
Doctor Vikatan: என் மகளுக்கு 15 வயதாகிறது. சமீபத்தில் அவளுக்கு தைராய்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக உடல் எடை அதிகரித்து வருகிறது.
அதை நினைத்து அவளால் படிப்பிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அவளது உடல் எடையைக் குறைக்க வாய்ப்பு உண்டா… எப்படிப்பட்ட பயிற்சிகள் தேவை… உணவுப்பழக்கம் எப்படி இருக்க வேண்டும்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்
பதின்ம வயதில் உடல் பருமன் கூடுகிறது என்றால், உடனே அவர்களுக்குக் கொடுக்கும் உணவின் அளவைக் குறைக்க நினைப்பதைவிட, கலோரி கணக்கீட்டில் கவனம் செலுத்துவது முக்கியம்.
அதாவது எந்தெந்த உணவுகளில் சத்துகள் அதிகம், எவற்றில் குறைவு, அவற்றின் மூலம் கிடைக்கும் கலோரிகள் எத்தனை என்று தெரிந்துகொள்ள வேண்டும்.
உங்கள் மகளுக்கு உடற்பயிற்சியைக் கட்டாயமாக்குங்கள். வாக்கிங், சைக்கிளிங், ஸ்விம்மிங் என ஏதேனும் ஓர் உடற்பயிற்சியில் அவரை தீவிரமாக ஈடுபடுத்தலாம்.
தற்காப்புக் கலைகளான கராத்தே, சிலம்பம் போன்ற பயிற்சிகளைக் கூட கற்றுத் தரலாம். ஷட்டில் காக், பேட்மின்ட்டன் போன்றவற்றை விளையாட ஊக்கப்படுத்தலாம். வாய்ப்பிருந்தால் குடும்பத்தாரும் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடலாம்.
சோறு, இட்லி, தோசை போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்து, காய்கறிகள், பழங்களின் அளவைக் கூட்டலாம்.
ஒவ்வொரு வேளை உணவிலும் காய்கறிகள், பழங்கள் கண்டிப்பாக இடம்பெற வேண்டும். டிரை ஃப்ரூட்ஸ், நட்ஸும் இடம் பெற வேண்டும்.
இப்படி உணவுப்பழக்கத்தை முறைப்படுத்திய பிறகு மாதந்தோறும் உடல் எடையை செக் செய்து கொண்டே வர வேண்டும்.
எடையில் ஏதேனும் மாற்றம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். எந்த உணவையும் வேண்டாம் என சொல்லிக் குழந்தையைக் கட்டுப்படுத்தவோ, கஷ்டப்படுத்தவோ கூடாது.
அவரவருக்குப் பிடித்த உணவுகளை குறைந்த அளவில் சாப்பிட அனுமதிப்பதுதான் சரியே தவிர, அறவே கூடாது என்று சொல்லத் தேவையில்லை.
பொதுவாக இனிப்புகள், சாக்லேட், கேக் போன்ற உணவுகளால்தான் உடல் எடை அதிகரிக்கும். அவற்றின் அளவைக் குறைத்து, வேர்க்கடலை உருண்டை, எள்ளுருண்டை போன்றவற்றைக் கொடுத்துப் பழக்கலாம்.
உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவற்றுடன், தைராய்டுக்கு மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சைகளையும் முறையாக எடுத்துக்கொண்டாலே போதுமானதாக இருக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.