
இசையமைப்பாளர் இளையராஜா தனது இசை பயணத்தில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இளையராஜாவின் 50 ஆண்டு கால இசைப் பயணத்தை கவுரவிக்கும் விதமாகவும், லண்டனில் அவர் அரங்கேற்றிய சிம்பொனி இசையைப் பாராட்டும் விதமாகவும் இவ்விழா அமைகிறது.
“உயிரே, உறவே, தமிழே வணக்கம்!” என்று தொடங்கி, அரங்கில் இருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களின் மனதை ஈர்த்தார், நடிகர் கமல்ஹாசன்.
அதன் பின்னர் கமல்ஹாசன் பேசியதாவது “50 ஆண்டுகளின் இசைப் பயணத்தை ஒரு வாக்கியமாகச் சொல்ல முடியாது. ஆனால் இன்றைய விழாவில் அந்த பயணத்தின் ஒவ்வொரு தருணத்தையும் நினைவூட்டும் விதமாக நான் ஒரு சிறப்பு பாடலை எழுதினேன்” என்றார்.
பின்னர் அவர் அரங்கிற்கு அர்ப்பணித்த சிறப்பு பாடல், நன்றியின் மொழியாக மாறி, விழாவுக்கு ஒரு இனிய உயரத்தை வழங்கியது.
“உடைந்த ஒரு உலகுக்கு ஒரு நன்றி,
நம்மை சேர்த்த ஒரு இயல்புக்கு ஒரு நன்றி,
மாறாத ரசிகன் சொல்லும் நன்றி,
மனம் கொண்ட உயிர் சொல்லும் நன்றி, நன்றி…”
இந்த பாடலில் இசையின் சக்தி, வாழ்வின் இனிமை, தமிழின் பெருமை இணைந்தன. கமல்ஹாசன் மனதின் ஆழ உணர்வுகளை வெளிப்படுத்தி, இசை வாழ்வின் உயிராக இருக்க வேண்டும் என்றும், தமிழின் பெருமையை உணர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த விழா, இசை மட்டும் அல்ல, நன்றி, தமிழ் பண்பாடு, ரசிகர்களின் அன்பு ஒன்றாக கலந்த ஓர் அனுபவமாக அமைந்தது. இளையராஜாவின் 50 ஆண்டுக்கால இசைப் பயணம், அவரது இசை மூலமாக தமிழ் மக்களுக்கு சொந்தமானது என்பதை நினைவூட்டியது. கமல்ஹாசன் உரையும், சிறப்பு பாடலும் அந்த விழாவுக்கு உயிர் அளித்து, இசைக்கும் தமிழுக்கும் வாழ்வு கொடுத்தது.“உயிரே வாழ், இசையே வாழ், தமிழே வாழ்!” என்று இறுதியில் அவர் கூறிய வார்த்தைகள், அரங்கில் இருந்த ஒவ்வொருவரின் மனதை நெகிழச் செய்தது.