உதயநிதி பேச்சுக்கு ஆர்.பி.உதயகுமார் பதில்
எடப்பாடி பழனிசாமி நூறு ஆண்டுகள் வாழ வேண்டும், அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் எங்களுக்கு வெற்றி நிச்சயம்” என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கட்சிக் கூட்டத்தில் பேசியிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமியைப் பற்றி கிண்டலாகப் பேசியிருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி 100 ஆண்டுகள் வாழ வேண்டும், அதிமுகவை வழிநடத்த அவருக்கு மட்டுமே தகுதி உள்ளது என்று கிண்டல் தொனியில் பேசியிருந்தாலும்,
‘எனக்கு பின்னால் நூறாண்டுகள் தமிழகத்தில் அதிமுக மக்களுக்கு சேவையாற்றும்’ என்ற ஜெயலலிதாவின் வாக்கிற்கு உயிர் கொடுக்கின்ற வகையிலே எடப்பாடி பழனிசாமி தன் உயிரைப் பணையம் வைத்து உழைத்துக் கொண்டிருக்கிறார்.
எடப்பாடியாரைக் குறைத்து மதிப்பிட்டவர்கள் எல்லாம் தோல்வி அடைந்திருக்கிறார்கள்.
எம்ஜிஆரின் ரசிகராக, ஜெயலலிதாவின் பக்தனாக 50 ஆண்டு காலம் பொது வாழ்வில் இந்த இயக்கத்திற்காக உழைத்த எடப்பாடி பழனிசாமிதான் இன்றைக்கு திமுகவிற்கு சிம்ம சொப்பனமாக உள்ளார்.
அந்த பயத்தை வெளிக்காட்டும் வகையில் பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மட்டம் வீக் என்பதைப் போல நடுக்கத்துடன் எடப்பாடி பழனிசாமி பற்றி உதயநிதி ஸ்டாலின் வார்த்தைகளை விட்டுள்ளார்.
எடப்பாடியாரின் ஆளுமை பற்றி உங்களுக்கு சந்தேகம் வேண்டாம், தமிழ்நாட்டு மக்களுக்கும் எந்த சந்தேகமுமில்லை, நான்கரை ஆண்டு காலம் சிறப்பாக ஆட்சி செய்து மக்கள் இதயங்களில் குடிகொண்டுள்ளார்.
கருணாநிதி பேரன், ஸ்டாலின் மகன் என்ற தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், துணை முதலமைச்சர் என்று உருவான உதயநிதி ஸ்டாலின், நன்கு யோசித்துப் பேச வேண்டும்.

கட்சித் தலைவர்கள் குறித்து நையாண்டி செய்வது அழகு அல்ல, ஸ்டாலின் மகன் என்ற தகுதியைத் தவிர வேறு என்ன தகுதி உள்ளது? சிறைக்கு சென்றீர்களா? போராட்டம் செய்தீர்களா? என்று திமுக தொண்டர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
இன்றைக்கு கள நிலவரத்தை மறைத்து உங்கள் தொண்டர்களை உற்சாகப்படுத்த எதையும் பேசலாம் என்று பேசுகிறீர்கள். உங்களைக் காட்டிலும் எங்களுக்கு நையாண்டியாக பேசத் தெரியும், எடப்பாடி பழனிசாமி நூறு ஆண்டுகள் இருப்பார், நீங்கள் விரும்பாவிட்டாலும் நிச்சயம் நடக்கும்.
வேலை சுலபம் என்று தப்புக் கணக்கு போடுகிறீர்கள் அது தப்புத் தாளமாக மாறிவிடும். 2026 இல் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார்” என்று தெரிவித்துள்ளார்.