
தமிழகம் முழுவதும், “உள்ளம் தேடி, இல்லம் நாடி” என்ற பிரசாரத்தை தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பிரசாரத்தை மேற்கொண்டார். அப்போது பேசிய பிரேமலதா:
“லஞ்சம், ஊழல் இல்லாத நல்லாட்சியை தருவேன் என்று விஜயகாந்த் சொன்னார். ஆனால் மக்கள் அவருக்கு வாய்ப்பு கொடுக்க தவறவிட்டனர்.
விஜயகாந்த் காட்டிச் சென்ற வழியில் பயணித்து வெற்றிக்கனியை விஜயகாந்தின் கால்பாதங்களில் சமர்ப்பிப்போம். விஜயகாந்த் இன்னும் இறங்கவில்லை. நம்மோடு தான் இருக்கிறார். இந்த ஆட்சியில் என்ன இருக்கிறது?
நாங்கள் பிரசாரத்திற்காக தற்போது நடந்துகொண்டு வந்தோம். நாங்கள் செல்லும் வழியில் ‘மின்சாரம் இல்லை’ என்று அறிவிக்கிறார்கள்.
வெட்கமாக இல்லைவா உங்களுக்கு? நீங்கள் இத்தகைய செயல்களை செய்துவிடுவீர்கள் என்று தெரிந்ததினால்தான் எங்கள் வாகனத்தில் அனைத்து வசதிகளையும் நாம் செய்து வைத்துள்ளோம்.

இங்கே இன்று யார் அமைச்சர் என்று எனக்கு தெரியும். எந்த அளவிற்கு மணல் கொள்ளை, மாபியா கொள்ளை எல்லாம் செய்வது இவர்கள்தான். புதுக்கோட்டையில் எந்த அளவிற்கு மக்களை சுரண்டி பிழைக்கின்றார்கள் என்பது எனக்கு தெரியும்.
நாங்கள் சொந்த உழைப்பிலேயே கட்சியை ஆரம்பித்து அதனை கட்டி காத்து வருகிறோம். உங்களைப் போன்ற ஊழல் செய்த ‘காசிலா’ – நாங்கள் கூட்டம் நடத்துகிறோமா? பேனர் கட்டுகிறோமா? என்ன பேசுகிறீர்கள். எதற்காக ‘மின்சாரம் இல்லை’ என்று அறிவிக்கிறீர்கள்? பயமா? தே.மு.தி.க-வைப் பார்த்தால் பயமா?
அந்த பயம் இருக்கிறவரைமட்டும், கடைக்கோடி தொண்டன் நிற்கும் வரை இந்த கட்சியை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது. கேப்டன் மறைந்துவிட்டார் ‘கட்சி அவ்வளவுதான்’ என்று பேசியவர்கள் எல்லாம் தற்போது எங்கே போனார்கள்?
அறந்தாங்கியில் பேருந்து நிலையம்
அறந்தாங்கியில் பேருந்து நிலையம் கொண்டுவர வேண்டுமென அமைச்சருக்கு கோரிக்கை வைத்தார்.
தப்பு செய்தால் தண்டனை அனுபவிக்கவேண்டும். உப்பு தின்னால் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும். அதேபோல ஊழல் செய்தவர்கள் தண்டனையை அனுபவிக்கவேண்டும். யாருக்கும் விதிவிலக்கு இல்லை. யாரும் தப்பிக்க முடியாது.
மின்சாரம் வருகிறதா, சாலை நன்றாக இருக்கிறதா என்று. இதெல்லாம் மக்கள் கேட்டுக்கொள்ளாமல் நீங்கள் அவர்களுக்கு செய்து கொடுக்க வேண்டும்.
அறந்தாங்கி மக்கள் பேருந்து நிலையம் கேட்கிறார்கள். ஆனால் இதைச் செய்து கொடுக்கவில்லை என்றால் நீங்கள் என்ன அமைச்சர்?
