
விழுப்புரம்: திண்டிவனத்தில் வன்னியர் சங்க தலைமை அலுவலகத்துக்கு உரிமை கோரி ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆதரவாளர்களிடையே நேற்று மோதல் ஏற்பட்டது. மேலும் அலுவலகத்துக்கு பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் – மயிலம் சாலையில் உள்ள வன்னியர் சங்கம் தலைமை அலுவலகத்தில், இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 தியாகிகளுக்கு, கடந்த 38 ஆண்டுகளாக செப்.17-ம் தேதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் மரியாதை செலுத்துவது வழக்கம்.
மோதல் போக்கு தீவிரம்: தற்போது ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே ஏற்பட்டுள்ள மோதலால், பாமக தொண்டர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து, ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றம்சாட்டி விமர்சிக்கின்றனர். இதற்கிடையே, பாமகவில் இருந்து அன்புமணியை நீக்கிவிட்டதாக ராமதாஸ் நேற்று முன்தினம் அறிவித்துள்ள நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு மேலும் தீவிரமடைந்துள்ளது.