
கோவை சுகுணாபுரம் – நரசிம்மநாயக்கன்பாளையம் வரை மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதிலேயே பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வரும் நிலையில், மறுபக்கம் கோவை – சத்தியமங்கலம் பசுமை வழிச்சாலை, கிழக்கு புறவழிச்சாலை திட்டங்களை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றன.
பாலத்துறை பைபாஸ் அருகே தொடங்கி பல்லடம், சூலூர், அன்னூர், மத்தம்பாளையம் பகுதிகளை இணைக்கும் வகையில் கிழக்கு புறவழிச்சாலை திட்டம் அமைக்க திட்டமிட்டு, நில அளவீட்டுப் பணிகளை தொடங்கிவிட்டனர்.
இதன் காரணமாக சுமார் 1,400 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய விவசாயிகள், “மொத்தம் 81 கி.மீ நீளத்தில் கிழக்கு புறவழிச்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளனர். இந்தப் பாதை முழுவதும் பசுமை நிலங்களை வெட்டிச் செல்கிறது. இந்தச் சாலை எந்த விதத்திலும் பொதுமக்களுக்குப் பயனில்லை.
ஏற்கெனவே திருச்சி, மதுரை, சேலம், சென்னை, அவிநாசி ஆகிய இடங்களில் இருந்து வரும் மக்கள் காரணம்பேட்டை – கருமத்தம்பட்டி – அன்னூர் வழித்தடத்தைப் பயன்படுத்துகின்றனர்.
அவர்களுக்கு கோவை நகருக்குள் செல்ல வேண்டிய அவசியமே இல்லை. எனவே புதிய புறவழிச் சாலை தேவையற்றது.

இந்தத் திட்டம் உழவர்களின் நிலத்தை அழித்து, சில பெரிய முதலாளிகளுக்கும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும் மட்டும் நன்மை தருகிறது.
பொதுமக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. அரசு இத்திட்டத்தைக் கைவிட வேண்டும். இல்லையென்றால் எங்களின் போராட்டம் தீவிரமடையும்.” என்றனர்.