
இம்பால்: மணிப்பூரில் குகி – மைத்தி மோதலால் வெடித்த கலவரத்தால் இடம்பெயர்ந்த மக்களை பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடுவார் என்று அம்மாநில தலைமைச் செயலாளர் புனீத் குமார் கோயல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை (செப்.13) மணிப்பூருக்கு வருகை தர உள்ளதை முன்னிட்டு அவரது பயண திட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மணிப்பூர் மாநில தலைமைச் செயலாளர் புனீத் குமார் கோயல், "நாளை மதியம் 12.30 மணி அளவில் பிரதமர் சுராசந்த்பூர் வருகிறார். சுராசந்த்பூரில் உள்ள அமைதி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், ரூ.7,300 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், கலவரத்தால் இடம்பெயர்ந்த மக்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடுகிறார். இதையடுத்து, இம்பாலுக்கு வருகை தரும் பிரதமர், காங்லா கோட்டை பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.1,200 கோடி மதிப்புள்ள உள்கட்டமைப்புத் திட்டங்களை தொடங்கிவைக்கிறார்"