
இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆசிய கோப்பை 2025 லீக் போட்டி பெரும் பரபரப்புக்கு நடுவே நடந்துவருகிறது.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடந்த போட்டியில், டாஸ் போடப்பட்டபோது கேப்டன்கள் இருவரும் கைகுலுக்கிக்கொள்ளாதது சர்ச்சையானது.
டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா. சூர்யகுமார் யாதவ், பௌலிங் தேர்வு செய்வதே தங்களது திட்டமாக இருந்தது என்பதைத் தெரிவித்தார்.
முதல் இன்னிங்ஸ்
இரு அணியினரும் தங்களது பிளான் A உடன் நம்பிக்கையாகக் களமிறங்கினர். முதல் பந்திலேயே ஓப்பனிங் பேட்ஸ்மேன் சயிம் ஆயுப் விக்கெட்டை வீழ்த்தி பாகிஸ்தானின் உறுதியை உடைத்தார் பாண்டியா.
முதல் ஓவரில் விக்கெட் எடுத்த பாண்டியா, பும்ராவின் ஓவரில் அசத்தலான கேட்ச் பிடித்து அடுத்த விக்கெட்டையும் வீழ்த்தினார் . 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது பாகிஸ்தான்.
அடுத்த பந்திலேயே புதிய பேட்ஸ்மேன் ஃபக்கர் ஜமான் பும்ராவின் யார்க்கரில் LBW ஆனார். எனினும் புத்திசாலித்தனமாக ரிவியூ எடுத்து தப்பித்துக்கொண்டார் ஜமான்.
2 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடித்த சாஹிப்சாதா ஃபர்ஹான் – ஃபக்கர் ஜமான் கூட்டணி, 42 ரன்களுடன் பவர் பிளேவை முடித்தது.

பவர்பிளேவுக்குப் பிறகு மைதானத்தை கட்டுக்குள் கொண்டுவந்தது இந்திய அணியின் . குல்திப் யாதவ் விக்கெட் இழக்கும் அச்சத்தைக் காட்ட, 8வது ஓவரில் அக்சர் படேல் வீசிய பந்தை இறங்கி வந்து அடிக்க முயன்ற ஜமான் காற்றில் தூக்கிவிட விக்கெட்டைக் கைப்பற்றினார் திலக் வர்மா.
விக்கெட்டைப் பாதுகாத்துக்கொள்ள முழுவதுமாக டிஃபண்ட் மோடுக்கு மாறியது பாகிஸ்தான் பேட்டிங் ஆர்டர்.
பத்தாவது ஓவரில் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலியின் விக்கெட்டைக் கைப்பற்றினார் அக்சர் படேல். அடுத்ததாக ஒரு எகானமிக்கல் கேமியோ ஓவர் வீசினார் அபிஷேக் சர்மா.
நீண்ட நேரத்துக்குப் பிறகு 12வது ஓவர் முதல் பந்தில் சிக்சர் அடித்து பாகிஸ்தான் அணியை ஆட்டத்துக்குள் எடுத்துவந்தார், சாஹிப்சாதா ஃபர்ஹான். அடுத்த ஓவரிலேயே அடுத்தடுத்த பந்துகளில் ஹசன் நவாஸ், முகமது நவாஸ் விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தானைப் பதட்டத்திலேயே வைத்திருந்தார் குல்தீப்.

ஒன்றிரண்டு பவுண்டரிகளுடன் ஆட்டத்தின் முடிவை நோக்கி ஆமை வேகத்தில் நகர்ந்தது பாகிஸ்தான். ஓரளவு உறுதியாக விளையாடிவந்த சாஹிப்சாதா ஃபர்ஹானின் விக்கெட்டை வீழ்த்தினார் குல்தீப். 44 பந்துகளுக்கு 40 ரன்கள் அடித்த நிலையில் வெளியேறினார்.
தொடர்ந்து களமிறங்கிய ஷாஹீன் அஃப்ரிடி, இரண்டாவது பந்திலேயே சிக்சர் அடித்து அதிரடியாக விளையாடப்போவதை அறிவித்தார். பாகிஸ்தான் 18வது ஓவர் முடிவில் சிறுகச் சிறுக சிங்கிள்களை சேர்த்து 100 ரன்களை எட்டியது.

