
இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்கான தயாரிப்புகளை அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கிவிட்டனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற வாசகத்துடன் பரப்புரையைத் தொடங்கி 100 நாள்கள் கடந்துவிட்டது.
இரண்டு குழுவாகப் பிரிந்திருக்கும் பா.ம.க-வின் அன்புமணி ‘தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்’ என்ற வாசகத்துடன் பரப்புரை தொடங்கி ஒரு மாதம் கடந்துவிட்டது.
திமுக-வின் இளைஞர் அணிச் செயலாளரும், துணை முதல்வராகவும் இருக்கும் உதயநிதி ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தன் பரப்புரையைத் தொடங்கியிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயும் தன் பரப்புரை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து பரந்தூர் மக்களையும், மாணவர்களைப் பாராட்டும் நிகழ்விலும், இரண்டு மாநாடுகளில் மட்டுமே மக்களைச் சந்தித்தவர் தற்போது ஒவ்வொரு சனிக்கிழமையும் மக்களைச் சந்திப்பதாகப் பரப்புரைத் திட்டத்தை வடிவமைத்திருக்கிறார்.
அதன் அடிப்படையில் இன்று திருச்சிக்கு காலை 10:15 மணியளவில் வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்திலிருந்து நடிகர் விஜய் பரப்புரை வாகனத்தில் ஏறினார். திருச்சி விமான நிலையத்திலேயே தவெக தொண்டர்கள் குழுமியிருந்தனர்.
தவெக தலைவர் விஜய் வரும் வாகனத்தின் முன்னும் பின்னுமாக வந்துகொண்டிருக்கின்றனர். 10:35 மணியிலிருந்து 11:30 வரை மட்டுமே பரப்புரையில் பேச வேண்டும் எனக் காவல்துறை நிபந்தனை விதித்திருந்த நிலையில், தவெக தலைவர் இன்னும் கூட்டம் நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்த மரக்கடைக்கு வந்து சேரவில்லை.
தற்போதுவரை டிவிஎஸ் டோல்கேட்டைக் கடந்திருக்கும் விஜய், இன்னும் ஏறத்தாழ 3 கி.மீ கடக்க வேண்டியிருக்கிறது.

வழி நெடுகிலும் தவெக தொண்டர்கள் விஜய்யை சந்தித்து வருகின்றனர்.
அதே போல விஜய் பேசவிருக்கும் மரக்கடையிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் காத்திருக்கின்றனர். இந்தக் கூட்டத்தில் இதுவரை ஒருவர் மயக்கமடைந்த நிலையில், காவல்துறையினர் தொண்டர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர்.
இந்தப் பரப்புரையால் திருச்சியின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.