• September 12, 2025
  • NewsEditor
  • 0

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்து அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்து அல்ல – ஆசிரியர்)

– ராஜசங்கீதன்

கடந்த 15-20 ஆண்டுகளில் பெரும் மக்கள்திரள் போராட்டங்கள் உலகெங்கிலும் நடந்திருக்கின்றன. அரபு புரட்சி என குறிப்பிடப்படும் போராட்டங்கள் தொடங்கி, Black Lives Matter போராட்டங்கள் வரை. நம்மூரில் கூட ஜல்லிக்கட்டு ஆதரவு உள்ளிட்ட போராட்டங்கள் எல்லாம் நடந்திருக்கின்றன.

ஒற்றை கோரிக்கை சார்ந்தோ அல்லது Austerity Measures எனப்படும் நவதாராளவாத பொருளாதார நடவடிக்கைகளை எதிர்த்தோதான் பெரும்பாலான இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

மிக சமீபமாக வங்கதேசம், இலங்கை போன்ற நம் அண்டை நாடுகளில் இத்தகைய போராட்டங்கள் நடந்திருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக தற்போது நேபாளத்திலும் போராட்டம் வெடித்திருக்கிறது.

புரட்சி என்பது…

லத்தீன் அமெரிக்க நாடுகளில் நடத்தப்படும் போராட்டங்களை போலன்றி, ஆசிய சமூகப் போராட்டங்களுக்குள் பல பிரத்யேகமான ஆசியத்தன்மைகள் வினையாற்றுவதுண்டு. அவற்றின் விளைவாக இத்தகைய போராட்டங்கள் நீர்த்து போக வைக்கப்பட்டு, திசைதிருப்பப்படுவது எளிதாகி விடுகிறது.

புரட்சி செய்ய வேண்டிய இடதுசாரிய கட்சிகள் ஏன் பழைய சமூகத்தை புரட்டி போடாமல் அதற்குள்ளேயே அடைக்கலம் தேடிக் கொண்டன என்பதுதான் ஆசிய சமூகச் சூழலில் அனைவருக்கும் தெரிந்த அப்பட்டமான ரகசியமாக இருக்கிறது.

நேபாள போராட்டம்

லட்சக்கணக்கான மக்கள் திரளும் இப்போராட்டங்களை ஏன் புரட்சி என்கிற இடத்தை அடைவதில்லை?

புரட்சி என்பது அரசியல்பொருளாதார அமைப்பையும் சமூக அமைப்பையும் அடியோடு புரட்டி போடக் கூடிய கிளர்ச்சி ஆகும். மக்களின் கோபத்தை மார்க்சியத்தின் வழி நடத்தி, ஏற்கனவே இருக்கும் பழைய சமூக அதிகாரங்களை உடைத்து, புரட்டி போட்டு, அனைவருக்குமான சமத்துவத்தை அமைப்புப்பூர்வமாக நிறுவும் புதிய சமூக முறையை உருவாக்குவதுதான் புரட்சி ஆகும்.

இதில் சுவாரஸ்யம் ஒன்று இருக்கிறது.

ஆதிக்கம் செலுத்தும் சமூகங்கள்

பிற எந்த நாடுகளிலும் பழைய சமூக முறையை அகற்றுவதற்கு இருக்கும் தேவையைக் காட்டிலும் ஆசிய சமூகங்களில்தான் இருக்கும் தேவைதான் மிக அதிகம். ஏனெனில் சாதி, மதம், இனம், மொழி, கடவுள் போன்ற பல நுட்பங்கள் ஆதிக்கம் செலுத்தும் சமூகங்கள்தான் ஆசிய நாடுகளில் அதிகம்.

எனவே பிற நாடுகளை காட்டிலும் ஆசிய நாடுகளில்தான் இடதுசாரிய புரட்சிகளின் தேவையும் அதிகம்.

அத்தகைய புரட்சிகளுக்கான சூழலை மக்கள் கையளிக்கும்போது, அது தவறவிடப்படுவதுதான் ஆசிய சமூகங்களுக்கு நேரும் துயரமாக இருக்கிறது.

ஜனாதிபதி மாளிகை | இலங்கை போராட்டம்

இலங்கையில் பொருளாதார சிக்கலால் ஏற்பட்ட மக்கள் எழுச்சியை பயன்படுத்தி, இடதுசாரி கட்சியாக அறியப்படுகிற ஜெவிபி கட்சி ஆட்சிக்கு வந்தது. ஆனால் இலங்கை அரசியல் சாசனத்தின் 9ம் பிரிவு, பெளத்த மதத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் குறித்து அக்கட்சியின் முகமாகவும் இன்றைய இலங்கையின் அதிபராகவும் இருக்கும் அனுரா திசநாயகேவுக்கு பிரச்சினை இல்லை. சமீபத்திய சுதந்திர தின உரையில் கூட, பெளத்த மதத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல் சாசனம் அமலுக்கு வந்த 1972ம் ஆண்டைத்தான், அரசியல் இறையாண்மை பெற்ற ஆண்டாக விதந்தோதி பேசி இருக்கிறார் அவர். பெளத்த பேரினவாதம் பற்றி இலங்கை இடதுசாரிய கட்சிக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

நேபாள மாவோயிச புரட்சி

இதே வழியில்தான் நேபாளத்தில் நடந்த மாவோயிச புரட்சியும் நகர்ந்தது.

1996ம் ஆண்டு நேபாள முடியாட்சிக்கு எதிராக தொடங்கப்பட்ட மாவோயிச புரட்சிக்கான இலக்குகளாக முடியாட்சி அகற்றம், நிலச்சீர்திருத்தம், விளிம்புநிலை மக்களுக்கான அதிகாரப்பகிர்வு போன்றவை இருந்தன. 2004ம் ஆண்டில் பிரசண்டா தலைமையிலான நடவடிக்கை வெற்றி பெறும் தருணத்தில், அண்டை நாட்டில் புரட்சி ஏற்படுவதை தடுக்கும் வேலையை இந்தியா முன்னெடுத்தது. ஜனநாயகக் குடியரசை உருவாக்கும் முயற்சி என்கிற பெயரில் சிபிஐ(எம்)மின் சீதாராம் யெச்சூரி மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதியில் வெற்றிகரமாக நாடாளுமன்றவாதம் நோக்கி நேபாள புரட்சி திசைதிருப்பப்பட்டது.

நேபாளம் அடிப்படையில் மிகக் கடுமையான பார்ப்பன ஆதிக்கம் கொண்ட நாடு.

நேபாளம்

நேபாளத்தில் முடியாட்சி இருந்தபோது, மனுதர்ம வழிதான் சட்டங்கள் இருந்தன. அரசனை விஷ்ணுவின் மறுபிறப்பு என முன்னிறுத்தினார்கள். அத்தகைய முடியாட்சியை எதிர்த்து வந்த கட்சிகளின் தலைமைகளும் பிராமணர்கள்தான். நாடாளுமன்றம் முன் வைத்ததும் இந்து மத பிராமணியத்தைதான்.

நேபாள சமூகத்தில் பகுன் எனப்படும் பார்ப்பனர்களும் செத்ரி எனப்படும் ஷத்திரியர்களும்தான் ஆளும்வர்க்கம். அரசு அதிகாரம் தொடங்கி, நிறுவன, சமூக அதிகாரங்களின் தலைமைகள் வரை அந்த வர்க்கம்தான் நிரம்பியிருக்கிறது.

நேபாளம், குடியரசாக ஆக்கப்பட்டதை புரட்சிகர நடவடிக்கையாக பார்க்கக் கூடியவர்கள், குடியரசான பிறகும் பார்ப்பன-ஷெத்ரி ஆதிக்கம் மாறவில்லை என்கிற உண்மையை தவற விடுகிறார்கள்.

நேபாளத்தில் பிரதான மூன்று கட்சிகள் மாவோயிஸ்ட் கட்சி, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மற்றும் நேபாள காங்கிரஸ்.

முடியாட்சிக்கு எதிராக புரட்சியை வழிநடத்திய பிரசண்டாவும் பிராமணர்தான். புரட்சிக்கு பின் ஆட்சி அமைக்கும் முயற்சியில் தனக்கான ஆட்களை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில், நம்பிக்கைக்குரியவர்களாக அவர் தேர்ந்தெடுத்ததும் பார்ப்பன-ஷத்ரிய பிரிவினரைதான். நாளடைவில் அவர்களே மாவோயிச கட்சி அதிகாரங்களாக உருவெடுத்தனர். அரசமைப்பின் அங்கங்களாகவும் மாறினர். ஊழலையும் வரித்துக் கொண்டனர். நேபாள கம்யூனிஸ்ட் கட்சியிலும் இதுவே நிலை.

