• September 15, 2025
  • NewsEditor
  • 0

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அக்கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நடைபெற்று வந்தது.

அதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி அன்னூரில், அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எடுக்கப்பட்ட பாராட்டு விழா அழைப்பிதழில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் பெயர்கள் இல்லையென்ற குற்றச்சாட்டை முன் வைத்து, செங்கோட்டையன் அந்த விழாவைப் புறக்கணித்தார்.

அதைத் தொடர்ந்து, நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா உள்ளிட்ட கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் எடப்பாடி பழனிசாமியின் பெயரைக் குறிப்பிடாமல் செங்கோட்டையன் பேசியும் வந்தார். இதனால், செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.

இதைத் தொடர்ந்து, செங்கோட்டையன் கட்சியில் ஓரங்கட்டப்பட்டார்.

செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு

இதைத் தொடர்ந்து, தில்லிக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து, தில்லிக்குச் சென்ற செங்கோட்டையன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை தனியாக சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு, செங்கோட்டையன் அமைதி காத்து வந்தார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் தனது பிரசாரப் பயணத்தை தொடங்கியபோது எடப்பாடியில் இருந்து கோபிசெட்டிபாளையம் வழியாகவே மேட்டுப்பாளையத்துக்குச் சென்றார்.

அப்போது கோபியில் உள்ள வீட்டில் இருந்த கே.ஏ.செங்கோட்டையன், கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கவில்லை. இப்படி தொடர்ந்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்தன.

இந்நிலையில், மனம் திறந்து பேசப் போவதாக அறிவித்த செங்கோட்டையன், கடந்த 5-ஆம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி
செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி

ஒருங்கிணைக்க10 நாள் கெடு:

அப்போது பேசிய செங்கோட்டையன்,
“அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும். இதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள வேண்டும்.

அப்படி மேற்கொள்ளவில்லை என்றால், ஒருங்கிணைக்கும் பணிகளை நான் மேற்கொள்வேன். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன்,” என்று எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்திருந்தார்.

ஆதரவு

செங்கோட்டையனின் இந்தக் கருத்துக்கு சசிகலா, டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.

எடப்பாடி அதிரடி

இதைத் தொடர்ந்து செங்கோட்டையன், அவரது ஆதரவாளரான முன்னாள் எம்.பி. சத்யபாமா உள்ளிட்ட 13 பேரை பொறுப்புகளில் இருந்து நீக்கி, எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

டெல்லி பயணம்

இதையடுத்து அடுத்த நாளே ஹரித்துவார் செல்வதாக கூறி டெல்லி சென்ற செங்கோட்டையன், டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் சந்தித்து அதிமுகவில் நிலவும் பிரச்னைகள் குறித்து பேசியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, கடந்த சில நாள்களாக ஓ.பி.எஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள வீட்டில் செங்கோட்டையனைச் சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

செங்கோட்டையன்

`காலம் சொல்லும்’ – செங்கோட்டையன்

இந்நிலையில், உறவினர் திருமண நிகழ்ச்சிக்குச் செல்வதாக சென்னைக்குச் சென்ற செங்கோட்டையனிடம் எடப்பாடி பழனிசாமிக்கு நீங்கள் விதித்த கெடு 15-ஆம் தேதியுடன் முடிவடையப் போகிறதே என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர்,

“என்னைப் பொறுத்தவரை இந்த இயக்கம் நன்றாக இருக்க வேண்டும். எல்லோரும் இணைய வேண்டும். வெற்றி என்ற இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான்.

இதுதான் எனது ஆசை. இன்னும் ஒரு மாதத்தில் அனைவரும் ஒன்றிணைவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. மீண்டும் டெல்லி செல்வதா வேண்டாமா என்பதை காலம்தான் சொல்லும்” என்றார்.

சென்னைக்குச் சென்ற செங்கோட்டையன் அங்கு வைத்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை மீண்டும் சந்தித்து கட்சி நிலவரம் குறித்துப் பேசியதாகத் தெரியவந்துள்ளது.

