• September 15, 2025
  • NewsEditor
  • 0

திருச்சி மணப்பாறை சாலையில் முள்ளிப்பாடி என்ற இடத்தில் 73 அடி உயரக் கொடிக்கம்பத்தில் தே.மு.தி.க. கட்சிக் கொடி ஏற்றப்பட்டது. பிரேமலதா விஜயகாந்த் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து கல்வெட்டை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த்,

“தே.மு.தி.க. கட்சி தொடங்கி இப்போது 21-ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. ஜனவரி 9-ஆம் தேதி கடலூரில் மாநாடு நடைபெற உள்ள இடத்தில் 75 அடி உயரக் கொடி இன்று ஏற்றப்பட்டுள்ளது. இங்கு 73 அடி உயரக் கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்ட கொடி, கேப்டனின் நினைவாக அவரது 73-வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் ஏற்றப்பட்டது.

முள்ளிப்பாடியில் கட்சிக் கொடியை ஏற்றி, கல்வெட்டை திறந்த பிரேமலதா விஜயகாந்த்

தே.மு.தி.க. நிலைப்பாடு என்ன, யாருடன் கூட்டணி என்பது போன்ற உங்கள் அனைவரின் கேள்விகளுக்கும் வரும் ஜனவரி 9-ஆம் தேதி கடலூர் மாநாட்டில் அறிவிக்கப்படும்.

ஒவ்வொருவரின் ஸ்டைல் அப்படி இருக்கும். அதற்கு நாம் கருத்து கூற முடியாது. நாம் சொல்வதைக் கேட்கும் இடத்தில் யாரும் இல்லை. யாருக்கும் அறிவுரை சொல்லும் இடத்திலும் நாம் இல்லை.

விஜய் பிரசாரம்

விஜய் ஏற்கெனவே இரண்டு மாநாடுகளை நடத்தியுள்ளார். பொதுவெளியில் பிரசாரம் செய்வேன் எனக் கூறியுள்ளார். அந்த வகையில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் வந்ததாகவும், காலதாமதம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

நான் நேரில் பார்க்கவில்லை. நான் தொடர்ந்து சுற்றுப்பயணத்தில் இருந்ததால் அதை குறித்து கேள்விப்பட்டேன். விஜய் தற்போது தான் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம்.

முள்ளிப்பாடியில் கட்சிக் கொடியை ஏற்றி, கல்வெட்டை திறந்த பிரேமலதா விஜயகாந்த்

எதிர்நீச்சல்

20 வருடங்களுக்கு முன்பு ரீவைண்ட் செய்து பாருங்கள். இதே தான் அப்போதும் நடந்தது. 20 வருடங்கள் ஆகிவிட்டதால் உங்களுக்கு மறந்திருக்கலாம். ஆனால் நாங்கள் மறக்கவில்லை.

எல்லாமே எதிர்நீச்சல் போட்டு வந்தால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்பது ஒரு சாதாரண மனிதனுக்கே இருக்கும்போது, இது அரசியல் கட்சி; பெரிய ஆளுமைகள் ஆட்சி செய்த பூமி. அப்படியிருக்க, புதிதாக வருபவர்களுக்கு பல்வேறு விதமான சவால்கள் இருக்கும்.

எதிர்நீச்சல் போட்டு ஜெயித்தவர்தான் நமது கேப்டன். அதற்கு எடுத்துக்காட்டு அவர்தான். திரைத்துறையாக இருந்தாலும், அரசியலாக இருந்தாலும் சவால்களை முறியடித்து வெற்றி பெறும்போது மட்டுமே அது மக்களால் அங்கீகரிக்கப்படுகிறது.

திரை உலகிலிருந்து வருபவர்கள் பிரபலமானவர்கள். சாதாரண மனிதனுக்கும் நடிகனாக வருபவர்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. அவர்களை திரையில் மட்டுமே பார்த்து பழகிய மக்கள். விஜய் சினிமாவில் நடிக்க வந்து 25 வருடங்கள் ஆகிவிட்டது. அவர் உச்சநட்சத்திரம் என்றால், அவருக்கான ரசிகர்கள் மிக அதிகமாக இருப்பார்கள்.”

