
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
நாய்களால் கடிக்கப்பட்டவர்கள், துரத்தப்பட்டவர்கள் , பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் நாயை நகரத்தை விட்டு துரத்துவதில் தான் கவனமாக இருப்பார்கள்.
நானும் அப்படித்தான் இருந்தேன். நாய், மாடுகள், பாம்புகள், தவளைகள் , பூனைகள் நகரத்தில் இருக்கக் கூடாது. மனிதர்கள் வாழும் இடங்களில் மற்ற உயிரினங்களால் தொல்லை தான் என்ற நினைப்பில் தான் வாழ்ந்து வந்தேன்.
ஆனால் என் வாழ்க்கையை “பசுமை விகடன்” படிப்பதற்கு முன், பின் என்ற இரு பிரிவுகளாக பிரித்து பார்க்க தொடங்கிவிட்டேன்.
பசுமை விகடனில் நம்மாழ்வார் ஐயா எழுதியதை படித்து விவசாயத்தில் நுழைந்தேன். வயலுக்கு சென்ற பின் அதுவும் இயற்கை வாழ்வியல் என்ற கிராமத்து வாழ்க்கைக்கு சென்ற பின் இன்னும் அதிகமான உயிரினங்களுடன் ஒத்து வாழும் சூழ்நிலைக்கு பழகிக் கொண்டேன்.
அதுவும் பாம்பு, எலி, கீரிப் பிள்ளை, மயில், முயல், குள்ள நரி, காட்டு பன்றி, வளர்ப்பு ஆடு மாடுகள் உட்பட பல உயிர்களுடன் பழகும் வாய்ப்பு.
இவை அனைத்தும் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்டவை.
இவை அனைத்தையும் அவர்கள் இயல்புடன் ஏற்றுக் கொண்டால் தான் விவசாயம் செய்ய முடியும்.
அதிலும் பாம்பு யாருக்கும் திகில் ஊட்டுபவை. ஆனால் அதுவே மனிதர்களை கண்டால் மிகவும் அச்சப்படும் ஒரு உயிரினம். தன் தற்காப்புக்காகவே சீறும் மற்றும் கொத்தும். இது அதன் இயல்பு.
அதனால் பாம்புகளுடன் ஒரு மானசீக ஒப்பந்தம் போட்டு கொண்டேன் ” நான் உன்னை அடிக்க மாட்டேன் நீ என்னை கடிக்காதே” இது வரைக்கும் நாங்கள் இருவரும் (பாம்புகளும், நாங்களும் ) சத்தியத்தை மீற வில்லை.
அப்படியும் சில சமயம் நம்ம பக்கத்தில் இருக்கும் மனிதருக்கு பயமாக இருந்தால் பாம்புகளை ஒரு பையிலோ, பக்கெட்டிலோ, முறத்திலோ எடுத்து கொண்டு போய் விட்டு விட்டு வந்துவிடுவேன். சக கிராமத்துக்காரர்கள் பலரும் பாம்புகளை அடிக்க வேண்டும் என்று ஆவேசம் காட்டும் போதும் நான் சொல்லும் பதில் ” நாம தான் அவங்க இடத்துக்கு வந்திருக்கோம் அவங்க நம்ம இடத்த தேடி வரல” என்பது தான்.
கிராமங்களிலும் நாட்டு நாய்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் காவலுக்கு வளர்க்கிறார்கள். அவை அந்த வீட்டிற்கு மற்ற எந்த உயிரினத்தால் வரக் கூடிய ஆபத்தையும் தடுக்கிறது. நாய் கத்தும் சத்தத்தில், அதிர்வில் பாம்புகள், கீரிகள், நரிகள், பன்றிகள் பின் வாங்கும், சிறு உயிரினங்களை பிடித்து தின்றுவிடும். சில சமயம் பக்கத்து வயலில் வளர்க்கப்படும் கோழிகளை தின்று தன் வீட்டிற்கு சண்டையும் வாங்கி தரும்.
ஆனாலும் கிராமங்களில் நாய்கள், நகரங்கள் அளவிற்கு மனிதர்களுடன் சண்டையிடுவதில்லை. ஏனென்றால் வீட்டிற்கு வீடு காண்பிக்கும் அன்பும் பராமரிப்பும் தான் காரணம்.