அடுத்ததாக களமிறங்கிய சுஃபியான் முகீம் இரண்டு பவுண்டரிகளை விளாசி வெளியேறினார். கடைசி பந்துவரை தாக்குப்பிடித்த பாகிஸ்தான் ஆல் அவுட் ஆகாமல் தப்பியது. ஷஹீம் அஃப்ரீடி 16 பந்துகளுக்கு 33 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணிக்கு 128 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அக்சர் படேல் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும் ஹர்திக் மற்றும் வருண் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.
இரண்டாவது இன்னிங்ஸ்
தொடக்கத்திலேயே 4, 6 என அதிரடி காட்டி பாகிஸ்தான் பவுலர்களை வரவேற்றார் அபிஷேக் சர்மா. இரண்டாவது ஓவரில் சைம் ஆயுப் வீசிய கேரம் பாலுக்கு ஸ்டம்ப்ட் ஆனார் கில்.
மறுமுனையிலிருந்த அபிஷேக் சர்மா அசராமல் தனது அதிரடியைத் தொடர்ந்தார். பேட்டிங்கில் டீசண்டாக ரன் குவித்த அஃப்ரீடி ஒன்றுவிடாமல் அபிஷேக் சர்மாவுக்குத் திருப்பிக்கொடுத்தார். நான்காவது ஓவர் நான்காவது பந்தில் அபிஷேக் சர்மா 31(13) அவுட் ஆனார்.

புதிய பேட்ஸ்மேன்கள் திலக் வர்மா, சூர்ய குமார் யாதவுக்கு சவாலாக இருந்தார் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமது. திலக் வர்மா பவுண்டரிகளை அடிக்கத் தொடங்கினார். பவர் பிளே முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் குவித்திருந்தது இந்திய அணி.
சுஃபியான் முகீம் வீசிய பதினோறாவது ஓவரில், திலக் வர்மா சிக்சரும் சூர்யகுமார் பவுண்டரியும் அடிக்க 14 ரன்களை சேர்த்து வெற்றியை உறுதிப்படுத்தியது இந்திய அணி.
இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக திகழ்ந்த ஒரே பௌலர் அப்ரார் அகமது 4 ஓவர்களுக்கு 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார் , எனினும் விக்கெட் எடுக்கத் தவறினார்.
12வது ஓவரில் திலக் வர்மாவின் கேட்சை மிஸ் செய்தார் நவாஸ். ஆனால் அடுத்த ஓவரிலேயே சிறப்பாக பந்துவீசி ஆஃப் ஸ்டம்பை போல்ட் எடுத்தார் சைம் ஆயுப். திலக் வர்மா 31 பந்துகளுக்கு 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெளியேறினார். அந்த ஓவரின் முடிவில் இந்தியாவுக்கு 100 ரன்கள் வந்தது.

7 ஓவர்களுக்கு 28 ரன்கள் மட்டுமே அடிக்க வேண்டிய லேசான சூழலில் சூர்யகுமார் பவுண்டரிகளை தெறிக்கவிட்டார். தூபே தனது பங்குக்கு ஒரு சிக்சர் அடிக்க, 16வது ஓவர் கடைசி பந்தில் சிக்சர் அடித்து போட்டியை முடித்து வைத்தார் கேப்டன் சூர்யகுமார் யாதவ். ஒட்டுமொத்தமாக 37 பந்துகளுக்கு 47 ரன்கள் அடித்திருந்தார்.
போட்டியின் இறுதியில் இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக்கொள்ளாமலேயே ட்ரெஸ்ஸிங் ரூமுக்குத் திரும்பினர்.