ஆனால், எங்களுக்கு இது சாதாரணமாகத் தெரிகிறது. நாங்கள் கேப்டனுடன் வளர்ந்தவர்கள். அவரைப் பார்த்தவர்கள் நாங்கள். அதனால், எங்களுக்கு இது பெரிதாகத் தெரியவில்லை. அவர்கள் எப்படி இதை கொண்டு செல்கிறார்கள் என்பதைப் பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

ஆம்புலன்ஸ் குறுக்கே வந்தால்

விஜயகாந்த் பிரசாரம் செய்யும் போது ஆம்புலன்ஸ் குறுக்கே வந்தால், அவரே மைக்கில், “ஆம்புலன்ஸ் வருகிறது, வழி விடுங்கள்” எனக் கூறுவார். எங்கள் தொண்டர்கள் வழி விட்டு ஆம்புலன்ஸை அனுப்பிவைப்பார்கள். இதை நாங்கள் மனிதநேயத்துடன் செய்வோம்.

முள்ளிப்பாடியில் கட்சிக் கொடியை ஏற்றி, கல்வெட்டை திறந்த பிரேமலதா விஜயகாந்த்

தற்போது அரசியல் கட்சி கூட்டங்களில் கூட்டம் அதிகமாக உள்ளபோது, காவல்துறையினர் மாற்று வழியில் ஆம்புலன்ஸ் செல்ல வலியுறுத்த வேண்டும். ஏன் கூட்டத்துக்குள் புகுந்துத்தான் வர வேண்டும்? பொதுக்கூட்டம் நடைபெறுகிறது எனத் தெரிந்தும் அதற்குள் ஆம்புலன்ஸ் வந்தால் அது இடையூறுதான். ஆனால், நாங்கள் மனிதநேயத்துடன் அதை எடுத்துக்கொள்வோம். அதே நேரம், எல்லோரும் அப்படி எடுத்துக்கொள்வார்கள் எனக் கூற முடியாது.

காவல்துறையினர்தான் முன்கூட்டியே திட்டமிட்டு வேறு மாற்றுப் பாதையில் செல்ல வழிவகை செய்ய வேண்டும். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் தேர்தல் பிரசாரத்துக்குச் செல்லவில்லை. ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ மற்றும் ‘மக்களைத் தேடி மக்கள் தலைவர் ரதயாத்திரை’ நடைபெற்று வருகிறது. அதேபோல், காலை நேரத்தில் எங்கள் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறோம்.

மூன்றாவது பெரிய கட்சி

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நண்பரும் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். நாங்கள் ராஜ்யசபாவை மட்டுமே ஃபோக்கஸ் செய்வது கிடையாது.

எங்களது கட்சி வளர்ச்சியும் அடுத்த தேர்தலுக்கான தயாரிப்பும் குறித்த பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். பூத் கமிட்டி அமைப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

தே.மு.தி.க. மூன்றாவது பெரிய கட்சியாக இருப்பதால் அனைத்து இடங்களிலும் பி.எல்.-2 போட்டு முடித்துள்ளோம். நிர்வாகிகள் கூட்டம், தேர்தலை எப்படி சந்திப்பது என்ற திசையில் நாங்கள் பயணித்து வருகிறோம்.

முள்ளிப்பாடியில் பிரேமலதா விஜயகாந்த்

தமிழக மக்களின் சொத்து

விஜய், கேப்டனை அண்ணன் என்று சொல்கிறார்; நாங்கள் அவரை தம்பி எனக் கூறுகிறோம். அவர் நன்றாக வரட்டும். சினிமாவிலும் பலர் விஜயகாந்தை பயன்படுத்துகின்றனர். விஜயகாந்த் எங்கள் குடும்பச் சொத்து மட்டுமல்ல; கட்சிச் சொத்து மட்டுமல்ல; தமிழக மக்களின் சொத்து.

கேப்டன் இருந்தபோது திரையுலகை எப்படி காப்பாற்றினார் என்பது ஒட்டுமொத்த திரையுலகினருக்கும் தெரியும். அவர்கள் உரிமையுடன் கேப்டன் படத்தைப் போடுகின்றனர். அதை நான் நிச்சயம் தடுக்க மாட்டேன். அவர் திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்.

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, சீமான் மற்றும் விஜய் புதிதாக வந்துள்ளார்கள். பார்ப்போம். இன்னும் ஆறு–ஏழு மாதங்கள் உள்ளன. பல்வேறு விதமான மாற்றங்கள் வரலாம். “இதுதான் அணி” என இப்போது கூற முடியாது. யார் யாருடன் சேரப் போகிறார்கள், எந்த அணி நிறைவான முழுமையான அணியாக இருக்கும் என்பதை தற்போது கூற முடியாது” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *