
நீலகிரி மாவட்டம், குன்னூர் மலைச்சரிவு பகுதி, யானைகளின் நடமாட்டம் அதிகமான பகுதியாகும். உணவு, தண்ணீர் மற்றும் இனப்பெருக்கம் போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் இந்த மலைச்சரிவு பகுதி முக்கிய பங்காற்றுகிறது.
ஆனால் வளர்ச்சியின் பெயரில் இந்த பகுதிகளில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யானைகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், குன்னூர் அருகே உள்ள கோழிக்கரை பகுதிக்கு நேற்றிரவு உணவு தேடி வந்த பெண் யானை ஒன்று அங்கிருந்த திறந்தவெளி தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளது.
வெளியே வர முடியாமல் தவித்த யானையின் பிளிறல் சத்தத்தை கேட்டு, அதிகாலை 3 மணியளவில் விழித்த உள்ளூர்பழங்குடிகள் வனத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக விரைந்து சென்ற வனக்குழுவினர் பல மணி நேரங்கள் போராடி தண்ணீர் தொட்டியை உடைத்து அந்த பெண் யானையை பத்திரமாக வனப்பகுதிக்குள் விடுவித்துள்ளனர்.
`வனத்துறையினர், யானைகள் நடமாடும் பகுதிகளில் இருக்கும் இடர்பாடுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.