
“தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து டிடிவி தினகரன் விலகிவிட்டாரே?”
“தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக, ஓ.பி.எஸ்-ஸும், டி.டி.வி.தினகரனும் அறிவித்திருப்பது, இறுதி முடிவாக இருக்காது. மக்கள் விரோத தி.மு.க-வின் நிர்வாகத் தோல்வியால், மக்கள் கடும் ஆதங்கத்தில் இருக்கிறார்கள்.
இந்தச் சூழலில், தி.மு.க-வை நேரடியாகவோ, மறைமுகமாகவோ வலிமைப்படுத்தும் எந்த நடவடிக்கையையும் யாரும் மேற்கொள்ளக் கூடாது என நினைக்கிறேன்”
“டி.டி.வி.தினகரனின் வேகத்தைப் பார்த்தால், விஜய்யுடன் சேர்ந்துவிடுவார் போலயே?”
“தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில், மூன்றாவது அணியை மக்கள் விரும்புவதில்லை என்பதுதான் வரலாறு. மேலும், விஜய்யை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துகிறது த.வெ.க. ஆக, கூட்டணிக்கு வருபவர்கள் எந்தப் பெரிய பொறுப்புகளில் இருந்திருந்தாலும், த.வெ.க-வில் விஜய்க்கு ஜூனியராகத்தான் இணைய வேண்டும். நீங்கள் சொல்லும் சீனியர் தலைவர்கள் விஜய்க்கு ஜூனியராகப் போக முடியுமா… அப்படிப் போனால், அவர்களுக்கு அங்கே முக்கியத்துவம் இருக்குமா?”
“எடப்பாடி பழனிசாமியின் விருப்பத்துக்கு ஏற்ப பா.ஜ.க செயல்படத் தொடங்கியதுதான் அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணம் என்கிறார்களே?”

“‘எடப்பாடி பழனிசாமி அவர்கள்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தலைமை வகிப்பார்’ என அறிவித்திருக்கிறார் அமித் ஷா. அப்படி இருக்கையில், எடப்பாடியைக் கலந்தாலோசிக்காமல், எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது.”
“முதலமைச்சர் வேட்பாளரை மாற்றச் சொல்லி நிர்பந்திக்கிறாரா தினகரன்?”
“எடப்பாடிதான் முதலமைச்சர் வேட்பாளர் என ஏற்கெனவே அமித் ஷா அறிவித்துவிட்டாரே… அதனால், இவ்விவகாரத்தில் நான் கருத்துச் சொல்லமுடியாது. தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெறுவதி உறுதி”
“தி.மு.க ஆட்சிக்கு மக்கள் மத்தியில் எந்த எதிர்ப்பலையும் இருப்பதாகத் தெரியவில்லை.. அதில் தி.மு.க அரசை மக்களே தோற்கடிப்பார்கள் என்கிறீர்களே?”
“இளைஞர்களைச் சீரழிக்கும் இந்த மோசடி ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்டப்போகிறார்கள். தமிழகத்தில் ஜாபர் சாதிக் போன்று ஹோல்சேல் போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களும் அதனை கடைக்கோடிக்கும் கொண்டு சேர்க்கும் சிஸ்டமும் நாளுக்கு நாள் வலுவாகிக் கொண்டே வருகிறது.
அவற்றையெல்லாம் கைக்கட்டி வேடிக்கை பார்க்கும் அரசு, வி.சி.க குண்டர்களால் தாக்கப்பட்ட புரட்சித் தமிழர் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தியை பொய் வழக்கில் கைது செய்திருக்கிறது. டிஜிபி அலுவலகம் வாயிலில் ஒரு அரசியல் கட்சித் தலைவருக்குப் பாதுகாப்பில்லை எனில் சாமானிய மக்களின் நிலையென்ன? அதுபோல வாக்களித்த மக்களை வீதிக்குக் கொண்டுவந்து போராடும் நிலைக்குக் கொண்டுவந்த தி.மு.க அரசை வீட்டுக்கு அனுப்புவது உறுதி”