
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மக்கள் பிரசாரத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று திருச்சியில் தொடங்கினார். திருச்சி மரக்கடை பகுதியில் தொண்டர்கள், ரசிகர்கள் முன்னிலையில் தனது பரப்புரையை தவெக தலைவர் விஜய் தொடங்கினார்.
”ஜனநாயக போருக்கு தயாராவதற்கு முன்பு மக்களை பார்க்க வந்துள்ளேன். அறிஞர் அண்ணா முதலில் போட்டியிட நினைத்ததும் முதன்முதலில் திருச்சியில் தான் மாநாட்டை நடத்தினார். நமது கொள்கை தலைவர் பெரியார் வாழ்ந்த இடம் திருச்சி தான். திருச்சியில் இருந்து தொடங்கினால் திருப்புமுனையாக அமையும்” என்று பேசினார். தொடர்ந்து பேசிய விஜய்யின் குரல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மைக்கில் அவரது வார்த்தைகள் தொண்டர்களுக்கு கேட்கவில்லை.
பின்னர் தொடர்ந்து ஆவேசமாக தொண்டர்களை பார்த்து பேசிய விஜய், “வரப்போகும் தேர்தலில் திமுக-வுக்கு ஓட்டு போடுவீங்களா? அரசு உதவியை தந்து விட்டு கொச்சைப்படுத்தி பேசுகிறார்கள்…. மகளிர் உதவி தொகை எல்லோருக்கும் கிடைக்கவில்லை.
நீட் தேர்வு, கல்விக் கடனை திமுக ரத்து செய்யவில்லை, ஆசிரியர்களுக்கான நிரந்தர பணி நியமனம் , மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு போன்ற பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு செய்தீர்களா? வேலைவாய்ப்பு கொடுப்போம் என்றார்கள் கொடுத்தார்களா? இவ்வாறு செய்வதாக கூறிவிட்டு செய்யாதது நம்பிக்கை மோசடி” என்று கூறியிருக்கிறார் விஜய். மதுரை மாநாட்டின் போது முதலமைச்சரை அங்கிள் என அழைத்தவர், இந்த முறை மைடியர் சி.எம் சார் என்று அழைத்திருக்கிறார்.
திருச்சிக்கு உட்பட்ட 9 தொகுதிகளில் எந்தெந்த விஷயங்கள் கிடப்பில் இருக்கிறது என்பதை விஜய் பட்டியலிட்டு இருக்கிறார். “இனியும் மக்கள் திமுக-வை நம்ப மாட்டார்கள். தவெக ஆட்சிக்கு வந்தால் கல்வி, ரேஷன், சாலை வசதி, மின்சாரம், சுகாதாரம் போன்ற இந்த மிக முக்கியமான விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து சிறப்பாக செய்வோம். சட்ட ஒழுங்கு மற்றும் பெண்களின் பாதுகாப்பு சிறப்பாக இருக்கும்” என்று விஜய் இந்த பரப்பரையில் பேசியிருக்கிறார்.

“வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக-வுக்கா உங்கள் ஓட்டு? மகளிர் விடியல் பயணம் என்று அறிவித்துவிட்டு அதில் பயணிக்கும் பெண்களை அவமானப்படுத்துகிறார்கள். பெண்கள் பாதுகாப்பில் எந்த சமரசமும் இல்லை. வாக்குறுதியில் கூறிய திட்டங்களை செயல்படுத்தினார்களா? சொன்னீர்களே செய்தீர்களா?” என்று ஜெயலலிதா பாணியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!