ஆனால் நகரத்தில் நாய்கள் சந்திக்கும் சவால்கள் மிக அதிகம். ஒவ்வொரு தெருவிற்கும் ஒரு நாய் கூட்டம். புதிதாக ஒரு குட்டி நாய் வந்தாலும் பல நாய்களிடம் கடி வாங்கி ஒரு பதட்டமான சூழலில் எதை பார்த்தாலும் பயப்படும் மனநிலையில் தான் இருக்கும். இதில் மனிதர்கள் யார் எந்த பொருள் கொண்டு வந்தாலும் தன்னை தாக்க வரும் ஆயுதமாகவே பார்த்து பயப்படும். தற்காப்புக்காக தாக்கவும் தயாராகும்.
காலம் காலமாக தெரு நாய்கள் மக்களுடன் நெருக்கமாக வாழ்ந்து வந்தாலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக நாய்க்கடி அதிகமாகி உள்ளது.
கரோனா லாக்டவுனிற்கு பின் :
நமது நகர வாழ்க்கையையே கரோனா வருவதற்கு முன் , பின் என்று இரண்டாக பிரித்து விடலாம்.
ஊரடங்கு காலத்தில் Work from home (WFH) அதிகமானதால் ஆன்லைனில் ஆர்டர் செய்து வீட்டிற்கே உணவை தருவிக்கும் ஆப்புகளும் { app } அதிகரித்தன. இதனால் உணவு வீணாவது அதிகரித்தது. அதுவும் பிரியாணி ஒரு நொடிக்கு பல ஆயிரம் பேர் ஆர்டர்கள் வருவதாக நிறுவனங்களின் விற்பனை பதிவுகள் தெரிவிக்கின்றன.
இதனால் ஒவ்வொரு தெருவிலும் உணவு குப்பை அதிகரித்தது. இதனால் உணவு எந்த இடத்தில் வீணானாலும் அதனை மீண்டும் பூமிக்குள் கொண்டு வர இயற்கை ஏற்பாடு செய்யும் . அந்த வகையில் நாய்களின் எண்ணிக்கை அதிகமானது.

ஒரு பெண் தனியாக போனால் கூட நாலு ஆண்கள் சேர்ந்து இருந்தால் தான் அந்த பெண்ணை பார்த்து விசிலடிக்கவோ கூச்சலிடவோ தைரியம் பிறக்கிறது. அது போல் தெருவில் ஒன்று இரண்டு நாய்கள் இருந்த இடத்தில் 7 / 8 நாய்க் கூட்டம் வந்தவுடன் இருப்பதில் பலகீனமானவர்களை தாக்கும் தன் இன உணர்வு மேலோங்கி சிறுவர்கள், வயோதிகர்கள், தனியாக வருபவர்களை தாக்கும் தன்மை கூடியுள்ளது.
யாரை அதிகம் தாக்குகிறது ?
அதே சமயம் நாய்களும் தங்களை வெறுப்பவர்களை, துரத்துபவர்களை, கல்லடிப்பவர்களை தான் சந்தர்ப்பம் வாய்க்கும் போது தாக்குகின்றன.
அதுவும் நாய்கள் தூங்கும் நேரத்தில் அதி வேகமாக சத்தம் எழுப்பி வண்டி ஓட்டுபவர்களை , நாய் குட்டிகளை வண்டியில் இடித்து விட்டு செல்பவர்களை அதிகமாக தாக்குகிறது, விரட்டுகிறது. இதனால் விபத்துகளும் ஏற்படுகிறது.
கழுகுகள் எண்ணிக்கை மாடுகளுக்கு போட்ட ஊசிகளால் 100% லிருந்து 4% ஆனது. மாட்டிறைச்சிகளை 45 நிமிடத்தில் செரிமானபடுத்தி கொள்ளும் திறனுடைய கழுகுகள் இல்லாததால், அதனை முழுமையாக ஜீரணிக்க திறனில்லாத நாய்களுக்கும் எலிகளுக்கும் கூடுதல் பொறுப்பு வந்ததால் சரியாக ஜீரணம் ஆகாத நாய்களுக்கு ஒருவித இயலாமையினால் கோவம் வந்து அது வெறியாக மாறி குழந்தைகளை கூட கடித்து குதறும் கோபம் அதிகமாகியுள்ளது. இது இயற்கை மனிதர்கள் மீது கொண்டுள்ள கோபமாகவே தோன்றுகிறது.
இதற்கு மனிதர்களாகிய நமது குப்பை போடும் அலட்சிய மனோபாவமே மூலக் காரணம்.
உணவை அளவோடு உண்ண வேண்டும், அதனை வீணாக்க கூடாது என்பதே அடிப்படை.

நாய்கள் கடிக்கிறது என்று அவைகளை கொன்றாலும், கருத்தடை செய்து மெதுவாக கொன்றாலும் வேறொரு உயிரினத்தை அந்த இடத்திற்கு இயற்கை அனுப்பி வைக்கும். இயற்கை தன்னை தானே புனரமைத்து கொள்ளும் ஆற்றல் பெற்றது.
சூரத் நகரில் நாயை விரட்டியவுடன் எலிகள் எண்ணிக்கை பெருகி பிளேக் நோய் முற்றியது.
இலண்டனில் நாய்களை விரட்டியவுடன் குப்பை தொட்டியை தேடி நரிகளும் ஓநாய்களும் வருகின்றனவாம்.
மனிதர்களாகிய நாம் ரிமோட் கண்ட்ரோலுக்கு பழகி பழகி ஒரு பட்டனில் நமக்கு வேண்டாம் என்று நினைப்பதை அழிக்க நினைக்கிறோம். ஆண் மாடு தேவையில்லை, பெண் நாய் தேவையில்லை, ஆண் பப்பாளி மரம் தேவையில்லை என்று மற்ற உயிரினங்கள் அனைத்துமே மனிதர்களுக்காக படைக்கப்பட்டது என்ற மன நோய் மனிதருக்கு முற்றிவிட்டது. இதனாலேயே ஊரெங்கும் ஒரு கும்பல் செயற்கை கருத்தரிப்பு மையங்களை உருவாக்கி வருகிறது, ஒரு கும்பல் பெற்ற குழந்தைகளை விற்றுக் கொண்டிருக்கிறது.
காடுகளை ஆக்கிரமித்து மனித குடியிருப்பை அதிகபடுத்திய பின் யானை ஊருக்குள் வந்துவிட்டது என்று செய்தி போடுவது, அதற்காக ஆர்ப்பாட்டம் செய்வது என்று மனிதர்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. சமீப காலத்தில் புனேவில் , வால்பாறையில் இரண்டு காணொளிகளை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. காடுகள் அருகில் வீடு கட்டிக் கொண்டு வாழ்பவர்கள் வளர்க்கும் நாய்களை சிறுத்தைகள் வேட்டையாட தொடங்கியுள்ளன. இது இயற்கையின் வெளிப்பாடு. ஒரு இனம் அதிகம் ஆனால் அதனை அழிக்க வேறொரு இனத்தை கொண்டு வந்து நிறுத்திவிடும்.
நாய்கடி தான் இந்தியாவின் தலையாய பிரச்சனையா ?
இந்தியா முழுக்க ரேபிஸ் நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 6000 விட குறைவு. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளால் இறப்பவர்களின் 1,60,000 பேர்கள்.
ஆனால் அது குறித்து எத்தனை மனுக்கள் அளித்தாலும், அது குறித்து அரசுகளோ , நீதித்துறையோ கவலைப்படுவதில்லை. ஆள் ஆளுக்கு தடுப்பு ஊசி போட்டோமே, இந்தியாவில் அனைவருக்கும் சாலையில் வண்டிகள் எப்படி ஓட்டுவது என்று பயிற்சி அளிக்கப்பட்டதா ? உலகத்திலேயே சாலை விபத்துகளில் முதல் இடம். இதற்காக மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, வெளிநாட்டுகளில் எந்த சாலை பாதுகாப்பு கருத்தரங்கிலும் தலைக்காட்ட முடியவில்லை என்று பாராளுமன்றத்திலேயே ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

செல்வாக்குள்ளவர்கள் வீட்டு பிள்ளையை ஏதோ ஒரு நாய் கடித்துவிட்டால் அதற்காக ஊருக்குள் இருக்கும் அனைத்து நாய்களுக்கும் கருத்தடை, சிறை தண்டனை என்று கேஸை எடுத்துக் கொண்டு தீர்ப்பு வழங்குகிறார்கள். இதே போல் தினம் தினம் நடக்கும் பாலியல் வன்கொடுமைக்கும் அனைத்து ஆண்களுக்கும் கருத்தடை ஆப்பரேஷன் செய்து தனிமை சிறையில் அடைத்தால் இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளுமா ??
“ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி” என்ற பழமொழியின் படி யாரும் சொந்தம் கொண்டாடாத தெரு நாய்களை கூண்டோடு பரலோகம் அனுப்பலாம் என்று ஒரு கும்பல் இப்பவே கொல்லலாம் என்றும், இன்னொரு கும்பல் கருத்தடை செஞ்சு கொஞ்சம் கொஞ்சமாக சாகடிப்போம் என்று திட்டம் போட்டு வருகிறார்கள்.
காட்டு விலங்குகளின் எண்ணிக்கை வெறும் 4% மட்டுமே. மீதி இருக்கும் 96% மனிதனின் உணவு தேவைக்காகவே வளர்க்கப்படுகின்றன. இப்படிப்பட்ட கொடூரமான உயிரினமான மனித இனத்தை கட்டுக்குள் வைக்கவே நாய்களை நமக்கு உறைக்கும் படி தெரிவிக்க குரைக்க அனுப்பியுள்ளது இயற்கை. காடுகளின் பரப்பளவு மிகவும் குறைந்து உள்ளது. இதனை குறைந்தப்ட்சம் 33% நிலப்பரப்பாக மாற்றினால் நாம் பருவ நிலை மாற்றத்தையும் மேக வெடிப்பு, திடீர் வெள்ளம் ஆகியவற்றை தவிர்க்கலாம். விலங்குகளுக்கும் நல்ல பாதுகாப்பான வாழ்விடங்கள் கிடைக்கும்.
மனிதர்களின் கொட்டத்தை அடக்க நமக்குள்ளேயே டிரம்ப், புதின், ஜி ஜின்பிங் மற்ற பல உலக அரசியல் தலைவர்கள் மூலம் போர்களை நடத்தி மக்கள் தொகையை தீவிரமாக நடவடிக்கை எடுத்து குறைத்து வருகிறது இயற்கை..
அதனால் நமது வெறி எல்லாம் தெரு நாய்கள் மீதும் அவற்றிற்கு உணவு அளிப்போர் மீதோ காட்ட வேண்டாம் என்பது தான் சிறந்த நிலைப்பாடு. உணவுகளை வீணடிப்பதை குறைப்போம்.
ஐந்தில் விளையாதது :
அனைத்து குழந்தைகளுக்கும் ஜப்பான் நாட்டில் சொல்லி தருவது போல்:
1. விலங்குகளுடன் எப்படி பழகுவது,
2. சாலையில் எப்படி நடப்பது,
3.எப்படி வண்டி ஓட்டுவது,
4.எங்கு குப்பையை எப்படி பிரித்து போடுவது என்ற பயிற்சிகளை சிறு வயதிலேயே பயிற்சி கொடுக்க ஆரம்பித்தாலே இந்தியா ஒரு பொறுப்புள்ள குடியரசாக மாறும். மற்ற உயிரினங்களை கொல்ல துணிந்தால் வெறுப்புள்ள குடியரசாக மாறிவிடுவோம்.
செப் 11- விலங்கிலிருந்து விலங்குகளுக்கு விடுதலை
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரை யானை மிதித்து கொல்லவில்லை. யானை மஸ்தில் இருந்த போது பாரதி தேங்காய் கொடுக்க சென்ற போது அந்த வெறி நிலையிலும் அவரின் அபரிமிதமான அன்பை உணர்ந்து தள்ளி மட்டுமே விட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி நடந்த ஒரு மாதத்திற்கு மேல் தான் மகாகவி தன் உடலை விட்டு நீங்கியுள்ளார்.
அதனால் அவர் விடுதலை அடைந்த நாளை நாம் அனைவரும் விலங்குளுக்கு விலங்கிலிருந்து விடுதலை அளிக்கும் தினமாக கொண்டாடி கோழிகள், ஆடுகள், மாடுகள், நாய்கள், பூனைகள், யானைகள் மற்ற அனைத்து உயிரினங்களுக்கும் மனிதர்களின் விலங்குகளிலிருந்து விடுதலை வழங்கி மனித தன்மையை நாம் அனைவரின் உள்ளிருந்து வெளியே வரச் செய்வோம்.
அன்புடனும் அக்கறையுடனும்,
சகிருட்டிஸ்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!