
அரியலூரில் விஜய் பரப்புரை
திருச்சியில் தனது பரப்புரையை முடித்துவிட்டு அரியலூர் சென்று பரப்புரையை தொடங்கினார் தவெக தலைவர் விஜய். அந்தப் பரப்புரையில் விஜய் பேசியதாவது,
“இங்கு என்னைப் பார்க்க வந்திருக்கின்ற அம்மாக்கள், அண்ணன்கள், தங்கைகள், அக்காக்கள், நண்பர்கள் என அனைவருக்கும் நன்றிகள்.
உங்கள் அனைவரையும் பார்க்கும்போது மனதுக்குள் ஒன்றுதான் தோன்றுகிறது, உங்களுடைய இந்த அன்புக்காக எவ்வளவு பெரிய உயரத்தையும், எவ்வளவு பெரிய வருமானத்தையும், எவ்வளவு பெரிய வசதியையும் தூக்கி எறிந்துவிட்டு வரலாம் என
உங்களை என் அன்பு, பாசத்தை விட இந்த உலகத்தில் எனக்கு வேறு எதுவும் பெரியதாகத் தெரியவில்லை. சாதாரணமாக இருந்த இந்த விஜய்யை இந்த உயரத்தில் வைத்துக் கொண்டாடுகிறீர்கள்.
உங்கள் வீட்டில் ஒருவராக என்னை மாற்றிவிட்டீர்கள். பணம் வேண்டும் என்ற அளவுக்குப் பார்த்துவிட்டேன். அரசியலுக்கு வந்துதான் பணம் சம்பாதிக்கணுமா? அதற்கான அவசியம் எனக்கு இல்லை.
எனக்கு எல்லாவற்றையும், எல்லாவற்றையும் கொடுத்த உங்களுக்காக உழைக்கிறதை விட எனக்கு எந்த எண்ணமும், எந்த வேலையும் கிடையாது.

விஜய் அண்ணா, விஜய் தம்பி, விஜய், நம்ம விஜய், விஜி …. என்னடா இந்த விஜி தனி ஆளா இருப்பான்னு பார்த்தா மக்கள் கடலோடு இருக்கிறார் என்று இந்த எதிரிகள் எல்லாம் நம்மளைப் பற்றி கண்ணாபின்னான்னு பேசத் தொடங்கி இருக்கிறார்கள்.
அதாவது நாம் மரியாதையாகப் பேசினால் கூட அதைத் தவறாக எடுத்துக்கொள்கிறார்கள். அதனால் யார் என்ன சொன்னாலும் அறிஞர் அண்ணா அவர்கள் சொன்ன டயலாக் தான், வாழ்க வசவாளர்கள் அப்படி கூறிவிட்டுப் போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான்.
பாசிச பாஜக, பாயச திமுக
மதுரை மாநாட்டில் உங்களை அனைவரையும் சந்திக்க வருகிறேன் எனக் கூறியிருந்தேன். அப்படி இன்றைக்கு உங்களுக்காக இங்கு வந்துள்ளேன்.
நம்மை மேலும் கீழும் ரொம்ப மோசமாக ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற பாசிச பாஜக அரசையும் பாயச திமுக அரசையும் கேள்வி கேட்க வந்துள்ளேன்.
திருச்சியில் பேசும்பொழுது மைக் பிரச்சினை இருந்ததால் அங்கு பேசிய ஒரு சில விஷயங்களை இங்கு திரும்பவும் பேசுகிறேன். பாஜக அரசு கொஞ்சம் நஞ்சம் கொடுமையாகச் செய்து, பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் காணவில்லை. இது பெரிய விஷயம் அல்ல.
இதைவிடப் பெரிய விஷயம் இருக்கிறது – ஓட்டுத் திருட்டு. ஒரே நாடு ஒரே தேர்தல் 2029 ஆட்சி காலம் முடியப் போகிறது என அனைவரும் அறிந்த ஒன்று.
அதனால் இந்த மாநில அரசுகள் எல்லாம் கலைத்துவிட்டு அனைவருக்கும் ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் தேர்தல் வைக்கின்ற ஐடியா.
அப்போதுதானே இந்த தில்லுமுல்லு வேலைகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்ய முடியும். இதுக்குப் பெயர் என்ன? ஜனநாயகப் படுகொலைதானே?
திமுக நம்ப வைத்து ஏமாற்றுகிறது
பார்லிமென்ட் தொகுதிகள் மறுசீராய்வு. இதைத்தான் ஏற்கனவே முதலில் தமிழக வெற்றிக் கழகம் எதிர்த்தது. எப்பவும் எதிர்ப்போம்.
இனிமேலும் எதிர்ப்போம். இது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பாஜக அரசு செய்கின்ற துரோகம். பாஜக நமக்கு துரோகம் செய்கிறது.
திமுக நம்ப வைத்து ஏமாற்றுகிறது. இங்கு மாநிலத்தில் திமுக அரசு நம்மை நம்ப வைத்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

கிட்டத்தட்ட நான், நீங்கள் அனைவரும் சேர்ந்து இவர்கள் நல்லது செய்வார்கள் எனத் தேர்ந்தெடுத்தோம். 55 தேர்தல் வாக்குறுதிகளை இந்த திமுக அரசு மக்களுக்குக் கொடுத்தது.
ஆனால் முக்கால்வாசி வாக்குறுதிகளைக்கூட நிறைவேற்றாமல், எல்லாத்தையும் நிறைவேற்றி விட்டோம் என மனசாட்சி இல்லாமல் இப்படி கதை விடுகிறீர்கள், மை டியர்… வேணா வேணா… உங்களுக்குத்தான் ஆசையா, பாசமா கூப்பிட்டால் பிடிக்கமாட்டேங்குதே, இப்படி கதை விடுகிறீர்களே சிஎம் சார்.
அறுந்து போன ரீல்ஸ்
ரீல்ஸ் வேற ரியாலிட்டி வேற என நீங்களே சொல்லிவிட்டு இப்பொழுது நீங்கள் ஓட்டுவது கம்ப்யூட்டர் ரீல்ஸ்தான் அதுல பாதியும் அறுந்து விட்டது.
அப்படி அறுந்து போன ரீல்ஸ் என்னென்ன என்று பார்ப்போமா. அனைவருக்கும் ஆயிரம் ரூபாய்,
டீசல் விலை குறைப்பு,
நீட் தேர்வு ரத்து,
கல்வி கடன் ரத்து,
10 லட்சம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு,
மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது, மீனவர்களுக்கு இரண்டு லட்சம் வீடுகள்,
மீனவர் கிராமங்களில் மீன் உலர்த்தும் தளங்கள், நெசவாளர்களுக்கு வட்டி குறைப்பு,
அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவதாக சொன்னீர்களே செய்தீர்களா,
பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவித்தீர்கள் செய்தீர்களா?
சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு அரசு பணி நிரந்தரம் செய்வதாக சொன்னீர்கள் செய்தீர்களா,
முதியோர் உதவித்தொகை 1500 வழங்கப்படும் என அறிவித்தீர்கள் செய்தீர்களா,
தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பில் 75% தமிழர்களுக்கு என கூறினீர்கள் செய்தீர்களா,
மூன்று லட்சத்திற்கு மேல் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என சொன்னீர்கள் செய்தீர்களா?

தூய்மைப் பணியாளர்களுடைய ஊதியம் மற்றும் ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனச் சொன்னீர்கள், செய்தீர்களா?
மக்கள் நலப் பணியாளர்கள் என 25,000 பெண்கள் நியமிக்கப்படுவார்கள் என அறிவித்தீர்கள், செய்தீர்களா?
ரேஷன் கடையில் மீண்டும் உளுந்து வழங்கப்படும் என அறிவித்தீர்கள், செய்தீர்களா?
அனைத்து அரசு வேலைவாய்ப்புகளிலும் பெண்களுக்கு 40 சதவீதம் முன்னுரிமை வழங்கப்படும் என அறிவித்தீர்கள், கொடுத்தீர்களா?
இப்படியே நாம் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான். இவர்களிடமிருந்து எந்தப் பதிலும் வரப்போவதில்லை.
ஏனென்றால் இதற்கான பதில் அனைவரும் அறிவார்கள். அதனால் நான் உங்களிடம் கேட்கிறேன். சொன்னாங்களே, செஞ்சாங்களா?” என விஜய் பேசினார்.