
சென்னை: அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, காவல் துறையில் 150 பேர், தீயணைப்பு, மீட்பு பணிகள் துறையில் 22 பேர், சிறைகள், சீர்திருத்த பணிகள் துறையில் 10 பேர், ஊர்க்காவல் படையில் 5 பேர், விரல்ரேகை பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் தடய அறிவியல் துறையில் 4 அலுவலர்கள் என 193 பேரின் சிறப்பான பணியை பாராட்டும் வகையில் ‘தமிழக முதல்வரின் அண்ணா பதக்கங்கள்’ வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் 2024 டிசம்பர் 12-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 32 நோயாளிகளை பாதுகாப்பாக மீட்ட தீயணைப்பு துறை மாவட்ட உதவி அலுவலர் மயில்ராஜு, தீயணைப்பு வீரர் புனிதராஜு மற்றும் கள்ளழகர் திருவிழாவின்போது, வைகை ஆற்றில் மூழ்கிய 17 வயது சிறுவனை பாதுகாப்பாக மீட்ட சோழவந்தான் தீயணைப்பு வீரர் ராஜசேகர் ஆகிய 3 பேருக்கும் ‘முதல்வரின் தீயணைப்பு பணிக்கான அண்ணா வீரதீர பதக்கம்’ வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.