நேபாளம்

நடைமுறை ஆதாரமாக, மாவோயிச புரட்சிக்கு பின் பிரசண்டா ஆட்சிக்கு வந்த பிறகும் கூட நேபாளத்தில் மதேசி போராட்டம் நடந்ததை குறிப்பிடலாம். கூட்டாட்சி, விகிதாச்சார பிரதிநிதித்துவம், பிற இனங்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவற்றை வலியுறுத்தி அந்தப் போராட்டம் நடத்தப்பட்டதிலிருந்து இடதுசாரிகளின் கட்சிகளின் ஆட்சி, பழைய அமைப்புக்குள் எப்படி தன்னை மூழ்கடித்துக் கொண்டது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

பார்ப்பன-ஷெத்ரிகளுக்கு இடையிலான அதிகாரச் சண்டை

நேபாளத்தில் பகுன்கள் என குறிப்பிடப்படும் பிராமணர்கள் 11%. செத்ரிகள் என குறிப்பிடப்படும் ஷத்திரியர்கள் 16%. இவர்களின் கூட்டான 26%-தான் அங்கு ஆளும் வர்க்கம். கடைநிலையில் இருக்கும் தலித்கள் 14%. இவையன்றி ஜனஜாதிகள் என சொல்லப்படும் குருங், ஷெர்பா போன்ற சாதிகள் கிட்டத்தட்ட 35%. மதேசிகள் 20%. கிட்டத்தட்ட 70 சதவிகிதத்துக்கும் மேல் பார்ப்பனர் மற்றும் ஷத்திரியர் அல்லாதவர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கான பிரதிநிதித்துவம் கேள்வியாக தொடர்ந்து நேபாள சமூகத்தில் இருக்கிறது.

தற்போதைய நேபாள கிளர்ச்சியை ஒருங்கிணைத்ததாக சொல்லப்படும் சுடான் குருங் என்பவர் பார்ப்பன-ஷெத்ரி கூட்டுச்சாதிகள் அல்லாத குருங் எனப்படும் சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Gen Z

கடந்த ஐந்து ஆண்டுகளாக நேபாள ஆட்சியில் தொடரும் நிலையற்றதன்மை, அடிப்படையில் பார்ப்பன-ஷெத்ரிகளுக்கு இடையிலான அதிகாரச் சண்டையாக மட்டுமே மக்களால் பார்க்கப்பட்டிருக்கிறது. அமைப்புரீதியான மோதலாகவோ கருத்துமோதலாகவே அது பார்க்கப்படவில்லை. அவை அப்படி இருக்கவும் இல்லை. கூடுதலாக ஊழல்களும் பெருகி ஆட்சியில் இருப்பவர்களின் பகட்டு, இளைஞர்களுக்கு கோபத்தை மூட்டியுள்ளது.

நேபாளம்

முடியாட்சிக்கு ஆதரவான போராட்டங்கள் சில மாதங்களுக்கு முன் நடந்ததும் குறிப்பிடத்தக்கது. அடுத்த பிரதமர் என சில இளைஞர் குழுக்களால் நிறுத்தப்படும் பாலேன் ஷா ஏற்கனவே மேயராக இருந்து, அதே அரசியல் வர்க்கத்தின் ருசியைக் கொண்டவர் என்பதையும் புறம்தள்ளிவிட முடியாது.

நேபாளத்தின் மக்கள் கிளர்ச்சி, சரியான தத்துவம் மற்றும் தலைமையற்று, அரபு புரட்சியைப் போல, இன்னொரு வலதுசாரியிடம் அதிகாரத்தை ஒப்படைத்து தோற்றுக் கூடப் போகலாம். ஆனால் அந்த கிளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கும் பிரச்சினைதான் அந்த மக்களின் ஆதாரப் பிரச்சினை.

Gen Z என சொல்லிக் கொள்ளும் புதிய தலைமுறையேனும் பழைய சமூகத்தை புரட்டிப் போடும் வேலையை பார்க்குமா அல்லது அதே சமூகத்துக்குள் மூழ்கி தொலைந்து போகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *