
சென்னை: “கொள்கையில்லாக் கூட்டத்தைச் சேர்த்து, கூக்குரலிட்டு, கும்மாளம் போட்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கமல்ல திமுக. நாம் கூடும்போது கொள்கைப் பட்டாளமாகக் கூடுவோம். கூட்டம் முடிந்து லட்சிய வீரர்களாகப் புறப்படுவோம்.” என திமுக முப்பெரும் விழாவை ஒட்டி தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறைகூவல் விடுத்துள்ளார்.
திமுக முப்பெரும் விழா தொடர்பாக தொண்டர்களுக்கு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: முப்பெரும் விழா என்பது நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்ளும் திருவிழா. பழைய எதிரிகள் – புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் கொள்கை உறுதிமிக்க எஃகுக் கோட்டையைத் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்று உங்களில் ஒருவனான நானும், என்னுள் கலந்திருக்கும் உடன்பிறப்புகளான நீங்களும் சூளுரைக்கும் திருநாள்.