
கலவரம் நடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி இன்று (செப்டம்பர் 13) மணிப்பூர் செல்கிறார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் குக்கி, மெய்தி இனக்குழுவினர் இடையே ஏற்பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது.
`கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்துக்கு பிரதமர் மோடி செல்லவில்லை’ என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி இன்று மணிப்பூர் செல்கிறார்.
கலவரம் நடந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மணிப்பூர் செல்லும் மோடி அங்கு 7 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
தலைநகர் இம்பாலில் அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டு பல்துறை அங்காடியையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கிறார்.
மணிப்பூரில் குக்கி, மெய்தி இனக்குழுவினர் இடையே ஏற்பட்ட கலவரம், வன்முறைக்குப் பிறகு பிரதமரின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மிசோரம், அசாம், மேற்கு வங்கம் மற்றும் பீகார் மாநிலங்களுக்குச் செல்லும் பிரதமர் மோடி அம்மாநிலங்களில் ரூ.71,850 கோடி மதிப்பு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்க இருக்கிறார்.
இன்று முதல் (செப்.13) 15ஆம் தேதி வரை இம்மாநிலங்களில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
மணிப்பூர் மாநிலத்துக்கு பிரதமர் செல்வதை வரவேற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.
குஜராத் மாநிலம் ஜுனாகாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மணிப்பூர் மாநிலத்தில் நிலவும் பிரச்னை நீண்டகாலமாக தொடர்வதாக சுட்டிக்காட்டினார்.
இப்போது பிரதமர் அங்கு செல்வது நல்ல விஷயம்தான் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.