என்ன செய்யப்போகிறார் செங்கோட்டையன்?

இதுகுறித்து கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பேசுகையில்,

“அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பது செங்கோட்டையனின் கருத்து மட்டுமல்ல. முன்னாள் அமைச்சர்கள் பலரின் கருத்தும் அதுவாகத்தான் இருக்கிறது.

அவர்கள் இந்தக் கருத்தைச் சொன்னால் எடப்பாடியின் கோபத்துக்கு உள்ளாவோம் என்பதால், பாஜக மூலம் கட்சியின் சீனியரான செங்கோட்டையனை வைத்து இதை வெளிப்படுத்தினார்கள்.

பாஜக தலைமையும் எடப்பாடி பழனிசாமியின் அதிகாரத்தைக் குறைக்க வேண்டும் என்று எண்ணியிருந்ததை செங்கோட்டையன் மூலம் சாதிக்க செங்கோட்டையனைக் கருவியாகப் பயன்படுத்திக்கொண்டது.

தனது அறிவிப்புக்குப் பின், கட்சி அளவிலும் தனக்கு ஆதரவு வரும் என்று முதலில் செங்கோட்டையன் எதிர்பார்த்தார். ஆனால், அவரது ஈரோடு மேற்கு மாவட்டத்துக்குட்பட்ட அந்தியூர், பவானிசாகர் தொகுதியில் இருந்து ஒருவர் கூட அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

குறிப்பாக, செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளரான பவானிசாகர் எம்எல்ஏ பன்னாரி, செங்கோட்டையனின் செய்தியாளர்கள் சந்திப்புக்குக் கூட வரவில்லை.”

செங்கோட்டையன் ஆதரவாளர்

எடப்பாடி பழனிசாமி சமாதானத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கும் அளவுக்குச் செல்வார் என்றுவிட்டதால், முன்னாள் அமைச்சர்கள் சிலரும் ஒதுங்கிக் கொண்டனர்.

கடந்த 10 நாள்களாக கோபிசெட்டிபாளையத்தைத் தவிர்த்து கொங்கு மண்டலத்தில் இருந்து எந்த ஒரு முக்கிய நிர்வாகிகளும் செங்கோட்டையனை சந்திக்க வரவில்லை.

தென்மாவட்டங்களில் இருந்து டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்தான் செங்கோட்டையனை பார்த்துச் சென்றனர்.

நாளாக நாளாக கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கட்சிக்காரர்களும்கூட செங்கோட்டையனை சந்திப்பதைத் தவிர்த்துவிட்டனர்.

குறிப்பாக, 5-ஆம் தேதி செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பின்போது உடன் இருந்த அவரது ஆதரவாளரான ஈரோடு மேற்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளர் கார்த்தி, அடுத்த இரண்டு நாள்களில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல், தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு எடப்பாடி பழனிசாமிக்கு உறுதுணையாக இருப்போம். புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் மாவட்டச் செயலாளர் ஏ.கே.செல்வராஜுக்கு ஆதரவாக இருப்போம் என சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

ஓ.பி.எஸ்.அணியினர்

ஓ.பி.எஸ். அணியில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த சிறுவலூர் மாரப்பன், கோபிசெட்டிபாளையம் ஒன்றியச் செயலாளர் சிதம்பரம், கவுந்தப்பாடி முத்துசாமி ஆகியோர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து தங்களை மீண்டும் அதிமுகவில் இணைந்தனர்.

செங்கோட்டையனுக்கு ஆதரவாக இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளும் வரும் நாள்களில் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கவுள்ளனர்.

கட்சியை ஒருங்கிணைக்கலாம் என்றால் தன்னை விட்டுவிட்டு மற்றவர்களெல்லாம் ஒன்றிணைந்து வருகிறார்கள் என்ற கலக்கமும் செங்கோட்டையனிடம் தெரியத் தொடங்கி உள்ளது. இதனால்தான் தொடர்ச்சியாக பாஜக தலைவர்களை செங்கோட்டையன் சந்தித்து வருகிறார்,” என்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *