• September 15, 2025
  • NewsEditor
  • 0

எங்கோ ஒருசிலருக்கு இருந்த பிசிஓஎஸ் இப்போது பல இளம் பெண்களுக்கும் இருக்கிறது.

உடல் பருமனில் ஆரம்பித்து குழந்தையின்மை வரைக்கும் பிசிஓஎஸ்ஸினால் வருகிற பிரச்னைகள் எக்கச்சக்கம். இதற்கு ஒரே வழி பிசிஓஎஸ்ஸை கட்டுக்குள் வைப்பதுதான். அதற்கு என்னென்ன சாப்பிட வேண்டும் என சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சீனியர் டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன்.

PCOS

’’பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசியைக் குறைத்துவிட்டு சிறுதானியங்களை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக பிசிஓஎஸ் இருப்பவர்கள் தினை, கம்பு இரண்டையும் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். ஏனென்றால், இந்த சிறுதானியங்களில் நார்ச்சத்து அதிகம். உங்களுக்கு பிடிக்கும் என்றால் பார்லிகூட சாப்பிடலாம்.

சிலர் கேழ்வரகு சாப்பிடுவார்கள். ஆனால், கேழ்வரகு மாவில் தோசை, கஞ்சி ஆகியவை செய்து சாப்பிடும்போது அதிலும் மாவுச்சத்து அதிகமாக இருக்கும். அதனால், கேழ்வரகை தவிர்த்து விடலாம்.

பிசிஒஎஸ் இருப்பவர்கள் தினை அல்லது கம்பு சாப்பிடுவதற்கு முன்னால் அவற்றை வெறும் வாணலியில் வறுத்து, அரைத்து பயன்படுத்தலாம். அல்லது ஊறவைத்து, அரைத்து, புளிக்க வைத்து பயன்படுத்தலாம். அல்லது முளைக்கட்டி பயன்படுத்தலாம்.

pcos
pcos

இந்த சிறுதானியங்களில் புரதம், வைட்டமின்கள், தாது உப்புகள் ஆகியவற்றுடன் நார்ச்சத்தும் நிறைவாக இருப்பதால் குறைந்த அளவுதான் சாப்பிட முடியும். இதனால் பாதிக்கப்பட்டவர்களால் மாவுச்சத்தை அதிகம் எடுத்துக்கொள்ள முடியாது. நீரிழிவு போலவே பிசிஓஎஸ் பிரச்னைக்கும் மாவுச்சத்து கட்டுப்பாடு தேவை என்பதால், நான் மேலே சொன்ன முறையில் சிறுதானியங்களை சாப்பிடவும்.

தினை அல்லது கம்பை ஊற வைத்து இட்லி, தோசைக்கு செய்வது போலவே உளுந்தையும் ஊறவைத்து, அரைத்து, புளிக்க வைத்து தோசையாக சுட்டு காலை வேளைகளில் சாப்பிடலாம்.

உடன் தினமும் தேங்காய் சட்னி தவிர்த்து விட்டு புதினா சட்னி, தக்காளி சட்னி, கறிவேப்பிலை சட்னி என்று சாப்பிடலாம்.

 சிறுதானிய தோசை
சிறுதானிய தோசை

பிசிஒஎஸ் இருப்பவர்கள் சம்பா கோதுமை ரவையை தாராளமாக சாப்பிடலாம். ஆனால், வழக்கமான ரவை அல்லது சேமியாவை சாப்பிடக்கூடாது.

சம்பா கோதுமை ரவையுடன் கேரட், பீன்ஸ், பட்டாணி, வெங்காயம், பூண்டு, தக்காளி, கொத்தமல்லி ஆகியவை சேர்த்து சமைத்து சாப்பிட வேண்டும்.

இப்படி சாப்பிடும்போது மாவுச்சத்து குறைந்து நார்ச்சத்து அதிகரிக்கும். இது பிசிஓஎஸ் இருப்பவர்களுக்கு உடல் எடை கூடாமல் தடுக்கும்.

முற்பகல் 11 மணிக்கு மோர் குடிக்கலாம். பாதாம் பருப்பு அல்லது வேர்க்கடலை சாப்பிடலாம். மதிய நேரத்தில் சிகப்பு அரிசி அல்லது கறுப்பரிசி அல்லது கைக்குத்தல் அரிசி மூன்றில் ஏதோ ஒன்று உங்கள் தட்டில் கால் பாகம் இருக்க வேண்டும்.

அடுத்த கால் பாகம் பருப்பு, சாம்பார், சுண்டல், சிக்கன், முட்டை, மீன் போன்ற புரத உணவுகள் இருக்க வேண்டும். மீதமுள்ள பாதி தட்டில் காய்கறிகள் இருக்க வேண்டும்.

அசைவம் சமைக்கையில் பொரித்து சாப்பிடாமல் வேகவைத்து சாப்பிட வேண்டும். கிரேவியிலும் எண்ணெய் குறைவாக இருப்பது நல்லது.

green vegetables
green vegetables

காய்கறிகளைப் பொறுத்தவரை நாட்டு காய்கறிகள், பச்சை நிற காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பிசிஓஎஸ் உடன் தைராய்டும் இருந்தால் முட்டைக்கோஸ், காலிஃபிளவர், புராக்கோலி ஆகியவற்றை எப்போதாவது சாப்பிடலாம்.

கேரட்டை தவிர பூமிக்கு கீழே விளைகிற மற்ற கிழங்கு வகைகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

இவர்களும் சர்க்கரையை தவிர்க்க வேண்டும். வெள்ளை சர்க்கரை மட்டுமல்ல, நாட்டு சர்க்கரையைக்கூட தவிர்க்க வேண்டும்.

டீ, காபி குடிக்கும்போது சற்றுக் கூடுதலாக பால் விட்டு அருந்தினால் சர்க்கரை போடாவிட்டாலும் சுவையாக இருக்கும்.

இந்த உணவுமுறையை பின்பற்றி வந்தால், உடல் பருமன் இருந்தால் குறையும். உடல் உறுப்புகளில் இருக்கிற வீக்கமும் குறையும். கூடவே, பிசிஓ எஸ்-ஸும் கட்டுக்குள் வரும்’’ என்கிறார் டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *