• September 13, 2025
  • NewsEditor
  • 0

Doctor Vikatan: எனக்குத் திருமணமாகி ஒரு வருடமாகிறது. கடந்த சில மாதங்களாக தாம்பத்திய உறவின் போது கடுமையான தலைவலியை உணர்கிறேன்.  சிறிது நேரத்தில் அது சரியாகிறது என்றாலும், இந்த வலியை நினைத்தால் தாம்பத்திய உறவே பயத்தை ஏற்படுத்துகிறது. இத்தகைய தலைவலிக்கு என்ன காரணம், தீர்வுகள் உண்டா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

நீங்கள் குறிப்பிடும் இந்தத் தலைவலி எல்லோருக்கும் வருவதில்லை. அதே சமயம், நீங்கள் பயப்படுகிற அளவுக்கு பிரச்னைக்குரிய ஒன்றும் இல்லை.

இந்த வகை தலைவலியானது, சிலருக்கு தாம்பத்திய உறவுக்கு முன்பும் வரலாம், சிலருக்கு தாம்பத்திய உறவுக்குப் பிறகும் வரலாம். இன்னும் சிலருக்கு உறவின் போதான உச்சக்கட்டத்தின் போதும் வரலாம்.

  இதற்கு ‘ஆர்கஸம் ஹெட்டேக்’ (Orgasm headache) என இன்னொரு பெயரும் உண்டு.  இந்தத் தலைவலி, சில நிமிடங்கள் தொடங்கி, சில மணி நேரம் வரை நீடிக்கலாம்.

தாம்பத்திய உறவின் போது கழுத்து மற்றும் தலைப்பகுதியைச் சுற்றியுள்ள தசைகள் வழக்கத்தைவிட அதிக டென்ஷனுக்கு உள்ளாவதுதான் இந்த வகை தலைவலிக்கு பிரதான காரணம். 

தாம்பத்திய உறவின் போது இயல்பாகவே ரத்த அழுத்தம் திடீரென அதிகரிக்கலாம். அதுவும் தலைவலியை ஏற்படுத்தலாம். உங்களுக்கு ஏற்கெனவே மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி பிரச்னை உள்ளதா என்று தெரியவில்லை. ஒற்றைத் தலைவலி உள்ளவர்களுக்கும் தாம்பத்திய உறவின்போது,  தலைவலி தூண்டப்படலாம்.

உறவுக்கு முன்பும் பிறகும் நிறைய தண்ணீர் குடியுங்கள்.

உறவின் நடுவில் தாங்க முடியாத தலைவலி ஏற்பட்டால், உடனடியாக தாம்பத்திய உறவை நிறுத்த வேண்டும். உறவை நிறுத்தியதும் தலைவலி குறையும் வாய்ப்புகள் அதிகம். அடிக்கடி இப்படி தலைவலி வருகிறது என்றால் மருத்துவ ஆலோசனை பெறவும். 

மருத்துவர் பரிந்துரைக்கும் வலி நிவாரணிகளை உறவுக்கு முன்பே எடுத்துக்கொள்ளலாம். தாம்பத்திய உறவு என்பது கிட்டத்தட்ட உடற்பயிற்சி போன்றதுதான் என்பதால், அந்த நேரத்தில்  உடலில் நீர் வறட்சி ஏற்படும். அதன் காரணமாகவும் தலைவலி வரும். எனவே,  உறவுக்கு முன்பும் பிறகும் நிறைய தண்ணீர் குடியுங்கள். 

இவற்றை எல்லாம் கடந்து, தலைவலியோடு வாந்தி, பார்வை மங்குதல் போன்ற அறிகுறிகளும் சேர்ந்துகொண்டால், உடனே மருத்துவரை அணுகுவதுதான் சரியானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *