
சென்னை: பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாக்கும் வகையில், 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர அவர்களுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஏற்றமிகு தமிழகத்தை உருவாக்க, குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களது சீரான வளர்ச்சிக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. மிகவும் வறுமையில் உள்ள குடும்பங்களை அடையாளம் கண்டு, அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ‘தாயுமானவர்’ திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள் மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாக்கும் வகையில் ‘அன்புக் கரங்கள்’ திட்டம் அறிவிக்கப்பட்டது.