல பின்விளைவுகள் வரும் என்பதைத் தெரிந்துதான் நாங்கள் எடுத்திருக்கிறோம். அது மக்கள் கைதூக்கி விடுவார்கள் என்ற நம்பிக்கையில்தான்” என்றார்.
கம்யூனிசம் – அம்பேத்கரியம் முரண்?
தொடர்ந்து பேசிய அவர், “நான் அம்பேத்கரியம் பேசுவேன், அதியன் கம்யூனிசம் பேசுகிறான். எங்களுக்குள் முரண்கள் இருந்தாலும் நாங்கள் ஒரு தளத்தில் இயங்குகிறோம். தத்துவங்களில் பிரச்னை இல்லை, அதை யார் கையாளுகிறார், எப்படிக் கையாளுகிறார் என்பதில்தான் முரண் இருக்கிறது.
எனக்கு மார்க்ஸைப் பிடிக்கும், ஆனால் தீவிர அம்பேத்கரியவாதி. ஆனால் இந்திய மனநிலையில் தத்துவங்களை எப்படி அணுகுகிறார்கள் என்பதில்தான் பிரச்னை இருக்கிறது.
நான் ஜனநாயகமான ஒரு அமைப்பை உருவாக்கத்தான் முயல்கிறேன். எனக்குப் பிடிக்காதவர்களுடன் பணியாற்றமாட்டேன் என்றில்லை. சமூக ஒழுங்கை – சமத்துவமின்மையைக் காப்பாற்ற நினைப்பவர்களுடன் நம்மால் இணைந்து பணியாற்ற முடியாது. ஆனால் சமத்துவத்தை நம்புகிற பல தத்துவங்களை ஏற்றுக்கொள்கிற நண்பர்களுடன் நாங்கள் பணியாற்றுகிறோம்.
அது வணிக ரீதியாகவும் வெற்றிபெற வேண்டுமென நினைக்கின்றோம். விழிப்புணர்வு உண்டாக்குவதுதான் எங்கள் நோக்கம். ஏதோ ஒன்றை உங்களிடம் விற்காமல் சமத்துவத்தை விதைக்கிறோம்” என்றார்.

நேபாளம் போராட்டம் ஒரு கலைஞரால் தூண்டப்பட்டது
நேபாளத்தில் ஒரு ரேப்பர்தான் ஜென் ஜி போராட்டம் வெடிக்கக் காரணமாக இருந்திருக்கிறார். கலை வெறும் அழகியலுக்காகத்தான் என்பவர்களுக்கு, கலை ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கான உதாரணமாக நேபாளம் இருக்கிறது.
அந்த ரேப்பர் கூறும் கருத்துக்கள் மீது எனக்கு முரண்கள் இருக்கிறது. ஆனால் ஒரு கலைஞரால் இத்தனைப் பேரைக் கிளர்ந்தெழச் செய்ய முடியும். சமூகத்தைச் சரிசெய்யப் பயன்படுத்த முடியும். இதைத்தான் நீலமும் செய்ய நினைக்கிறது.
திராவிட இயக்க காலத்தில் எப்படி சினிமாவை ஒரு கருவியாகப் பயன்படுத்தினார்களோ அதேபோல மீண்டும் சினிமாவை அரசியல்படுத்திய இயக்கமாக நீலம் இருப்பதில் எனக்குப் பெருமை. நீலத்தில் எனக்குத் துணையாக இருக்கும் நந்தகுமார் அண்ணாவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.
அதியனுக்கும் எனக்கும் கம்யூனிசம் – அம்பேத்கரிஸம் சார்ந்து பல விவாதங்கள் எழுந்திருக்கின்றன. எப்போதும் தனது கொள்கையை விட்டுக்கொடுக்காதவர். என்னைப்போலவே. அதற்கு அவரைப் பாராட்ட வேண்டும்.
படத்தில் நடித்துள்ள தினேஷ், கலையரசன், வின்சு, ரித்விகா, சபீர், நவீன் எல்லோருமே கடினமாக உழைத்திருக்கிறார்கள். ஜஸ்டின் பிரபாகர் பயங்கரமான இசையைக் கொடுத்திருக்கிறார். எனக்குப் பக்க பலமாக இருக்கிற எல்லா நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் நன்றி.
நீலம் தயாரிப்பில் வெக்கை, பைசன் இன்னும் 4 படங்கள் வரவிருக்கின்றன. இது எல்லாமே கார்பரேட் நிறுவனங்களை நம்பி அல்ல, மக்களை நம்பி, திரையரங்குகளை நம்பி எடுக்கப்பட்ட படங்கள். நீங்கள் ஆதரவு தந்தால்தான் நாங்கள் தொடர்ந்து செயல்பட முடியும்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…