
ரஷ்யா–உக்ரைன் போரில் சண்டையிட இந்தியர்களை வலுக்கட்டாயமாக ரஷ்ய ராணுவத்தில் சேர்த்துக் கொண்டு வருகின்றது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது.
இவ்வாறு ரஷ்ய ராணுவத்தில் சிக்கிய இந்திய இளைஞர்கள் சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
அதில் அவர்கள் பேசியிருப்பதாவது,
இங்கு நாங்கள் 9 இந்திய இளைஞர்கள் இருக்கிறோம். எங்களை மிகவும் மோசமாக நடத்துகிறார்கள். எங்களுக்கு உணவும் தண்ணீரும் சரியாக கொடுக்கப்படுவதில்லை.
எங்களை வேலைக்காக அழைத்து வந்தார்கள். ஆனால், இப்போது போருக்கு அனுப்புகின்றனர்
அவர்கள் எங்களை வேலைக்கு எடுக்கும்போது, ராணுவத்திற்காகத்தான் எடுக்கிறார்கள் என்று தெரியாது.
எங்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று மூன்று இளைஞர்கள் அந்த வீடியோவில் பேசியுள்ளனர்.
பஞ்சாப், ஹரியானா, ஜம்மு & காஷ்மீர் பகுதிகளில் உள்ள இளைஞர்களை ‘வேலைக்கு’ என்று அழைத்துச் சென்று, ரஷ்ய ராணுவத்தில் பணியாற்ற வைக்கின்றனர்.
ஆனால், அவர்களுக்கு அடிப்படைத் தேவையான உணவு, தண்ணீர் கூட சரியாக கிடைக்கவில்லை
இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று பதிலளித்துள்ளதாவது,
“ரஷ்ய ராணுவத்திற்காக சமீபத்தில் இந்தியர்களை வேலைக்கு எடுத்த அறிக்கையைப் பார்த்தோம்.
கடந்த ஓராண்டிற்கும் மேலாக, இந்த வேலைவாய்ப்புகளின் உள்ளார்ந்த அபாயங்கள் மற்றும் ஆபத்துகளைப் பல சந்தர்ப்பங்களில் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது இந்திய அரசு.
இந்தியக் குடிமக்களுக்கு அதற்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியக் குடிமக்கள் யாரும் ரஷ்ய ராணுவத்தில் சேர முன்வரும் எந்தவொரு வாய்ப்பிலிருந்தும் விலகி இருக்குமாறு, மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறோம்.
ஏனெனில், இந்த நடவடிக்கை ஆபத்துகள் நிறைந்தது.
ஏற்கெனவே சிக்கியிருக்கும் இளைஞர்களை மீட்பதற்கான நடைமுறைகள் நடந்துகொண்டிருக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.
இளைஞர்களே ஜாக்கிரதை!