மக்கள் முதலில் திருந்த வேண்டும்
மக்கள் முதலில் திருந்த வேண்டும். மக்கள் திருந்தினால் தான் இந்த நாடு மாறும். யாராக இருந்தாலும் நூறு, பீரு, சோறு என்று கொடுத்தால் அவர்கள் பின்னால் செல்கிறீர்கள் ஏன்?.
நமது சொந்த காலில் நிற்பதற்கு நமக்கு தெரியாதா?. அவர்கள் கொடுக்கும் ரூ. 100, 500, 1000 -ஐ வைத்து எத்தனை நாளைக்கு குடும்பம் நடத்த முடியும்?.
ஐந்து வருடத்தை நீங்கள் இழக்கின்றீர்கள். ஐந்தாண்டு காலம் அந்த 500 ரூபாய்க்கு நீங்கள் அடிமையாக இருக்கிறீர்கள். யோசிக்க வேண்டும்.
மக்கள் என்றால் இன்றைக்கு சும்மா இல்லை. எத்தனையோ ஜீவன்கள் பூமியில் இருந்தாலும் ஆறறிவு கொண்ட ஜீவன்கள் மனிதன்தான்.
அப்படி, ஆறறிவு கொண்டு நாம் யோசிக்க வேண்டும். மக்களுக்கு யார் நல்லது செய்வார்கள் என்று சிந்தித்து வரும் 2026-ல் வாய்ப்புத் தர வேண்டும்.
ஏரிப் புறம்போக்கில் வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். வசதி இல்லாதவர்கள் வேறு என்ன செய்ய முடியும்?. அவர்களை அப்புறப்படுத்தினீர்கள் ஏன்?
அவர்களுக்கு ஒரு நல்ல அப்பார்ட்மென்ட் கட்டிக் கொடுத்துவிட்டு ஏன் அவர்களை அப்புறப்படுத்தக் கூடாது?. நீர்நிலைப் புறம்போக்கு என்று தெரிந்து அவர்களுக்கு மின்சார இணைப்பு வழங்கியது யார்?. இதையெல்லாம் யார் செய்தது?. இருக்கின்ற மின்சாரத்தையும் அனைத்து விட்டார்களாம்.
அமைச்சர் ரகுபதி
இதையெல்லாம் பார்த்தால் எங்களுக்கு பயம் இல்லை. விஜயகாந்தின் தைரியத்துடன் 33 ஆண்டுகள் வாழ்ந்து வந்தேன். நீ கரண்ட் கட் பண்ணு, ரோடு கட் பண்ண மரத்தை வெட்டி போடு என்ன வேண்டுமானாலும் செய். ஆனால், எங்கள் பயணம் தொடரும்.
இங்கே உள்ள அமைச்சருக்கு சென்னையில் ஒரு கல்லூரி இருக்கிறது. இங்கே உள்ள அமைச்சர் பெயர் என்ன?. ரகுபதி. அவருடைய கல்லூரி சென்னையில் செங்கல்பட்டில் இருக்கிறது.
இங்கே இருந்து வந்து அங்கே கல்லூரி கட்டுகிறார். அவரது சொந்த தொகுதியில் ஏன் கட்டக்கூடாது?.
நீங்கள் உங்களது சொந்த காசிலேயே இங்கே கல்லூரி கட்டலாம். அவ்வளவு காசைக் கொள்ளை அடித்து வைத்துள்ளீர்கள்.
50 கல்லூரிகள் நீங்கள் கட்டலாம். ஏன் கட்ட மறுக்கிறீர்கள்?. அரசு பணத்தில் கட்டுங்கள் என்றுதான் மக்கள் கேட்கின்றார்கள். அதற்குக்கூட உங்களுக்கு வக்கில்லையே?.
நான் பேசுவதெல்லாம் யாருக்குப் போக வேண்டுமோ, அவர்கள் காதுக்கு கரெக்ட்டாக போய் சேரும்” என்றார்.